ஆதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளிலே முன் கூறியபடி யூதர்களுடைய பகைவர் அவர்களை அழித்து அவர்களுடைய குருதியைச் சிந்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அன்று யூதர்களுக்கு நல்ல காலம் பிறந்தது. அவர்கள் தங்கள் பகைவரை வென்று அவர்களைப் பழிக்குப் பழி வாங்கத் தொடங்கினர்.
அதாவது, அவர்கள் தங்கள் பகைவர் மீதும் தங்களை வெறுத்து வந்தவர்கள் மீதும் கை வைக்க எண்ணி, நகரங்களிலும் கிராமங்களிலும் ஊர்களிலும் ஒன்றாய்க் கூடினர். எல்லா மக்களும் அவர்களுடைய வலிமையைக் கண்டு பெருந்திகிலுற்றிருந்தனர். எனவே அவர்களை எதிர்த்து நிற்க எவரும் துணியவில்லை.
ஏனெனில் மாநில நீதிபதிகளும் ஆளுநர்களும் மக்கள் தலைவர்களும், நாடெங்கிணும் உள்ள அரச அலுவலர்களும் மார்தொக்கேய்க்கு அஞ்சி யூதரைப் புகழ்ந்து பாராட்டி வந்தனர்.
மார்தொக்கே அரண்மனையில் தலைமை அதிகாரியாகவும் செல்வாக்குள்ளவராகவும் இருக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர் நாளுக்கு நாள் பெரியவராகவே, அவர் புகழ் வளர்ந்து மாநிலங்கள் எங்கணும் பரவலாயிற்று.
அவன் அரசியை நோக்கி, "சூசா நகரில் மட்டுமே ஐநூறு பேரும், ஆமானின் பத்துப் புதல்வர்களும் யூதர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். அப்படியென்றால் எல்லா நாடுகளிலும் அழிக்கப்பட்டோர் தொகை எவ்வளவு இருக்கும் என்று பார்! இன்னும் உனக்கு என்ன வேண்டும், சொல்; அது நடந்தே தீரும்" என்றான்.
அதற்கு எஸ்தர், "தாங்கள் விரும்பினால் சூசாவில் இன்று போலவே, நாளையும் செய்யவும் ஆமானுடைய பத்துப் புதல்வர்களையும் தூக்கில் தொங்க விடவும் யூதருக்கு அனுமதி வழங்க வேண்டும்" என்றாள்.
அரசனின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளிலும் யூதர்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ளவும், தம் எதிரிகளின் விரோதத்திற்கு முடிவு காணவும் தம் பகைவரில் எழுபத்தையாயிரம் பேரை யூதர்கள் கொன்று குவித்தனர். ஆயினும் அவர்களுடைய சொத்துகளை அவர்கள் கொள்ளையிடவில்லை.
அவர்கள் ஆதார் மாதம் பதின்மூன்றாம் நாள் இக் கொலைத் தொழிலை ஆரம்பித்து பதினான்காம் நாள் முடித்தனர். இந்த நாள் அன்றிலிருந்து என்றும் விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும், அந்நாளிலே விருந்துண்டு மனம் மகிழ வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.
இதன் பொருட்டே அரணற்ற கிராமங்களிலும் ஊர்களிலும் குடியிருந்த யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினான்காம் நாளில் விருந்துண்டு மகிழ்ச்சி கொண்டாடுகின்றனர். அத்தோடு தங்கள் அயலார்க்கு வரிசையும் அனுப்பி வருகின்றனர்.
