சீமோன் இராயப்பரும் வேறொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். இந்தச் சீடர் தலைமைக்குருவுக்கு அறிமுகமானவராயிருந்ததால், இயேசுவோடு அப்பெரியகுருவின் வீட்டுமுற்றத்தில் நுழைந்தார்.
இராயப்பரோ வெளியில் வாயிலருகே நின்றுகொண்டிருந்தார். தலைமைக்குருவுக்கு அறிமுகமாயிருந்த சீடர் வெளியே சென்று வாயில்காப்பவளிடம் சொல்லி, இராயப்பரை உள்ளே அழைத்துவந்தார்.
அப்போது குளிராயிருந்ததால், ஊழியரும் காவலரும் கரிநெருப்பு மூட்டிச் சுற்றிநின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தனர். இராயப்பரும் அவர்களோடு நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.
இயேசு மறுமொழியாக, "நான் உலகிற்கு வெளிப்படையாகப் பேசினேன்; செபக்கூடங்களிலும், யூதர் அனைவரும் கூடிவருகிற கோயிலிலும் எப்பொழுதும் போதித்தேன்: மறைவாகப் பேசியது ஒன்றுமில்லை.
என்னை ஏன் வினவுகிறீர் ? அவர்களுக்கு என்ன சொன்னேன் என்று நான் சொன்னதைக் கேட்டவர்களிடம் விசாரித்துப்பாரும்; நான் கூறியது அவர்களுக்குத் தெரியுமே" என்றார்.
சீமோன் இராயப்பர் அங்கு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரைப் பார்த்து, "நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவனன்றோ ?" என்று கேட்டார்கள். அவர், "நான் அல்லேன்" என்று மறுத்தார்.
தலைமைக் குருக்களின் ஊழியருள் ஒருவன் இராயப்பரால் காது அறுபட்டவனுக்கு உறவினன்; அவன் இராயப்பரிடம், "தோட்டத்தில் நான் உன்னை அந்த ஆளோடு காணவில்லையா ?" என்று கேட்டான்.
அதன்பின் இயேசுவைக் கைப்பாசிடமிருந்து பிலாத்துவின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்பதற்குத் தீட்டுப்படாமலிருக்க அரண்மனைக்குள் அவர்கள் நுழையவில்லை.
இயேசுவோ, "என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று; என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததாயிருந்தால், நான் யூதரிடம் கையளிக்கப்படாதபடி என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால், என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று" என்றார்.
எனவே, பிலாத்து அவரை நோக்கி, "அப்படியானால் நீ அரசன்தானா ?" என்று கேட்க, இயேசு, " ' அரசன் ' என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மைக்குச் சாட்சியம் கூறுவதே எனது பணி; இதற்காகவே பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவன் எவனும் எனது குரலுக்குச் செவிமடுக்கிறான்" என்றார்.
பாஸ்காத் திருவிழாவின்போது உங்களைப் பிரியப்படுத்த ஒருவனை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே. அதன்படி யூதரின் அரசனை நான் விடுதலைசெய்வது உங்களுக்கு விருப்பமா ?" என்று வினவினார்.