இவை இவ்வாறு நிகழ்ந்தபின் ஆண்டவருடைய திரு வாக்கு ஆபிராமுக்குக் காட்சியில் உண்டாகி, அஞ்சாதே, ஆபிராம், நாம் உன் அடைக்கலமும், மிகவும் சிறந்த உன் பரிசுமாய் இருக்கிறோம் என்றது.
அதைக் கேட்டு, ஆபிராம்: ஆண்டவராகிய கடவுளே, அடியேனுக்கு நீர் என்ன தருவீர்? நான் பிள்ளையின்றிப் போவேனே! என் வீட்டு மேற்பார்வையாளனின் மகனான இந்தத் தமாஸ் ஊரானாகிய எலியேசேர் தான் இருக்கிறான் என்றான்.
பின் ஆண்டவர் அவனை வெளியே அழைத்துக் கொண்டு போய்: நீ வானத்தை அண்ணாந்து பார். கூடுமாயின் விண்மீன்கள் எத்தனையென்று எண்ணிப் பார். உன் சந்ததி அவ்வளவு இருக்கும் என்றார். ஆபிராம் கடவுளை விசுவாசித்தான்.
இந்நாட்டை உனக்குக் கொடுக்கும்படியாகவும், அதனை நீ உரிமையாக்கிக் கொள்ளும்படியாகவும் அல்லவா ஆண்டவராகிய நாம் ஊர் என்னும் கல்தேயர் நகரிலிருந்து உன்னை வெளிக் கொணர்ந்தோம் என்றார்.
ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக: மூன்று வயதுக் கிடாரி ஒன்றும், மூன்று வயதுள்ள வெள்ளாடு ஒன்றும், மூன்று வயது ஆட்டக் கிடாய் ஒன்றும் காட்டுப் புறா ஒன்றும், மாடப் புறா ஒன்றும் நம்மிடம் கொண்டு வா என்றார்.
அந்நேரத்தில் ஆண்டவர்: உன் சந்ததியார் தங்களுக்குச் சொந்தமில்லாத நாட்டில் அந்நியராய்த் திரிந்து, அடிமைகளாக்கப்பட்டு, நானூறு ஆண்டளவும் துன்பமடைவார்கள் என்று முன்பே அறியக்கடவாய்.
ஆனால், நாலாம் தலைமுறையில் (உன் சந்ததியார்) இவ்விடத்திற்குத் திரும்பவும் வருவார்கள். ஏனென்றால், அமோறையருடைய பாவ அக்கிரமங்களின் அளவு இன்னும் நிறைவாகவில்லை என்றார்.