அப்படிச் செய்த சிலைகள் வெள்ளரித் தோட்டத்தில் பறவையோட்ட வைக்கும் பூச்சாண்டிப் பொம்மைகள்; அவை பேச ஆற்றலற்றவை அவற்றால் நடக்க முடியாது; ஆதலால் மனிதர் அவற்றைத் தூக்கிச் செல்கின்றனர்; அவற்றுக்கு அஞ்ச வேண்டாம்; அவை உங்களுக்கு நன்மையும் செய்யா; தீமையும் செய்யா."
மக்களின் மன்னரே, உமக்குப் பயப்படாதவன் யார்? ஏனெனில் அது உமது உரிமை; ஏனெனில் மக்களின் ஞானிகள் அனைவருள்ளும், அவர்களுடைய அரசுகள் அனைத்திலும் உமக்கு நிகரானவன் எவனுமே இல்லை.
தார்சீசினின்று சுத்த வெள்ளியும், ஒப்பாசினின்று பொன்னும் கொண்டுவரப் படுகின்றன; அவை சிற்பியின் வேலைப்பாடுகள்; தட்டானின் கைவேலைகள்; அவற்றை அவர்களே சிலைகளாகச் செய்தனர்; அவற்றின் உடை ஊதாவாலும் செம்பருத்தியாலும் ஆனது; அவை யாவும் தொழிலாளிகளின் வேலையேயன்றி வேறில்லை.
அவர் குரலொலி வானத்தில் வெள்ளப் பெருக்கின் இரைச்சல் போலக் கேட்கிறது; அவரே பூமியின் எல்லைகளினின்று மேகங்களை எழுப்புகின்றார்; மின்னல்களை மழைக்காக மின்னச் செய்கின்றார். தம் கிடங்குகளிலிருந்து காற்றைக் கொண்டு வருகிறார்.
யாக்கோபின் பங்காயிருப்பவர் அப்படிப்பட்டவர் அல்லவர்; ஏனெனில் அவரே யாவற்றையும் படைத்தவர்; இஸ்ராயேல் கோத்திரம் அவருடைய உரிமைச் சொத்து; சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்.
ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, இந்த முறை இந்நாட்டுக் குடிகளை வெகு தொலைவில் வீசியெறிவோம்; அவர்கள் என்னைக் கண்டுணர்கிறார்களா என அறிய அவர்களைத் துன்பப்படுத்துவோம்."
என் கூடாரம் தகர்க்கப்பட்டது; என் கயிறுகளெல்லாம் அறுந்துபோயின; என் மக்கள் என்னை விட்டகன்றார்கள்; மாண்டு போனார்கள்; என் கூடாரத்தை எடுத்து உயர்த்துவார் இல்லை; என் திரைச் சீலைகளை மறுபடியும் பொருத்துவார் இல்லை.
ஆண்டவரே, என்னைத் திருத்தியருளும்; உமது நீதிக்கேற்பத் தண்டியும்; உமது கடுங்கோபத்தோடே தண்டித்து விடாதேயும்; ஏனெனில் ஒரு வேளை நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.
உம்மை அறியாத இனத்தார் மேலும் உம் திருப்பெயரை வேண்டிக் கொள்ளாத மக்கள் மேலும் உமது கடுஞ்சினத்தைக் காட்டியருளும்; ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கி விட்டார்கள், விழுங்கி முற்றிலும் அழித்தார்கள்; அவன் குடியிருப்பையும் பாழாக்கினார்கள்.