மொட்டை மலை மீது கொடியேற்றுங்கள், அவர்களை நோக்கி உரக்கக் கூவுங்கள்; பெருங்குடி மக்களின் வாயில்களில் நுழையும்படி அவர்களுக்குக் கையசைத்துச் சைகை காட்டுங்கள்.
போருக்கென அர்ச்சிக்கப்பட்ட நம் வீரர்களுக்கு நாமே ஆணை பிறப்பித்திருக்கிறோம்; நம்முடைய கோபத்தின் கட்டளையை நிறைவேற்றிட, வலிமையில் பெருமை கொள்ளும் நம் வீரர்களை அழைத்திருக்கிறோம்;
இதோ, மலைகளின் மேல் பேரிரைச்சல்! பெருங் கூட்டம் வருவது போல் ஆரவாரம்! இதோ, அரசுகளின் எழுச்சிக் குரல்! மக்களினங்கள் ஒன்றாகக் கூடுகின்றன! சேனைகளின் ஆண்டவர் போருக்காக, ஆள் சேர்த்துச் சேனையொன்றைத் திரட்டுகின்றார்.
தொலை நாட்டினின்று அவர்கள் வருகின்றார்கள், தொடுவானத்து எல்லையிலிருந்து வருகின்றார்கள்; ஆண்டவரும் அவரது ஆத்திரத்தின் படைக்கலங்களும் உலகத்தை முழுவதும் அழிக்கவே வருகின்றனர்.
அவர்கள் திகில் அடைவார்கள், வேதனைகளும் துயரமும் அவர்களைப் பிடித்தலைக்கும், பிள்ளை பெறும் பெண்ணைப் போல் அவர்கள் வேதனையுறுவர்; ஒருவரையொருவர் திகிலோடு உற்று நோக்குவர், அவர்களுடைய முகங்களில் தீப்பறக்கும்.
இதோ, ஆண்டவருடைய நாள் வருகின்றது. கொடுமையும் ஆத்திரமும் கடுஞ்சினமும் நிறைந்த நாள் அது; உலகத்தைப் பாழாக்கி அது வெறுமையாக்கும், அதிலிருக்கும் பாவிகளை அழித்தகற்றும்.
துரத்தப்பட்டுத் தப்பியோடும் மான் கன்று போல், சேர்ப்பாரின்றி சிதறுண்ட ஆடுகளைப் போல், அவனவன் தன் மக்களிடம் திரும்பியோடுவான் அவனவன் சொந்த நாட்டை நோக்கி ஓடுவான்,
மக்கள் இனி ஒரு போதும் அங்கே குடியேற மாட்டார்கள், எல்லாத் தலைமுறைகளுக்கும் அது குடியற்றுக் கிடக்கும்; அராபியர் தம் கூடாரத்தை அங்கு அடிக்க மாட்டார், இடையர் தம் ஆடுகளை அங்கு மடக்க மாட்டார்.
ஆனால் காட்டு மிருகங்கள் அங்கே படுத்துக் கிடக்கும், ஆந்தைகள் அவர்களுடைய வீடுகளில் அடைந்து கிடக்கும், தீக்கோழிகள் அங்கு வந்து குடி கொண்டிருக்கும், கூளிகள் அவ்விடத்தில் கூத்துகள் ஆடும்.
அவர்களின் அரண்மனைகளில் கழுதைப் புலிகள் கத்தும், இன்ப மாளிகைகளில் குள்ள நரிகள் ஊளையிடும்; அதற்குரிய காலம் நெருங்கி விட்டது; அதற்குரிய நாட்களோ தொலைவில் இல்லை.