ஆதார் மாதத்தின் பதினான்காம், பதினைந்தாம் நாட்களைத் திருநாட்களாகக் கொண்டாடவேண்டும் என்றும்; ஆண்டுதோறும் இந்நாட்களை வெகு சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்றும்;
(யூதர்கள் இந்நாட்களில் தங்கள் பகைவர்களைக் கொன்று பழிவாங்கியதால் முன்னிருந்த அழுகையும் கவலையும் மகிழ்ச்சியாக மாறியதை நினைத்து) இந்நாட்களில் விருந்துண்டு மகிழ்ச்சி கொண்டாடவும், ஒருவர்க்கொருவர் வரிசை அனுப்பி, ஏழை எளியவர்க்குத் தான தருமஞ் செய்யவும் வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
ஏனென்றால் ஆகாக் வம்சத்தில் தோன்றிய அமதாத்தின் மகனாகிய ஆமான் யூதர்களை விரோதித்துப் பகைத்து, அவர்களைக் கொன்று ஒழிக்கக் கருதி 'நம் மொழியில் பூர்' என்று சொல்லப்படும் திருவுளச்சீட்டுப் போட்டான்.
ஆனால் எஸ்தர் அரசனிடம் போய் மன்றாடி, யூதர்களுக்கு மாறாக அவன் நினைத்த சதி அவன் தலைமீதே விழும்படி செய்தாள்; அவன் அனுப்பிய கட்டளைக் கடிதத்தை அரசனின் புதுக் கட்டளைக் கடிதத்தால் விலக்கினாள்; இதனால் பிறகு ஆமானும் அவன் புதல்வர்களும் கழுமரத்திலே ஏற்றப்பட்டனர்.
'பூர்' என்னும் திருவுளச் சீட்டைக் குறித்து இவ்விழாநாட்கள் 'பூரிம்' என அழைக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் எல்லாம் 'மார்தொக்கேயின் கடிதங்கள்' என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளன.
யூதர்கள் தங்களுக்கு நேரிட்ட துன்பங்களையும் அவற்றைத் தொடர்ந்து வந்த நல்ல காலத்தையும் நினைத்து எடுத்த தீர்மானம் என்னவென்றால், "நாங்களும் எங்களுக்குப் பின்வரும் எம் மக்களும், இனி எங்கள் சமயநெறியில் சேரவிரும்பும் யாவரும் முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து தவறாமல் இவ்விரண்டு நாட்களையும் திருநாட்களாகக் கொண்டாடுவோம். இது ஆண்டுதோறும் குறிக்கப்பட்ட நாட்களில் (மார்தொக்கேயின் கடிதங்களில்) எழுதப்பட்டிருப்பது போல் சரியாக அனுசரிக்கப்படும்" என்பதாம்.
மேற்சொன்ன திருநாட்களை மனிதர் ஒருபோதும் மறவாது அவற்றைத் தலைமுறை தலைமுறையாக மண்ணக மாநிலங்கள் எங்கணும் கொண்டாடி வருவர். பூரிம் என்னும் திருவுளச்சீட்டுத் திருநாட்களை யூதர்களும் அவர்கள் பிள்ளைகளும் கொண்டாடாத நகரமே இல்லை. ஏனென்றால் அவர்கள் யாவரும் அவற்றை அவ்வாறு அனுசரிப்பதாக எற்றுக் கொண்டிருந்தனர்.
அபிகாயேலின் புதல்வியாகிய எஸ்தர் அரசியும் யூதரான மார்தொக்கேயும் அந்நாள் இனி எக்காலத்திலும் பெரிய திருநாளாகக் கொண்டாடப்படும்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்று இரண்டாவதொரு கடிதத்தையும் எழுதினார்கள்.
அன்றியும், தங்களுக்குள் சமாதானமாய் இருக்க வேண்டும் என்றும், உண்மையில் நிலைத்து நிற்க வேண்டும் என்றும், அசுவேருஸ் அரசனின் நூற்றிருபத்தேழு நாடுகளிலுமுள்ள யூதர் அனைவருக்கும் அறிவுரை கூறினார்கள்.
பூரிம் என்ற திருவிழாவைக் குறிப்பிட்ட காலத்தில் மிக்க மகிழ்ச்சியோடு கொணடாட வேண்டும் என்றும் எழுதிவைத்தார்கள். எஸ்தரும் மார்தொக்கேயும் கட்டளையிட்டவாறு, யூதர்கள் எல்லாரும் நடந்துகொண்டனர். தாங்களும் தங்கள் மக்களும் நோன்பு காத்து, பூரிம் திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாட உடன்பட்டனர்.