ஆலேஃப்: ஆண்டவர் பொறாமையுள்ள கடவுள், பழிவாங்குபவர்; ஆண்டவர் பழிவாங்குபவர், வெகுண்டெழுபவர். ஆண்டவர் தம் எதிரிகளைப் பழிவாங்குகிறவர், தம் பகைவர் மீது கோபம் பாராட்டுகிறவர்.
ஆண்டவர் விரைவில் கோபம் கொள்ளார், மிகுந்த ஆற்றலுள்ளவர்; ஆண்டவர் குற்றவாளிகளை எவ்வகையிலும் தண்டிக்காமல் விடமாட்டார். பேத்: சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அவர் வழி நடக்கிறார், மேகங்கள், அவர் நடக்கும் போது எழும் புழுதிப்படலம்.
கீமேல்: கடலை அதட்டுகிறார், அதை வற்றச்செய்கிறார்; ஆறுகளையெல்லாம் உலர்ந்துபோகச் செய்கிறார். தாலேத்: பாசானும் கர்மேலும் வதங்கிப்போகின்றன, லீபானின் மலர்கள் வாடிப் போகின்றன.
ஸாயின்: அவர் கடுஞ்சினத்தை எதிர்த்துநிற்கக் கூடியவன் யார்? அவர் கோபத்தீயின் வெப்பத்தைத் தாங்குபவன் எவன்? ஹேத்: தீயைப்போல் அவர் கோபம் கொட்டுகிறது, பாறைகளும் அவர்முன் வெடிக்கின்றன.
யூதாவுக்கு ஆண்டவர் கூறுவது இதுவே: "அவர்கள் வல்லவர்களாயினும், பெருந்தொகையினராயினும் வெட்டி வீழ்த்தப்பட்டு அழிந்து போவார்கள்; உன்னை நாம் இது வரை துன்புறுத்தியிருந்தாலும், இனி மேல் உன்னைத் துன்புறுத்தமாட்டோம்.
யூதாவுக்கு இதோ, சமாதானத்தை அறிவிக்கும் நற்செய்தியைக் கொண்டு வருகிறவனின் கால்கள் மலைகளின் மேல் நடந்து வருகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு, உன் நேர்ச்சிக் கடன்களை நிறைவேற்று; ஏனெனில் பெலியால் உன் நடுவில் இனி வரவே மாட்டான், அவன் முற்றிலும் அழிந்து போனான்.