அழிவின் குழியிலிருந்தும் மண் சகதியிலிருந்தும் அவர் என்னை வெளியே தூக்கியெடுத்தார், அவர் கற்பாறைமேல் என் கால்களை நிறுத்தி, நிற்பதற்கு ஒரு உறுதியான இடத்தையும் எனக்குக் கொடுத்தார்.
எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான புதுப்பாட்டை அவர் என் வாயிலிருந்து வரச்செய்தார். அநேகர் அதைக்கண்டு பயந்து, யெகோவாவிடம் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.
என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எங்களுக்காக செய்துள்ள அதிசயங்களும் உம்முடைய திட்டங்களும் அநேகம். உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை; அவைகளைக் குறித்து நான் விவரிக்கப்போனால், அவை எடுத்துரைக்க முடியாதளவு ஏராளமானவைகள்.
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; தகன காணிக்கைகளும் பாவநிவாரண காணிக்கைகளும் உமக்குத் தேவையில்லை; ஆனால் நான் கேட்டுக் கீழ்ப்படிவதற்கு என் செவிகளைத் திறந்துவிட்டீர்.
நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை; உமது உண்மையையும், இரட்சிப்பையும் குறித்து நான் பேசுகிறேன். உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் மகா சபைக்கு நான் மறைக்கவுமில்லை.
ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன; என் பாவங்கள் என்னை மூடிக்கொண்டதால், நான் பார்க்க முடியாதிருக்கிறேன். என் தலையிலுள்ள முடியைப் பார்க்கிலும், அவைகள் அதிகமானவை; அதினால் என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.