இப்பொழுதே முடிவு உனக்கு வந்துவிட்டது. நம் கோபத்தை உன் மீது அனுப்புவோம்; உன் நடத்தைக்கு ஒத்தபடி உன்னை தீர்ப்பிடுவோம்; உன் அக்கிரமங்களையெல்லாம் உன் மீது சுமத்துவோம்;
நமது கண் உனக்கு இரக்கம் காட்டாது; நாம் உனக்குத் தயைகூர மாட்டோம். ஆனால் உன் நடத்தைக்கேற்ற தண்டனையை உன் மீது வரச்செய்வோம்; உன்னுடைய அக்கிரமங்கள் உன் நடுவிலேயே இருக்கும்; அப்போது நாமே உன் ஆண்டவர் என்பதை அறிவாய்.
விரைவில் இப்பொழுதே நம் கோபத்தை உன் மேல் சுமத்துவோம்; நமது சினத்தை உன் மீது தீர்த்துக் கொள்வோம்; உன் நடத்தைக்குத் தக்கவாறு உன்னைத் தீர்ப்பிடுவோம்; உன் அக்கிரமங்களின் பலனை உன் மீது வரச் செய்வோம்.
நமது கண் உனக்கு இரக்கம் காட்டாது; நாம் உன்மேல் தயைகூர மாட்டோம்; உன் நடத்தையின் பலனை உன் மீது சுமத்துவோம்; உன் அக்கிரமங்கள் உன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும். அப்போது ஆண்டவராகிய நாமே உன்னைத் தண்டிக்கிறவர் என்பதை அறிவாய்.
விற்கிறவன் விற்ற உடைமையைத் திரும்பி அடையமாட்டான்; ஏனெனில் இப்போது வாழ்கிறவர்களின் காலத்திலேயே அது நடக்கும்; எல்லாரையும் பற்றிச் சொல்லப்பட்ட இந்த இறைவாக்கு வீணாகாது; எந்த மனிதனும் தன்னுடைய தீய வாழ்வில் அமைதி காணமுடியாது.
தப்பி ஒடுகிறவர்கள் பிழைப்பார்கள்; ஆயினும் அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் அக்கிரமத்துக்காக மனம் வருந்தி, கணவாய்களிலுள்ள மாடப்புறாக்களைப் போல் மலைகளின் மேல் நிற்பார்கள்.
அவர்களுடைய வெள்ளி வெளியே எறியப்படும்; தங்கம் அவர்களுக்கு வெறுப்புள்ளதாகும்; ஆண்டவருடைய கோபத்தின் நாளில் அவர்களை விடுவிக்க அவர்களிடமிருக்கும் வெள்ளியாலும் தங்கத்தாலும் இயலாது; அவர்கள் தங்கள் உள்ளத்தைத் திருப்தியாக்குவதுமில்லை; தங்கள் வயிற்றை நிரப்புவதுமில்லை. ஏனெனில் அவர்களின் அக்கிரமத்தினால் அவர்களது செல்வமே அவர்களுக்கு இடறலாய் அமைந்தது.
தங்கள் அணிகலன்களைப் பார்த்து அவர்கள் அகந்தை கொண்டார்கள்; அவற்றைக் கொண்டு தங்கள் அக்கிரமத்தின் படிமங்களையும் சிலைகளின் உருவங்களையும் செய்தார்கள்; ஆகையால் பொன்னையும் வெள்ளியையும் அவர்களுக்கு வெறுப்புள்ளதாக்குவோம்.
அவர்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக்கொள்வோம்; அவர்கள் நம்முடைய கோயிலின் அந்தரங்கமான இடத்தை அசுத்தப் படுத்துவார்கள்; கள்ளர்களும் அதனுள் நுழைந்து அதனைப் பங்கப் படுத்துவார்கள்.
ஆகையால் புறவினத்தாரில் பொல்லாதவர்களைக் கூட்டி வருவோம்; அவர்கள் இவர்களுடைய வீடுகளைக் கைப்பற்றுவார்கள்; வலிமையுள்ளவர்களின் அகங்காரம் அடங்கும்; இவர்களின் பரிசுத்த இடங்களை அவர்கள் உரிமையாக்கிக் கொள்வார்.
அழிவுக்கு மேல் அழிவு உண்டாகும்; துயரச் செய்தியைத் தெடர்ந்து துயரச் செய்தி கிடைக்கும்; இறைவாக்கினரின் காட்சியை நாடுவார்கள்; ஆனால் குருக்களிடமிருந்து வேதமும், மூப்பர்களிடமிருந்து நல்லாலோசனையும் ஒழிந்து போயின.