அரியணையில் வீற்றிருப்பவரின் வலப்புறத்தில் ஓர் ஏட்டுச் சுருளைக் கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது. அது ஏழு முத்திரை பொறித்து மூடப்பட்டிருந்தது.
அப்போது மூப்பருள் ஒருவர் என்னைப் பார்த்து, "அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் வேருமானவர் வெற்றி பெற்றார். ஆகவே அவர் அந்த ஏழு முத்திரைகளை உடைத்து, சுருளையும் பிரித்துவிடுவார்" என்றார்.
அந்நான்கு உயிர்களும் மூப்பர்களும் சூழ, அரியணை நடுவில் செம்மறி ஒன்று நிற்கக் கண்டேன். அது பலியிடப்பட்டதுபோல் காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. மண்ணுலகெங்கும் அனுப்பப்பட்ட கடவுளின் ஏழு ஆவிகளே அக்கண்கள்.
அவர் அதை எடுத்தபோது நான்கு உயிர்களும், இருபத்து நான்கு மூப்பரும் செம்மறியின்முன் அடி பணிந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற்கலசங்களும் இருந்தன. இறை மக்களின் செபங்களே அக்கலசங்கள்.
அவர்கள் புதியதொரு பாடலைப் பாடினர்: "சுருளை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் தகுதியுள்ளவர் நீரே; ஏனெனில், நீர் பலியாக்கப்பட்டு உமது இரத்தத்தால் எல்லாக் குலத்தையும் மொழியையும் இனத்தையும் நாட்டையும் சார்ந்த மக்களைக் கடவுளுக்காக மீட்டீர்.
மேலும் நான் கண்ட காட்சியில், அரியணையையும் உயிர்களையும் மூப்பரையும் சுற்றி நின்ற வானதூதர் பலரின் குரலையும் கேட்டேன். அவர்களின் எண்ணிக்கையோ கோடானுகோடி, ஆயிரமாயிரம்.