ஆதலால் நான் சொன்னேன்: "நீங்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டா; ஆறாத்துயர் கொண்டு நான் அழப்போகிறேன், என் மக்களாகிய மகளின் அழிவைக் குறித்து எனக்குத் தேறுதல் சொல்ல யாரும் முயல வேண்டா."
பழங்குளத்தின் தண்ணீருக்கென்று இரண்டு மதில்களுக்கு நடுவில் ஒரு நீர்த் தேக்கம் அமைத்தீர்கள். ஆனால் படைத்தவரை நீங்கள் நோக்க மறந்தீர்கள்; முற்காலத்திலேயே அனைத்தையும் திட்டமிட்டவரைப் பார்க்கவுமில்லை.
உனக்கு இங்கே என்ன வேலை? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்? உனக்கென்று நீ இங்கே கல்லறை வெட்டியிருக்கிறாய், உயர்ந்த இடத்தில் உனக்குக் கல்லறை அமைக்கிறாய், பாறையில் உனக்கோர் இருப்பிடம் குடைந்துள்ளாயே!
சுற்றிச் சுற்றி உன்னைச் சுழற்றுவார், பரந்த வெளியில் உன்னைப் பந்தாடுவார், அங்கேயே நீ சாவாய்; உன் தலைவனுடைய வீட்டுக்கோர் அவமானமாய் இருந்தவனே, உன் அழகிய தேர்களும் அங்கேயே கிடக்கும்.
உன் உடைகளை அவனுக்கு உடுத்துவோம், உன் இடைக் கச்சையை அவனுக்குக் கட்டுவோம், உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்போம், யெருசலேமின் குடிகளுக்கும், யூதாவின் வீட்டாருக்கும் அவன் ஒரு தந்தையைப் போல் இருப்பான்.
முளையாணியாகிய அவன் மேல் அவனுடைய தந்தையின் வீட்டு மகிமையெல்லாம்- சந்ததியும் வழித் தோன்றல்களும் கிண்ணங்கள் முதல் குடங்கள் வரையுள்ள எல்லாக் கலங்களும்- மாட்டித் தொங்கும்.
அந் நாளில், உறுதியான சுவரில் அடிக்கப்பட்டிருந்த முளை பிடுங்கிக்கொள்ளும்; முளையானது முறியுண்டு கீழே விழும்; அதில் தொங்கியவை அனைத்தும் அழியும்; ஏனெனில் ஆண்டவரே இதைச் சொல்லியிருக்கிறார் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."