எந்தக் கைம்பெண்ணுக்காவது பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தால், அவர்கள் முதலில் சொந்தக் குடும்பத்தினரைப் பேணவும், பெற்றோருக்கும், பாட்டி பாட்டானுக்குமுரிய நன்றிக் கடன் ஆற்றவும் கற்றுக்கொள்ளட்டும். இதுவே கடவுளுக்கு ஏற்றது.
பிள்ளைகளை நன்றாய் வளர்த்தல், விருந்தோம்பல், இறைமக்களின் பாதம் கழுவுதல், துன்புற்றோருக்கு உதவியளித்தல் முதலிய எல்லா நற்செயல்களையும் செய்து, தன் நடத்தைக்கு நற்சான்று பெற்றவளாகவும் இருக்கவேண்டும்.
இளம் கைம்பெண்களை இச்சபையில் ஏற்றுக்கொள்ளாதீர். ஏனெனில், கிறிஸ்துவிடமிருந்து பிரிக்கக்கூடிய சிற்றின்ப வேட்கை எழும் போது அவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள்.
அதோடு வீடுவீடாகச் சென்று, சோம்பேறிகளாயிருக்கக் கற்றுக்கொள்வார்கள். சோம்பேறிகளாயிருக்க மட்டுமன்று, தகாத பேச்சுக்கெல்லாம் இடம் கொடுத்து வம்பளக்கவும், பிறர் காரியங்களில் தலையிடவும் கற்றுக்கொள்வார்கள்.
எனவே, இளம் கைம்பெண்கள் மீளவும் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்று, குடும்பத்தை நடத்தவேண்டும். இதுவே என் விருப்பம். அப்பொழுது நம்மைக் குறைகூற எதிரிக்கு எவ்வித வாய்ப்பும் இராது.
கிறிஸ்தவப் பெண் ஒருத்தியின் வீட்டில் கைம்பெண்கள் இருந்தால், அவளே அவர்களைப் பார்த்துக்கொள்ளட்டும். சபையின்மேல் அச்சுமையைச் சுமத்தக் கூடாது. ஏனெனில், ஆதரவற்ற கைம்பெண்களைத்தான் சபை பார்த்துக்கொள்ள வேண்டும்.
கடவுள் முன்னிலையிலும், இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வானதூதர் முன்னிலையிலும் உம்மை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஒருதலைச் சார்பாய் எதுவும் செய்யாமல், நடுநிலைமையோடு இவற்றைக் கடைப்பிடியும்.
யார்மேலும் பதற்றத்தோடு கைகளை விரித்துப் பட்டம் கொடுக்காதீர். கொடுத்தால் அவர்களுடைய பாவங்களில் நீரும் பங்குகொள்வீர். உம்மைக் குற்றமற்றவராகக் காத்துக் கொள்ளும்.