அதில் பொன்தூபப் பீடமும், முழுவதும் பொன்தகடு வேய்ந்த உடன்படிக்கைப் பேழையும் இருந்தன. இப்பேழையில் மன்னாவைக் கொண்டிருந்த பொற்சாடியும், ஆரோனின் துளிர்ந்த கோலும், உடன்படிக்கைக் கற்பலகைகளும் இருந்தன.
இறை மாட்சிமையின் திருமுன் நிற்கும் கெரூபிம் என்னும் தூதர்கள் பேழையின்மேல் இரக்கத்தின் இருக்கைக்கு நிழலிட்டுக் கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் விவரிக்க இப்போது தேவையில்லை.
பின்கூடாரத்திலோ தலைமைக் குரு ஒருவரே, அதுவும் ஆண்டுக்கொரு முறைமட்டுமே நுழைவார். அப்போது கூட , தாமும் மக்களும் அறியாமையால் செய்த பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கும் பொருட்டு இரத்தத்தைக் கையில் ஏந்தாமல் நுழைவதில்லை.
இவையெல்லாம், இக்காலத்தைச் சுட்டிக்காட்டும் உவமையாக அமைந்துள்ளன. இந்த நிலையில் செலுத்தப்படும் காணிக்கைகளும் பலிகளும் மனச்சாட்சியைப் பொறுத்தமட்டில் வழிபடுபவர்களை நிறைவுள்ளவர்களாக்க இயலாதவை.
ஏனெனில், இவை உடலைச் சார்ந்த ஒழுங்குகளே, உண்பது குடிப்பதுபற்றியும், பல்வேறு வகைப்பட்ட முழுக்குகள் பற்றியும் எழுந்த இவை புனரமைப்புக் காலம் வரை தான் இருக்கும்.
கிறிஸ்துவோ வரப்போகும் நன்மைகளுக்குத் தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் முன்னதை விட மேலானதும் நிறைவுள்ளதுமான கூடாரம் ஒன்றைக் கடந்து ஒரே முறையில் எக்காலத்திற்குமே தூயகத்தில் நுழைந்து விட்டார். இந்தக் கூடாரமோ மனிதரின் கையால் அமைக்கப்பட்டதன்று. அதாவது, இந்தப் படைப்புலகைச் சார்ந்ததன்று.
ஆட்டுக் கடாக்கள், இளங் காளைகளின் இரத்தத்தைக் கொண்டு கிறிஸ்து தூயகத்தில் நுழையவில்லை. தம் சொந்த இரத்தத்தைக் கொண்டே அதில் நுழைந்தார். இவ்வாறு நாம் முடிவில்லா மீட்பைக் கண்டடையச் செய்தார்.
உண்மையில் ஆட்டுக் கடாக்கள், காளைமாடுகள் இவற்றின் இரத்தமும், கிடாரியின் சாம்பலும் மாசுள்ளவர்கள் மீது தெளிக்கப்படும் பொழுது, உடலில் தூய்மையைப் பொறுத்த வரை, அவர்களைப் பரிசுத்தராக்குமெனில், முடிவில்லாத் தேவ ஆவியால் தம்மையே மாசற்ற பலியாய்க் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம்,
நாம் உயிருள்ள கடவுளுக்கு வழிபாடு செலுத்தும்படி நம்முடைய மனச்சாட்சியைச் சாவுக்குரிய செயல்களிலிருந்து எவ்வளவோ மேலாகத் தூய்மைப்படுத்தும் அன்றோ? கிறிஸ்துவின் இரத்தத்தால் புதிய உடன்படிக்கை
முந்தின உடன்படிக்கையின் காலத்தில் செய்யப்பட்ட குற்றங்களிலிருந்து மக்களை விடுவிக்கக் கிறிஸ்து இறந்தார். இங்ஙனம் சாவொன்று நிகழ்ந்துள்ளதால், அழைக்கப்பட்டவர்கள் புதிய உடன்படிக்கையால் வாக்களிக்கப்பட்ட முடிவில்லா உரிமையைப் பெற முடிந்தது. இவ்வகையில் அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராக இருக்கிறார்.
திருச்சட்டத்திலுள்ள கட்டளைகளையெல்லாம் மோயீசன் மக்கள் அனைவருக்கும் அறிவித்த பின்னர், இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து சிவப்பு நூலால் கட்டிய ஈசோப் செடியால் உடன்படிக்கை ஏட்டின் மீதும், மக்கள் அனைவர் மீதும் அதைத் தெளித்தார்.
உள்ளபடி, கிறிஸ்து நுழைந்தது மனிதரின் கையால் ஆகிய தூயகம்; அது உண்மையான தூயகத்தின் முன்னடையாளமே. நமக்காகப் பேசும்படி கடவுளின் திருமுன் நிற்பதற்கு அவர் வானகத்திற்குள்ளேயே நுழைந்து விட்டார்.
தமதல்லாத இரத்தத்தைக் கையிலேந்தி ஆண்டு தோறும் தூயகத்திற்குள் நுழையும் தலைமைக் குருவைப் போல், கிறிஸ்து செய்யவில்லை. அவர் வானகத்திற்குள் நுழைந்தது தம்மைத் திரும்பத் திரும்ப ஒப்புக்கொடுப்பதற்காக அன்று.
அப்படி ஒப்புக்கொடுப்பதாய் இருந்தால் படைப்புக் காலந்தொட்டு திரும்பத் திரும்பப் பாடுபட வேண்டியிருக்கும். அதற்கு மாறாக, உலகின் இறுதிக் காலமான இப்போது தம்மைத் தாமே பலியிட்டு, பாவங்களைத் தொலைக்க ஒரே முறை உலகில் தோன்றினார்.
அவ்வாறே கிறிஸ்துவும் பல்லோர் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறையில் எக்காலத்திற்குமே தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். மீண்டும் தோன்றுவார். அப்போது பாவத்திற்குப் பரிகாரம் செய்வதற்காக அன்று, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அளிக்கும் பொருட்டே தோன்றுவார்.