ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: "யாக்கோபைக் குறித்து மகிழ்ச்சியினால் அக்களியுங்கள்; மக்களின் தலைவர்களைக் குறித்து ஆர்ப்பரியுங்கள் குரலையுயர்த்தி அறிவியுங்கள், புகழ் பாடுங்கள்: 'ஆண்டவர் தம் மக்களை மீட்டார், இஸ்ராயேலில் எஞ்சினவர்களை மீட்டார்' என்று சொல்லுங்கள்.
இதோ, வட நாட்டினின்று நாம் அவர்களை அழைத்து வருவோம்; பூமியின் கடைகோடிகளினின்று அவர்களை ஒருமிக்கச் சேர்ப்போம்; அவர்களுள் குருடரும் முடவரும் கர்ப்பவதிகளும் பிரசவப் பெண்களும் இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் சேர்ந்து பெருங் கூட்டமாய்த் திரும்பி வருவார்கள்.
அவர்கள் அழுகையோடு திரும்பி வருவார்கள்; நாமோ இரக்கத்தோடு அவர்களை அழைத்து வருவோம்; நீரோடைகளின் அருகிலேயே அவர்களை நடக்கச் செய்வோம்; இடறாத செம்மையான நேர் வழியில் நடத்தி வருவோம்; ஏனெனில் இஸ்ராயேலுக்கு நாமே தந்தை; எப்பிராயீமோ நமக்குத் தலைப்பேறான பிள்ளை.
அவர்கள் வந்து, சீயோனின் உச்சியில் பாடிப் போற்றுவார்கள், ஆண்டவர் அவர்களுக்கு அளிக்கும் நன்மைகளாகிய கோதுமை, திராட்சை ரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், மாட்டு மந்தைகள் ஆகியவற்றை நாடிக் கூட்டமாய் ஓடி வருவார்கள்; அவர்களுடைய வாழ்க்கை நீர்வளம் மிக்க நிலம் போலிருக்கும்; இனி அவர்கள் வருந்த மாட்டார்கள்.
அப்போது கன்னிப் பெண்கள் நாட்டிய மாடிக் களிப்பார்கள்; இளைஞரும் முதியோரும் அவ்வாறே மகிழ்வார்கள்; அவர்களுடைய அழுகையை அக்களிப்பாக மாற்றுவோம்; அவர்களைத் தேற்றித் துயரத்தைப் போக்கி, அவர்களை மகிழச் செய்வோம்.
ஆண்டவர் கூறுகிறார்: "ராமாவிலே கூக்குரல் கேட்டது; பேரழுகையும் ஒப்பாரியுமாக இருந்தது; இராக்கேல் தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டு, அவை இல்லாமையால் ஆறுதல் பெற விரும்பவில்லை."
எப்பிராயீம் அழுது புலம்பியதை நாம் கேட்டோம்: 'நான் அடங்காத காளை போல் இருந்தேன், நீர் என்னைத் தண்டித்தீர், நான் தண்டனை பெற்றேன்; நீர் என்னைத் திரும்பக் கொண்டு வாரும், நானும் திரும்புவேன்; ஏனெனில் என் கடவுளாகிய ஆண்டவர் நீரே.
நான் உம்மை விட்டு விலகிய பின் மனம் வருந்தினேன்; எனக்கு நீர் அறிவுறுத்திய பின் நான் மார்பில் அறைந்து கொண்டேன்; என் வாலிப வயதின் அவமானத்தைக் கண்டு நான் வெட்கி நாணி மயங்கினேன்' என்றழுதான்.
எப்பிராயீம் நம் அருமையான மகனல்லனோ? அவன் நம்முடைய அன்புக் குழந்தையன்றோ? நாம் அவனை அச்சுறுத்தும் போதெல்லாம் அவனை நினைத்துக் கொள்ளுகிறோம். அவனை நினைத்து நம் உள்ளம் உருகுகின்றது; அவனுக்கு நாம் திண்ணமாய் இரக்கம் காட்டுவோம், என்கிறார் ஆண்டவர்.
