நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து, என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன். கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை, நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்.”
என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்; எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது; பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும் எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே.
“மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்; அவன் ஓடியோடி உழைத்து வீணாகவே அவன் செல்வத்தைச் சேர்த்துக் குவித்தாலும், அது யாரைப் போய்ச்சேரும் என அவன் அறியான்.
பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது, நீர் அவர்களுடைய செல்வத்தைப் பூச்சி அரிப்பதுபோல் கரைத்துவிடுகிறீர்; நிச்சயமாகவே எல்லா மனிதரும் கானல்நீரைப் போன்றவர்களே.
“யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; உதவிகேட்டு நான் கதறும் கதறுதலுக்குச் செவிகொடும்; என் அழுகையைக் கேளாமல் இருக்கவேண்டாம். என் தந்தையர்கள் எல்லோரையும் போலவே, நானும் உம்முடன் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனாகவும், குடியுரிமை அற்றவனாகவும் குடியிருக்கிறேன்.