வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், ஒருவனை மதத்தில் சேர்க்க நாடும் கடலும் சுற்றி அலைகிறீர்கள். அவன் சேர்ந்தபின் உங்களைவிட இரு மடங்கு அவனை நரகத்துக்கு உரியவனாக்குகிறீர்கள்.
குருட்டு வழிகாட்டிகளே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆலயத்தின்மீது ஒருவன் ஆணையிட்டால் அது ஒன்றுமில்லை; ஆனால், ஆலயத்தின் பொன்மீது ஆணையிட்டால் அவன் கடமைப்பட்டவன் என்கிறீர்களே.
"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் புதினா, சதகுப்பி, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பகுதி செலுத்துகிறீர்கள். ஆனால், திருச்சட்டத்தில் முக்கிய படிப்பினைகளான நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்கள். இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; அவற்றையும் விடலாகாது.
"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். ஆனால், உள்ளே கொள்ளையும் துர் இச்சையும் நிறைந்துள்ளன.
எனவே, இதோ! நான் இறைவாக்கினர்களையும் ஞானிகளையும் மறைநூல் அறிஞர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். அவர்களில் சிலரைக் கொல்வீர்கள், சிலுவையில் அறைவீர்கள்; சிலரை உங்கள் செபக்கூடங்களில் சாட்டையால் அடிப்பீர்கள்; ஊர் ஊராய் விரட்டியடிப்பீர்கள்.
இவ்வாறு குற்றமற்ற ஆபேலுடைய இரத்தம்முதல், ஆலயத்திற்கும் பீடத்திற்கும் இடையே நீங்கள் கொன்றவரும், பரக்கியாவின் மகனுமான சக்கரியாசின் இரத்தம்வரை சிந்திய மாசற்ற இரத்தத்தின் பழி எல்லாம் உங்கள்மேல் வந்துவிழும்.
"யெருசலேமே, இறைவாக்கினர்களைக் கொன்று உன்னிடம் அனுப்பப்பட்டோரையும் கல்லால் எறியும் யெருசலேமே! கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் ஒன்றுசேர்ப்பதுபோல நானும் உன் மக்களை ஒன்றுசேர்க்க எத்தனையோ முறை விரும்பினேன். நீயோ உடன்படவில்லை.