நான் உங்கள் மீதுகொண்டுள்ள அன்பார்வம் கடவுள்கொண்டிருக்கும் அன்பார்வமே. ஏனெனில், கிறிஸ்து என்னும் ஒரே மணவாளற்கு உங்களை மண ஒப்பந்தத்தில் பிணைத்துள்ளேன்; அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியென நிறுத்த வேண்டுமென்பதே என் விருப்பம்.
ஆனால், ஏவாள், எவ்வாறு பாம்பின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டாளோ அவ்வாறே நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டு, கிறிஸ்துவிடம் இருக்கவேண்டிய ஒருமனப் பற்றுதலை இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன்.
ஏனெனில், எவனாவது வந்து நாங்கள் அறிவிக்காத வேறொரு இயேசுவை அறிவிக்கும்போது அல்லது நீங்கள் பெற்றிருக்கும் ஆவியானவரைத் தவிர வேறோர் ஆவியைப் பெற்றுக்கொள்ளச் செய்யும்போது அல்லது நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்திக்கு ஒவ்வாத வேறொரு நற்செய்தியைக் கொணரும்போது, அவனை எளிதில் பொறுத்துக் கொள்ளுகிறீர்களே;
உங்களிடையே பணிபுரிந்தபோது, என் செலவுக்கு வேண்டியதை மற்றச் சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக இவ்வாறு அவர்களிடமிருந்து பொருளைக் கவர்ந்தேன் .
நான் உங்களோடு இருக்கையில் எனக்குக் குறையிருந்தபோதிலும், நான் யாருக்கும் சுமையாய் இருக்கவில்லை; எனக்கிருந்த குறையை மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் நீக்கினார்கள்; எதிலும் உங்களுக்குச் சுமையாய் இராமல் பார்த்துக்கொண்டேன். இனியும் பார்த்துக்கொள்வேன்.
தாங்கள் பெருமை பாராட்டிக்கொள்ளும் அப்போஸ்தலப் பணியில் எங்களுக்கு நிகராய்த் தென்படச் சிலர் வாய்ப்புத் தேடுகிறார்கள். அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிட்டாதபடி நான் இப்போது செய்வதையே தொடர்ந்து செய்து வருவேன்.
மறுபடியும் சொல்லுகிறேன்; எவனும் என்னை அறிவிலி என எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், என்னை அறிவிலியாகவே வைத்துக் கொள்ளுங்கள். நானும் அறிவிலியைப் போலச் சற்றுப் பொருமையடித்துக் கொள்ளுகிறேன்.
உங்களை யாராவது அடிமைபோல் நடத்தினால், அல்லது சுரண்டினால், அல்லது ஏமாற்றிப் பிழைத்தால், அல்லது உங்களிடம் இறுமாப்புக் காட்டினால், அல்லது உங்களைக் கன்னத்திலே அறைந்தால் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள்.
இப்படியெல்லாம் செய்ய நாங்கள் வலுவற்றவர்களே; இது எனக்கு வெட்கந்தான். எனினும் அவர்கள் எதிலே பெருமை பாராட்டத் துணிகிறார்களோ, அதிலே நானும் துணியக்கூடும் அறிவிலியைப் போலவே இன்னும் பேசுகிறேன்
அவர்கள் எபிரேயரோ? நானும் எபிரேயன்தான். அவர்கள் இஸ்ராயேலரோ? நானும் இஸ்ராயேலன் தான். அவர்கள் ஆபிராகாமின் வழிவந்தவர்களோ? நானும் ஆபிரகாமின் வழிவந்தவன் தான்.
மும் முறை தடியால் அடிபட்டேன். ஒரு முறை என்னைக் கல்லால் எறிந்தார்கள். மும்முறை கப்பற் சிதைவில் சிக்குண்டேன். ஓர் இரவும் பகலும் நடுக்கடலில் அல்லலுற்றேன்.
நான் செய்த பயணங்கள் மிகப் பல:அவற்றில் ஆறுகளாலும் கள்ளர்களாலும் இடர்கள், சொந்த இனத்தாரும் வேற்றினத்தாரும் இழைத்த இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள். கடலிலும் இடர்கள், போலிச் சகோதரர்களால் இடர்கள். இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன்.