பிரமாணிக்கமில்லாத மகளே, இன்னும் எத்துணைக் காலம் நீ இவ்வாறு தத்தளிப்பாய்? ஏனெனில் பூமியில் ஆண்டவர் புதுமையான ஒன்றைப் படைக்கிறார்: மனைவி தன் கணவனைத் தேடிச் செல்கிறாள்."
இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: "நாம் அவர்கள் முன்னைய நன்னிலைக்குத் திரும்பக் கொண்டு வரும்போது, யூதாவின் நாட்டிலும் அதன் நகரங்களிலும், 'நீதியின் இருப்பிடமே, பரிசுத்த மலையே, ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக' என்று இன்னும் மக்கள் சொல்வார்கள்.
தன் செயலுக்குத் தானே பொறுப்பாளி: "அந்நாட்களில் அவர்கள், 'தந்தையர் திராட்சைக் காய் தின்ன, பிள்ளைகளுக்குப் பல் கூசிற்றாம்' என்று இனிச் சொல்ல மாட்டார்கள்.
இது, நாம் எகிப்து நாட்டினின்று விடுவித்து, இவர்களுடைய தந்தையரைக் கைபிடித்து நடத்தி வந்த போது நாம் அவர்களோடு செய்த உடன் படிக்கையைப் போன்றிராது; நாம் அவர்களின் தலைவராய் இருந்தும் நம் உடன்படிக்கையை அவர்கள் முறித்துப் போட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
அந்நாள் வரும் போது நாம் இஸ்ராயேல் வீட்டாரோடு செய்யப்போகும் உடன்படிக்கை இதுவே: நமது திருச்சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்போம்; அவர்களுடைய இதயங்களின் மேல் அதை எழுதுவோம்; நாம் அவர்களின் கடவுளாய் இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பர், என்கிறார் ஆண்டவர்.
இனி ஒவ்வொருவனும் தன் அயலானையோ, தன் சகோதரனையோ பார்த்து, 'ஆண்டவரை அறிந்து கொள்' என்று சொல்லிக் கற்பிக்க மாட்டான்; ஏனெனில், அவர்களுள் சிறியவன் முதல் பெரியவன் வரை அனைவரும் என்னை அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் அவர்களுடைய அக்கிரமத்தை நாம் மன்னித்து விடுவோம், அவர்களுடைய பாவத்தை இனி மேல் நினைவுகூரவே மாட்டோம்."
இஸ்ராயேல் நிலைத்திருக்கும்: ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்; அவர் பகலில் ஒளி வீசக் கதிரவனையும், இரவில் ஒளி கொடுக்க நிலவின் குறிப்பிட்ட முறைமையையும் விண்மீன்களையும் தருகிறவர்; அவர் கடலைக் கொந்தளிக்கச் செய்து அலைகளை ஒலிக்கச் செய்கிறவர்- சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்: அவர் சொல்வது:
மேற்படி ஒழுங்கு முறைமை நம் முன்னிலையிலிருந்து நீங்கிப் போகுமாயின், இஸ்ராயேலின் சந்ததியும் நம் முன்னிலையில் ஒரு தனி இனமாய் என்றென்றும் இல்லாமற் போகும். என்கிறார் ஆண்டவர்."
ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: "மேலே வான்வெளி அளக்கப்படுமாயின் கீழே பூமியின் அடிப்படைகள் சோதிக்கப்படக் கூடுமாயின், நமக்கு விரோதமாய் இஸ்ராயேல் மக்கள் செய்தவற்றை முன்னிட்டு அதன் சந்ததியார் அனைவரையும் நாம் (முற்றிலும்) கைவிடுவோம், என்கிறார் ஆண்டவர்.
பிணங்களும் சாம்பலும் நிறைந்த பள்ளத்தாக்கு முழுவதும், கேதிரோன் அருவி வரையில் உள்ள நிலப்பரப்பும், கிழக்கே உள்ள குதிரை வாயிலின் மூலை வரையிலும் அதனுள் அடங்கும். ஆண்டவருக்காக அர்ச்சிக்கப்பட்ட இந்த இடம் இனி என்றும் அழியாது, இடிபடாது."