அங்குச் சீடர் சிலரைக் கண்டு, "நீங்கள் விசுவாசத்தைத் தழுவியபொழுது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்களா? என்று கேட்டார்கள். அவர்கள், "பரிசுத்த ஆவி இருக்கிறார் என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே" என்றனர்.
சின்னப்பர் அப்பொழுது, "அருளப்பர் கொடுத்தது மனந்திரும்பியதைக் காட்டும் ஞானஸ்நானம். அதைக் கொடுத்தபோது, தமக்குப்பின் வருபவர் மீது விசுவாசம்கொள்ள வேண்டுமென மக்களுக்குச் சொன்னார்: அவர் அப்படிக் குறிப்பிட்டது இயேசுவைத்தான்" என்றார்.
சின்னப்பர் அவர்கள் மேல் கைகளை விரித்ததும், பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இறங்கினார். அப்பொழுது அவர்கள் பல மொழிகளைப் பேசவும் இறைவாக்கு உரைக்கவும் தொடங்கினர்.
பின், அவர் செபக்கூடத்திற்குச் சொன்னார். அங்கு மூன்று மாதமளவும் கடவுளின் அரசைப்பற்றி மக்களிடம் துணிவுடன் பேசி அவர்களோடு வாதித்துத் தாம் சொல்வது உண்மையென ஏற்கச் செய்தார்.
சிலர் பிடிவாதத்தினால், விசுவசியாமல் எல்லாருக்குமுன் இப்புது நெறியை இகழ்ந்து பேசியபொழுது, அவர் தம் சீடர்களை அழைத்துக்கொண்டு அவர்களை விட்டு விலகினார். திரன்னு என்பவனின் கல்விக் கூடத்தில் நாள்தோறும் போதித்து வந்தார்.
இப்படியிருக்க ஊர்களில் திரிந்து பேயோட்டும் யூதர் சிலரும், பொல்லாத ஆவியால் பீடிக்கப்பட்டவர்கள் மேல் ஆண்டவராகிய இயேசுவின் பெயரைப் பயன்படுத்தப் பார்த்து, "சின்னப்பர் அறிவிக்கும் இயேசுவின் பெயரால் உங்களுக்கு ஆணையிடுகிறேன்" என்றனர்.
பொல்லாத ஆவியால் பீடிக்கப்பட்டவன் அவர்கள் மேல் பாய்ந்து அவர்களை அமுக்கித் திணறடிக்கவே அவர்கள் காயமுற்றவராய், ஆடையிழந்து அவ்வீட்டைவிட்டு ஓடிப் போனார்கள்.
மாயவித்தைக் காரர்களுள் பலர் தங்கள் நூற்களைக் கொண்டு வந்து எல்லார் முன்னிலையிலும் அவற்றை எரித்தனர். அவற்றின் விலையைக் கணக்கிட்டதில் ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு எனத் தெரிந்தது.
தெமேத்திரியு என்னும் பொற்கொல்லன் ஒருவன் இருந்தான். அவன் வெள்ளியினால் தியானா தேவதையின் கோயிலைப் போன்ற சிறு படிவங்கள் செய்வான். அதனால் கம்மியர்களுக்குக் கிடைத்த வருவாய் சிறிதன்று.
ஆனால், ' இந்தச் சின்னப்பன் வந்து, ' கையால் செய்யப்பட்ட தெய்வங்கள் தெய்வங்களே அல்ல ' என எபேசு நகரில் மட்டுமன்று, ஏறக்குறைய ஆசியா முழுவதுமே பிரச்சாரம் செய்து, பெருந்திரளான மக்களின் மனத்தை மயக்குகிறான். இதை நீங்கள் பார்க்கவில்லையா? இது உங்கள் செவிக்கு எட்டவில்லையா? இதனால் நமக்கு ஆபத்துத்தான்.
நமது தொழில் மதிப்பற்றுப் போவது மட்டுமன்று, மாபெரும் தேவதை தியானாவின் கோயில்கூட தன் பெயரை இழந்துவிடும். அதுமட்டுமா, ஆசியா முழுவதும், ஏன், உலகமெங்குமே வணக்கத்தைப் பெறும் நம் தேவதையின் மாண்பு மங்கிப்போகுமே" என்றான்.
யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னுக்குத்தள்ள, கூட்டத்தில் சிலர் அவனை மக்கள் எதிரில் வரச் செய்தனர். அலெக்சந்தர் சைகை காட்டி, மக்களுக்கு நியாயம் எடுத்துச்சொல்ல விரும்பினான்.
ஆனால், அவன் யூதன் என மக்கள் அறிந்ததும், ' எபேசியரின் மாபெரும் தியானா வாழ்க!" என்று அனைவரும் ஒரே குரலாய் முழங்கினர். இம்முழக்கம் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடித்தது.
அவைத் தலைவன் மக்களை அமைதிப்படுத்தி, "எபேசியப் பெருமக்களே, தியானாவின் கோயிலும், வானிலிருந்து வந்த சிலையும் எபேசியரது நகரின் பாதுகாப்பில் இருக்கின்றனவென்று அறியாதவரும் உளரோ?
தெமேத்திரியுவுக்கும், அவனுடைய உடன் தொழிலாளருக்கும் எவன்மீதாவது வழக்குண்டென்றால் நீதி வழங்கக் குறித்த நாட்கள் உண்டு; ஆளுநரும் உள்ளனர்; போய் முறையிட்டுக் கொள்ளட்டும்.
வேறு எதைப்பற்றியாகிலும் கேள்வியிருந்தால், சட்டப்படி கூடுகின்ற சபையில் அதைத் தீர்த்துக்கொள்ளலாம். இன்று நிகழ்ந்ததைப் பார்த்தால் நாம் கலகம் விளைவித்ததாகக் குற்றச்சாட்டு நம்மேல் விழக்கூடும்.