அதன் பின், ஒர் இருப்புத் தகட்டினால் உனக்கும் பட்டணத்துக்கும் இடையில் சுவர் போல் எழுப்பி, நீ அதற்கு எதிரில் உட்கார்ந்து முற்றுகையிட்டுக்கொண்டிரு; இது இஸ்ராயேல் வீட்டாருக்கு ஒர் அடையாளம்.
நீ உன் இடப்பக்கமாய்ப் படுத்து, இஸ்ராயேல் வீட்டாரின் தண்டனையை உன்மேல் சுமந்து கொள்; நீ அதன் மேல் படுத்திருக்கும் நாளளவும் அவர்களின் அக்கிரமங்களைச் சுமப்பாய்.
அவர்களுடைய அக்கிரமங்களின் ஆண்டுக் கணக்கிற்குப் பதிலாக நாள் கணக்கிட்டு முந்நூற்றுத் தொண்ணுறு நாள் உனக்குக் கொடுத்தோம்; அத்தனை நாட்களுக்கு நீ அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்.
கோதுமை, வாற்கோதுமை, பெரும் பயறு, சிறு பயறு, தினை, சாமை இவற்றை வாங்கி ஒரு பானையில் வைத்துக் கொள்; நீ படுத்திருக்கும் அந்த முந்நூற்றுத் தொண்ணுறு நாளளவும், அவற்றிலிருந்து செய்த அப்பத்தைச் சாப்பிடு.
இவ்வாறு தான் இஸ்ராயேல் மக்கள் நம்மால் துரத்தப்பட்டு எந்த மக்கள் மத்தியில் வாழ்வார்களோ, அந்த மக்கள் நடுவில் தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள்" என்று ஆண்டவர் சொன்னார்.
அப்போது நான், "ஆண்டவராகிய இறைவா, என் சிறு வயது முதல் இன்று வரை என் ஆன்மா தீட்டுப்பட்டதில்லையே! தானாய்ச் செத்ததையோ, மற்ற மிருகங்களால் கொலையுண்டதையோ நான் சாப்பிட்டதே இல்லை; தீட்டுப்பட்ட இறைச்சி என் வாய்க்குள் போனதில்லை" என்றேன்.
அப்போது ஆண்டவர் என்னை நோக்கி, "அப்படியானால் மனிதா மலத்தின் வறட்டிகளுக்குப் பதிலாக மாட்டுச் சாணத்தின் வறட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுக்கிறோம்; அவற்றைக் கொண்டு உன் அப்பத்தைச் சுடுவாயாக" என்றார்.
மேலும் தொடர்ந்தார்: "மனிதா, யெருசலேமில் அப்பத்தின் சேமிப்பைக் குறையச் செய்வோம்; மக்கள் அப்பத்தை நிறை பார்த்துக் கவலையோடு சாப்பிடுவர்; தண்ணீரை அளவு பார்த்து அச்சத்தோடு குடிப்பர்;