இதற்கு முன் தரையில் இல்லாதிருந்த செடிகள் யாவற்றையும், இதற்கு முன் தரையில் வளர்ந்திராப் புற்பூண்டுகள் எல்லாவற்றையும் வயல் வெளிகளில் உண்டாக்கினார். உண்மையிலே அது வரை ஆண்டவராகிய கடவுள் பூமியின் மீது மழை பொழியச் செய்யவுமில்லை, நிலத்தை உழுவதற்கு ஒரு மனிதனும் இருந்ததுமில்லை.
ஆண்டவராகிய கடவுள் அவ்வனத்திலே பார்வைக்கு அழகிய, நாவிற்கு இனிய கனிகள் கொண்டுள்ள பலவித மரங்களையும் மண்ணினின்று தோன்றச் செய்தார். மேலும், அந்த இன்ப வனத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியும் மரத்தையும் வளரச் செய்தார்.
ஆண்டவராகிய கடவுள் பூமியின் எல்லா வித மிருகங்களையும் வானத்துப் பறவைகள் அனைத்தையும் மண்ணினின்று படைத்த பின்னர், அவற்றிற்கு ஆதாம் என்னென்ன பெயர் இடுவானென்று பார்க்க அவற்றையெல்லாம் அவனிடம் கூட்டி வந்தார். ஏனென்றால் அந்த உயிரினங்களுக்கு ஆதாம் எந்தப் பெயரிட்டானோ அதுவே அவற்றிற்குப் பெயராய் அமைந்தது.
அவ்வாறே ஆதாம் எல்லாக் கால்நடைகளுக்கும், வானத்துப் பறவைகளுக்கும், பூமியிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் தகுதியான பெயர்களை இட்டான். ஆனால் ஆதாமுக்கு ஒத்த துணை ஒன்றும் தென்படவில்லை.
அப்போது ஆண்டவராகிய கடவுள் ஆதாமுக்கு ஆழ்ந்த தூக்கம் வரச் செய்தார். அவன் அவ்வாறு தூங்கிக் கொண்டிருந்த போது கடவுள் அவனுடைய விலாவெலும்புகளில் ஒன்றை எடுத்து, அவ்வாறு எடுத்த இடத்தைச் சதையினால் மூடினார்.