ஏழாம் ஆண்டிலோ, உன் மக்களுள் எளியவர்கள் உண்ணவும், மீதியானவையெல்லாம் காட்டுப் பிராணிகள் தின்னவும் உன் நிலங்கள் சும்மா கிடக்க விட்டுவிடுவாய். உன் திராட்சைத் தோட்டத்தையும் ஒலிவத் தோட்டங்களையும் குறித்து அவ்விதமே செய்வாயாக.
ஆறு நாள் நீ வேலை செய்து, ஏழாம் நாளிலே உன் ஆடு, மாடு, கழுதை முதலியன இளைப்பாறத் தக்கதாகவும், உன் அடிமைப்பெண்ணின் மகனும் அந்நியனும் இளைப்பாறத் தக்கதாகவும் ஓய்வு கொள்வாயாக.
நாம் உங்களுக்குச் சொன்னதெல்லாம் அனுசரியுங்கள். மேலும், அந்நிய தெய்வங்களின் பெயரைக் கொண்டு ஆணையிடாதீர்கள். உங்கள் வாயினின்று அது யாராலேயும் கேட்கப்படலாகாது.
(அதாவது) புளியாத அப்பத் திருவிழா நீ எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்ட போது புதுப் பலன்களின் மாதத்தில் ஏழு நாளளவும் புளியாத அப்பத்தை உண்ண வேண்டுமென்று நாம் உனக்குக் கட்டளையிட்டோம். நீ அவ்விதமே செய்தாய். (அன்றியும்) வெறுங்கையோடு நம் முன்னிலையில் வராதபடி கவனமாய் இருப்பாய்.
உன் நிலத்திலே நீ எதை விதைத்திருந்தாலும் உன் வேலையால் கிடைத்த முதற் பலன்களின் அறுப்புக் காலத் திருவிழாவையும், ஆண்டு முடிவிலே உன் நிலங்களில் விளைந்த எல்லா விளைச்சல்களையும் சேர்த்துத் தீர்ந்த போது சேர்ப்புக்காலத் திருவிழாவையும் கொண்டாடி வருவாய்.
உனக்கு முன் நடந்து உன் வழியில் உன்னைப் பாதுகாப்பதற்கும், நாம் உனக்குத் தயார் செய்திருக்கும் இடத்திற்கு உன்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கும், இதோ நாம் ஒரு தூதரை அனுப்புவோம்.
அவரை வணங்கவும், அவருடைய வாக்குக்குச் செவி கொடுக்கவும், அவருக்குப் பயந்து நடக்கவும் கடவாய். ஏனென்றால் உன் பாவத்தை அவர் பொறுப்பதில்லை. நமது பெயர் அவரிடம் உள்ளது.
நம் தூதர் உனக்கு முன்னே சென்று, ஆமோறையன், ஏத்தையன், பெறேசையன், கானானையன், ஏவையன், யெபுசேயன் ஆகியோரின் இடத்தில் உன்னைப் புகச் செய்வார். இவர்களை நாம் அழித்தொழிப்போம்.
நீ அவர்களுடைய தெய்வங்களை ஆராதிக்கவும் தொழவும் வேண்டாம். அவர்கள் செய்கைகளை நீங்கள் பின்பற்றாமல் அவர்களை அடியோடு அழித்து, அவர்களின் சிலைகளையும் உடைத்துப் போடுவீர்கள்.
உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் தொழுது வந்தால், நீங்கள் உண்ணும் அப்பத்தையும், குடிக்கும் நீரையும் நாம் ஆசீர்வதித்து நோயை உங்களிடமிருந்து விலகச் செய்வோம்.
என்றும் அச்சம் உங்களை ஆட்கொள்ளச் செய்வோம். எந்த நாட்டில் நீ புகுவாயோ அந்நாட்டுக் குடிகளையெல்லாம் கலங்கடித்து, நீ வரவே உன் பகைவர் எல்லாரும் புறமுதுகு காட்டச் செய்வோம்.
அந்நாடுகள் பாழாய்ப் போகாதபடிக்கும், காட்டு விலங்குகள் பலுகி உன்னைத் துன்புறுத்தாதபடிக்கும், நாம் ஓராண்டிற்குள்ளே உன் முன்னின்று அவர்களைத் துரத்தி விடமாட்டோம்.
(மேலும்) செங்கடல் தொடங்கிப் பிலிஸ்தியரின் கடல் வரையிலும், பாலைவனம் தொடங்கி நதி வரையிலும் உன் எல்லைகளை விரியச் செய்வோம். நாம் அந்நாட்டுக் குடிகளை உங்கள் கையில் ஒப்புவிப்போம்.
நமக்கு விரோதமாய்ப் பாவம் செய்யும்படி உன்னை அவர்கள் செய்துவிடா வண்ணம், அவர்கள் உன் நாட்டிலே குடியிருக்க வேண்டாம். நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதால், அது உனக்கு இடறுகல்லாய் இருக்கும் (என்றருளினார்).