ஆகவே உங்களில் உலகிற்கடுத்தவற்றைச் சாகச் செய்யுங்கள். கெட்ட நடத்தை, கற்பின்மை, காமம், தீய இச்சைகள், சில வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.
ஆனால், இப்பொழுது நீங்கள் இதையெல்லாம் விலக்குங்கள். சினம், சீற்றம், தீயமனம் ஆகியவற்றையெல்லாம் நீக்குங்கள். பழிச்சொல், நாணங்கெட்ட பேச்சு எதுவும் உங்கள் வாயில் வராதிருக்கட்டும்.
இப்புது வாழ்வில் கிரேக்கனென்றும் யூதனென்றும் இல்லை; விருத்தசேதனம் பெற்றவனென்றும் பெறாதவனென்றும் இல்லை. மிலேச்சன் என்றும், சீத்தியன் என்றும் இல்லை. அடிமையென்றும் உரிமைக்குடிமகனென்றும் இல்லை. கிறிஸ்துவே அனைவரிலும் அனைத்துமானவர்.
ஆதலால், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டு அவரால் அன்பு செய்யப்பட்ட இறைமக்கள் நீங்கள். இரங்கும் உள்ளம், பரிவு, தாழ்ச்சி, சாந்தம், பொறுமை ஆகிய பண்புகளை அணிந்து கொள்ளுங்கள்.
ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவர் மீது ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால், மன்னித்துவிடுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல் நீங்களும் மன்னியுங்கள்.
கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இதயங்களில் ஆட்சி புரிவதாக. இச் சமாதானத்திற்கே நீங்கள் ஒரே உடலின் உறுப்பினராய் அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயும் இருங்கள்.
கிறிஸ்துவின் வார்த்தை நிறை வளத்தோடு உங்களுள் குடிகொள்வதாக. முழு ஞானத்தோடு ஒருவருக்கொருவர் போதியுங்கள். அறிவு புகட்டுங்கள். தேவ ஆவி ஏவிய சங்கீதங்களையும் புகழ்ப்பாக்களையும் பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடுங்கள்.