வரவிருக்கும் கடும்பயுலில் இஸ்ராயேல் அரசன் முற்றும் அழிந்து போவான். இஸ்ராயேல் குழந்தையாய் இருந்த போதே நாம் அவன் மேல் அன்பு கூர்ந்தோம்; எகிப்திலிருந்து நம் மகனை அழைத்தோம்.
எவ்வளவு வற்புறுத்தி நாம் அவர்களைக் கூப்பிட்டோமோ, அவ்வளவு பிடிவாதமாய் அவர்கள் நம்மை விட்டு விலகினார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.
எப்பிராயீமுக்கு நடை பயிற்றுவித்தவர் நாம் தாம், அவர்களைக் கையிலேந்தி நாம் சீராட்டினோம்; ஆயினும் தங்களைப் பராமரித்து வருபவர் நாமே என்பதை அவர்கள் உணரவில்லை.
பரிவு என்னும் கயிற்றால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிற்றால் கட்டி நடத்தி வந்தோம். அவர்கள் கழுத்திலிருந்து நாம் நுகத்தை அகற்றி அவர்களை இளைப்பாறச் செய்து உணவளித்தோம்.
எப்பிராயீமே, உன்னை எப்படிக் கைநெகிழ்வோம்? இஸ்ராயேலே, உன்னை எப்படிக் கைவிடுவோம்? ஆதாமைப் போல் உன்னை எப்படி நடத்த முடியும்? செபோயீமுக்குச் செய்தது போல் உனக்குச் செய்வோமோ? நமது உள்ளம் அதை வெறுத்தொதுக்குகிறது, நம் இரக்கம் பொங்கியெழுந்து துடிக்கிறது.
நமது கோபத்தின் ஆத்திரத்தை நிறைவேற்ற மாட்டோம், மறுபடியும் எப்பிராயீமை அழிக்கமாட்டோம்; ஏனெனில் நாம் கடவுள், வெறும் மனிதன் அல்ல; நாமே உங்கள் நடுவில் இருக்கும் பரிசுத்தர்; எனவே உங்களை அழிக்கும்படி வர மாட்டோம்.
ஆண்டவர் பின்னாலேயே அவர்கள் போவார்கள், அவரோ சிங்கத்தைப் போலக் கர்ச்சனை செய்வார்; ஆம், அவர் கர்ச்சனை செய்வார்; அவர் மக்கள் மேற்கிலிருந்து நடுங்கிக் கொண்டு வருவார்கள்.
எகிப்தினின்று பறவைகள்போலப் பறந்து வருவர், அசீரியர் நாட்டினின்று புறாக்களைப்போல விரைந்து வருவர்; அவர்களை நாம் அவர்களுடைய வீடுகளுக்கே கொண்டு வருவோம், என்கிறார் ஆண்டவர்.
எப்பிராயீம் நம்மைப் பொய் சொல்லி ஏமாற்றினான், இஸ்ராயேல் வீட்டார் நமக்கு வஞ்சகம் செய்தனர்;ஆனால் யூதாவை இன்னும் கடவுள் அறிகிறார், அவனும் பரிசுத்தருக்குப் பிரமாணிக்கமாய் நடக்கிறான்.