நீ தாழ்த்தப்படுவாய்; அப்போது தரையிலிருந்து பேசுவாய்; உன் வார்த்தைகள் பூமியிலிருந்து வருவது போலக் கேட்கும்; தரையிலிருந்து உன் குரல் செத்தவனது ஆவியின் குரல் போலக் கேட்கும், மண்ணிலிருந்து உன் பேச்சு முணுமுணுக்கும்.
இவை யாவும் திடீரென ஒரு நெடியில் நிகழும்; இடிகளிலும் நில நடுக்கத்திலும் பேரிரைச்சலிலும், சூறாவளியிலும் புயல் காற்றிலும் விழுங்கும் நெருப்பழலிலும் சேனைகளின் ஆண்டவர் அதனைச் சந்தித்துத் தண்டிப்பர்.
அரியேலுக்கு எதிராகப் போரிடும் எல்லா மக்களினங்களின் கூட்டமும், அதற்கெதிராய்ப் போரிட்டுக் கோட்டையைத் தாக்கி, அதனைத் துன்புறுத்தும் அனைவரும், இரவில் கண்ட காட்சி போலும், கனவு போலும் இருப்பர்.
பசியால் வருந்தியவன் சாப்பிடுவதாய்க் கனவு கண்டு விழிக்கும் போது வயிறு வெறுமையாயிருக்கக் காண்பது போலும், தாகமுற்றவன் தண்ணீர் குடிப்பதாய் கனவு கண்டு விழிக்கும் போது களைத்துத் தாக மடங்காதவனாய் இருப்பது போலும், சீயோன் மலைக்கு விரோதமாய்ப் போர் தொடுக்கிற எல்லா மக்களினங்களின் கூட்டமும் இருக்கும்.
திகிலுற்று நில்லுங்கள், திகிலடையுங்கள்; கண்காணாது நில்லுங்கள்- குருடர் போல் ஆகுங்கள். போதை அடையுங்கள், ஆனால் இரசத்தினாலன்று; தடுமாறுங்கள், ஆனால் குடிவெறியாலன்று.
ஏனெனில் ஆண்டவர் உங்களுக்குத் தூக்க மயக்கத்தைத் தருவார்; உங்கள் கண்களை மறைத்து விடுவார், காட்சிகள் காணும் உங்களுடைய தீர்க்கதரிசிகளையும் தலைவர்களையும் மூடி மறைப்பார்.
இவையனைத்தின் காட்சியும் முத்திரையிடப்பட்ட ஒரு நூலைப் போல் உங்களுக்கு இருக்கும்; அதை எழுதப் படிக்கத் தெரிந்தவனிடத்தில் கொடுத்து, "இதை வாசி" என்றால், அவன், "அது முத்திரையிடப் பட்டிருப்பதால், என்னால் படிக்க முடியாது" என்பான்.
ஆண்டவர் கூறுகிறார்: "வாயால் இம்மக்கள் நம்மை அணுகி வருகின்றனர், உதட்டால் நம்மைப் போற்றுகின்றனர்; அவர்கள் உள்ளமோ நம்மை விட்டுத் தொலைவில் இருக்கின்றது. நம்மைப்பற்றிய அவர்களுடைய அச்சம் வெறும் மனித கற்பனை, மனப்பாடமாய்க் கற்றது தான்.
ஆதலால், இதோ இந்த மக்களுக்கு மீண்டும் வியத்தகு செயல்களைச் செய்வோம், பெரியதும் விந்தையானதுமான புதுமை செய்வோம். அவர்களுடைய ஞானிகளின் ஞானம் அழிந்துபோம், அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மங்கிப்போம்."
ஆண்டவரிடமிருந்து தங்கள் யோசனையை மறைக்கும்படி ஆழத்தில் தங்களை ஒளித்துக்கொண்டு, "நம்மைப் பார்ப்பவர் யார்? நம்மை அறிபவர் யார்?" என்று சொல்லிக்கொண்டு இருளில், திட்டங்கள் தீட்டுபவர்களுக்கு ஐயோ கேடு!
நம் கைகளின் வேலைப்பாட்டைத் தன் மக்கள் நடுவில் காணும் போது, நமது பெயரைப் பரிசுத்தமானதெனப் போற்றுவான்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தரெனப் போற்றுவர், இஸ்ராயேலின் கடவுளுக்கு அஞ்சியிருப்பர்.