தலைமைக் குருவை அணுகி, இப்புதிய நெறியைச் சார்ந்த ஆண் பெண் யாராயிருந்தாலும், அவர்களைக் கைதுசெய்து, யெருசலேமுக்குக் கொண்டுவரத் தமஸ்கு நகரிலுள்ள செபக் கூடங்களுக்குக் கட்டளைக் கடிதம் தரும்படி கேட்டார்.
சவுல் எழுந்து நின்றார். கண் திறந்திருந்தும் ஒன்றையும் காணமுடியவில்லை. ஆகையால், உடனிருந்தோர் அவரைத் தமஸ்கு நகருக்குக் கையைப்பிடித்து அழைத்துச் சென்றனர்.
இதைக் கேட்டபின் அனனியா அவ்வீட்டிற்குச் சென்று, அவர் மீது கைகளை விரித்து, "சகோதரர் சவுலே, ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார். நீர் வரும்பொழுது, வழியில் உமக்குத் தோன்றிய இயேசுவே அவர். நீர் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப் பெறவும், அவர் என்னை அனுப்பினார்" என்றார்.
கேட்டவர்கள் அனைவரும் திகைப்புற்று, "யெருசலேமில் இயேசுவின் பெயரைச் சொல்லி மன்றாடுபவர்களை ஒழிக்கத் தலைப்பட்டவன் இவன் அன்றோ? அவர்களைச் சிறைப்படுத்தி, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்ல இங்கேயும் வரவில்லையா?" என்றார்கள்.
அப்பொழுது பர்னபா அவரை அப்போஸ்தலர்களிடம் அழைத்துக் கொண்டுபோய், ஆண்டவர் அவருக்கு வழியில் தோன்றி அவரோடு பேசினதையும், தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் போதித்ததையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
இராயப்பர் அவனைப்பார்த்து, "ஐனேயா, இயேசுகிறிஸ்து உனக்குக் குணம் அளிக்கிறார், எழுந்து, நீயே உன் படுக்கையைச் சரிப்படுத்து" என்றார். உடனே அவன் எழுந்து நின்றான்.
யோப்பாவிலுள்ள சீடர்களில் தபீத்தா என்றொருத்தி இருந்தாள். ( தபீத்தா என்பதற்கு மான் என்பது பொருள் ) பிறருக்கு நன்மை புரிவதும் அறங்கள் செய்வதுமே அவளது வாழ்க்கையாயிருந்தது.
யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தா நகருக்கு இராயப்பர் வந்திருப்பதைக் கேள்வியுற்ற சீடர்கள் அவரிடம் இருவரை அனுப்பி, "உடனே எங்கள் ஊர்வரைக்கும் வரவும்" என்று மன்றாடினர்.
இராயப்பர் புறப்பட்டு அவர்களோடு வந்தார். வந்ததும் அவரை மாடி அறைக்கு அழைத்துச் சென்றனர். கைம்பெண்கள் எல்லாரும் அவரைச் சூழ்ந்துகொண்டு, தபீத்தா உயிரோடிருக்கையில் தங்களுக்குச் செய்து கொடுத்திருந்த உள்ளாடைகளையும் மேலாடைகளையும் அவரிடம் காட்டி அழுதனர்.
எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு இராயப்பர் முழுங்கால்படியிட்டுச் செபித்தார். பின்பு, பிணத்தை நோக்கி "தபீத்தா, எழுந்திரு" என்றார். என்றதும், அவள், கண்ணைத் திறந்தாள். இராயப்பரைக் கண்டு எழுந்து உட்கார்ந்தாள்.