"நீர் கடவுளின் மகனானால் கீழே குதியும்; ஏனெனில், ' தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார், உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என எழுதியுள்ளது" என்று சொல்ல,
அப்பொழுது இயேசு அதனை நோக்கி, "போ அப்பாலே, சாத்தானே, ஏனெனில், ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரை மட்டுமே ஆராதிப்பாயாக ' என எழுதியிருக்கின்றது" என்றார்.
கலிலேயாக் கடலோரமாய் இயேசு நடந்து செல்லுகையில், இராயப்பர் என்னும் சீமோனும், அவர் சகோதரர் பெலவேந்திரருமாகிய இரு சகோதரரைக் கண்டார். அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தனர். ஏனெனில், அவர்கள் மீன் பிடிப்போர்.
அங்கிருந்து அப்பால் சென்று, செபெதேயுவின் மகன் யாகப்பரும், அவர் சகோதரர் அருளப்பருமாகிய வேறு இரு சகோதரர், தம் தந்தை செபெதேயுவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களை அழைத்தார்.
அவர் கலிலேயா எங்கும் சுற்றி, அவர்களுடைய செபக்கூடங்களில் போதித்து, விண்ணரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து, மக்களிடையே எல்லா நோயையும் பிணியையும் குணமாக்கிவந்தார்.
அவரைப்பற்றிய பேச்சு சீரியாநாடு முழுவதும் பரவியது. பல்வேறு நோய் நோக்காட்டினால் வருந்தும் பிணியாளர் அனைவரையும், பேய்பிடித்தோரையும் பைத்தியக்காரரையும் திமிர்வாதக்காரரையும் அவரிடம் கொண்டுவந்தனர். அவர் அவர்களைக் குணப்படுத்தினார்.