நான் அவ்வாறே எப்பிராத்துக்குப் போய், அந்தக் கச்சையைப் புதைத்த இடத்தைத் தோண்டி அதனை எடுத்தேன்; இதோ அந்தக் கச்சை ஒன்றுக்கும் பயன்படாதபடி நைந்து போயிருந்தது.
நம் சொற்களைக் கேளாமல் தங்கள் இதயத்தின் பிடிவாதப் போக்கில் நடந்து, அந்நிய தெய்வங்களைப் பின்சென்று, சேவித்து, வழிபட்டு வருகிற இந்தக் கொடிய மக்கள் ஒன்றுக்கும் உதவாத இக்கச்சையைப் போல் ஆவார்கள்.
கச்சை மனிதனின் இடையில் ஒட்டிச் சேர்ந்திருப்பது போல், இஸ்ராயேல் வீடு முழுவதையும், யூதாவின் வீடு முழுவதையும், நம்மோடு ஒன்றித்திருக்கச் செய்தோம்; அவர்கள் நமக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மகிமையாகவும் இருக்கும்படி செய்திருந்தோம்; ஆயினும் அவர்கள் நமக்குச் செவிசாய்க்கவில்லை", என்கிறார் ஆண்டவர்.
அப்போது நீ அவர்களுக்குச் சொல்: 'ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள், அர்ச்சகர்கள், இறைவாக்கினர்கள், யெருசலேமில் வாழும் எல்லாக் குடிகளும் உட்பட, இந்நாட்டு மக்களனைவரையும் நாம் போதையால் நிரப்புவோம்.
ஒருவனோடு ஒருவன் மோதி நொறுங்கச் செய்வோம்; பிள்ளைகள் தங்கள் தந்தையோடு முட்டிக் கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர். அவர்கள் மேல் நாம் இரக்கம் காட்டவோ, அவர்களைக் காப்பாற்றவோ, அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டோம்; அவர்களை அழிக்காமல் விடோம்."
ஆனால் நீங்கள் இதனைக் கேளாவிடில், உங்கள் இறுமாப்புக்காக என் உள்ளம் மறைவில் அழும்; என் கண்கள் கலங்கிக் கண்ணீர் விடும்; ஏனெனில் ஆண்டவரின் மந்தை அடிமையாய்ப் பிடிபட்டது.
உன் நண்பர்களாக உன்னிடம் வரும்படி நீ பழக்கினவர்களை உன் மேல். அதிகாரம் உள்ளவர்களாக ஏற்படுத்தும் போது நீ என்ன சொல்லுவாய்? பிரசவிக்கும் பெண்ணின் வேதனைக்கு ஒப்பான வேதனைகள் உன்னைப் பீடிக்காமல் இருக்குமோ?
இவை யாவும் எனக்கு ஏன் நேர்ந்தன?' என்று உன் உள்ளத்தில் கேட்பாயாகில் உன் மிகுதியான அக்கிரமத்தாலேயே உன் மானம் பறந்து போனது; உன் கால்கள் அவமானத்துக்கு உள்ளாயின.
எத்தியோப்பியன் தன் தோல் நிறத்தை மாற்ற இயலுமா? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்ற முடியுமா? அப்படி முடியுமானால், தீமையே செய்யப் பழகிக் கொண்ட நீங்களும் நன்மை செய்யக் கூடும்.
உன் அருவருப்பான செயல்களும் விபசாரங்களும், உன் காமக் கனைப்புகளும், பரந்த வெளியில் குன்றுகளின் மேல் நீ செய்த வெறிகொண்ட வேசித்தனங்களும் நம் பார்வைக்குத் தப்பவில்லை. யெருசலெமே, உனக்கு ஐயோ கேடு! நீ சுத்தமாக்கப்படாமல் இன்னும் எத்துணைக் காலம் இருப்பாய்?"