அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல் ஒடுக்குகிறார்கள், நம் மக்களுள் எளியோரின் உரிமையைப் பறிக்கிறார்கள். கைப்பெண்களைக் கொள்ளைப் பொருள் போல பறிக்கிறார்கள், திக்கற்றவர்களை இரையாக்கிக் கொள்ளுகிறார்கள்!
தண்டனை கிடைக்கும் நாளிலே என்ன செய்வீர்கள்? தொலைவிலிருந்து அழிவு வரும் போது என்ன ஆவீர்கள்? உதவி தேடி யாரிடம் ஓடிச் செல்வீர்கள்? உங்கள் செல்வங்களை எவ்விடத்தில் வைத்துச் செல்வீர்கள்?
இறைப் பற்றில்லா இனத்திற்கெதிராய் அதை அனுப்புகிறோம், நம் ஆத்திரத்துக்கு ஆளான மக்களுக்கு விரோதமாய் அதற்கு நாம் ஆணை கொடுக்கிறோம்; அவர்களைக் கொள்ளையடித்துப் பொருட்களைப் பறித்துக் கொள்ளவும், தெருவிலிருக்கும் சேற்றைப் போல் அவர்களை மிதிக்கவும் அந்நாட்டுக்கு நாம் கட்டளையிடுகிறோம்.
ஆண்டவர் சீயோன் மலை மீதும் யெருசலேமின் மேலும் தம் வேலைகளையெல்லாம் முடித்த பிறகு அசீரியாவின் அரசனுடைய ஆணவம் நிறைந்த உள்ளத்தின் சிந்தனை மேலும், இறுமாப்பு நிறைந்த அவன் செருக்கின் மேலும் தண்டனையை வரச் செய்வார்.
ஏனெனில் அவன் இவ்வாறு சொல்லி வந்தான்: "என்னுடைய கையின் வல்லமையால் அதைச் செய்து முடித்தேன், என் ஞானத்தால் அதற்கான திட்டங்கள் தீட்டினேன்; மக்களினங்களின் எல்லைகளை அகற்றி விட்டேன், அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன், அரியணைகளில் அமர்ந்திருந்தவர்களைக் கீழே தள்ளினேன்.
குருவிக் கூட்டைப் பிரித்தெடுப்பது போல் என் கை மக்களினங்களின் செல்வங்களை எடுத்துக் கொண்டது; கைவிடப்பட்ட முட்டைகளைச் சேர்த்தெடுப்பது போல் உலக முழுவதையும் நான் சேர்த்துக்கொண்டேன்; எனக்கெதிராய் இறக்கையடிக்க யாருமில்லை, வாய் திறக்கவோ கீச்சிடவோ துணிந்தாரில்லை."
ஆதலால் ஆண்டவர்- சேனைகளின் ஆண்டவர், அவனுடைய கொழுத்த வீரர்கள் நடுவில் பாழாக்கும் நோயை அனுப்புவார்; அவனுடைய மகிமைக்குக் கீழே தணல் பற்ற வைக்கப்படும், அது நெருப்பைப் போல் எரியும்.
இஸ்ராயேலின் ஒளியானவர் நெருப்பாவார்; அதனுடைய பரிசுத்தர் தீக்கொழுந்தாய் இருப்பார்; அவனுடைய முட்களையும் முட்புதர்களையும் ஒரே நாளில் சுட்டுத் தீய்த்துச் சாம்பலாக்கி விடும்.
அவனுடைய காட்டின் மகிமையையும் வளம் நிறைந்த சோலையின் மாண்பினையும் ஆண்டவர் முற்றிலும் அழித்து விடுவார், உடலும் உயிரும் அழிக்கப்படும்; நோயாளி ஒருவன் மெலிந்து தேய்வது போல் அதுவும் அவ்வாறே ஆகி விடும்.
இஸ்ராயேலே, உன் மக்கள் கடற்கரை மணி போல் எண்ணிறந்தாராயினும், அவர்களுள் எஞ்சினோர் மிகச் சிலரே திரும்பிவருவர். அழிவு முடிவு செய்யப்பட்டு விட்டது; இதிலெல்லாம் இறைவனின் நீதி விளங்கும்.
ஆதலால் இறைவன்- சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "சீயோனில் வாழ்கின்ற எம் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியர்கள் உங்களைத் தடியினால் அடிக்கும் பொழுதும், உங்களுக்கெதிராய்த் தங்கள் கோலை உயர்த்தும் பொழுதும் நீங்கள் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.