English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Matthew Chapters

Matthew 7 Verses

1 “தீர்ப்புச் செய்யாதிருங்கள், நீங்களும் தீர்க்கப்படாதிருப்பீர்கள்.
2 நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
3 “நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல், உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்?
4 உன் கண்ணில் உத்திரம் இருக்கையில், நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்,’ என எப்படிச் சொல்லலாம்?
5 வேஷக்காரனே, முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு; அப்பொழுது உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கக்கூடும்.
6 “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்கவேண்டாம்; உங்கள் முத்துக்களைப் பன்றிகளுக்கு முன் வீச வேண்டாம். அப்படிச் செய்தால், அவை முத்துக்களை மிதித்துவிட்டு, திரும்பி உங்களையும் பீறிப்போடும்.
7 “கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும்.
8 ஏனெனில், கேட்கிற ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்கிறார்கள்; தேடுகிறவர்கள் கண்டடைகிறார்கள்; தட்டுகிறவர்களுக்குக் கதவு திறக்கப்படுகிறது.
9 “அப்பத்தைக் கேட்கும் தன் மகனுக்கு, உங்களில் யார் கல்லைக் கொடுப்பான்?
10 அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்?
11 தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, நல்ல அன்பளிப்புகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்!
12 ஆகவே, மற்றவர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் ஆகும்.
13 “இடுக்கமான வாசல் வழியாக உள்ளே செல்லுங்கள். ஏனெனில் அழிவுக்கு செல்லும் வாசல் அகலமானது, வழியும் விரிவானது. பலர் அதன் வழியாகவே உள்ளே செல்லுகிறார்கள்.
14 ஆனால் இடுக்கமான வாசலும், குறுகலான வழியுமே வாழ்வுக்கு வழிநடத்துகின்றன. ஒரு சிலர் மட்டுமே அதைக் கண்டுபிடிக்கிறார்கள்.
15 “பொய் தீர்க்கதரிசிகளைக்குறித்து விழிப்பாயிருங்கள். அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ஆனால் உள்ளத்திலோ அவர்கள் கடித்துக் குதறுகிற ஓநாய்கள்.
16 அவர்களது கனியினால் நீங்கள் அவர்கள் யாரென்று அடையாளம் கண்டுகொள்வீர்கள். மக்கள் முட்புதர்களில் இருந்து திராட்சைப் பழங்களையும், முட்செடிகளிலிருந்து அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
17 இல்லையே, அதேபோல், ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனியைக் கொடுக்கும். கெட்ட மரமோ, கெட்ட கனியையே கொடுக்கும்.
18 நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுப்பதில்லை.
19 நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும், வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பில் வீசப்படும்.
20 இவ்வாறு, அதனதன் கனியினால் மரங்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
21 “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று, சொல்லுகிற எல்லோரும், பரலோக அரசிற்குள் செல்வதில்லை. மாறாக பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்கள் மட்டுமே அதின் உள்ளே செல்வார்கள்.
22 அந்நாளில் அநேகர் என்னிடம், ‘ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரில் இறைவாக்கு உரைக்கவில்லையா? உமது பெயரில் பிசாசுகளைத் துரத்தவில்லையா? உமது பெயரில் பல அற்புதங்களைச் செய்யவில்லையா?’ என்று சொல்வார்கள்.
23 அப்பொழுது நான் அவர்களிடம், ‘அக்கிரம செய்கைக்காரர்களே! நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை, என்னைவிட்டு அகன்றுபோங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்வேன்.
24 “எனவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செய்கிற ஒவ்வொருவனும், கற்பாறையின்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ளவனைப் போலிருப்பான்.
25 மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது; அப்படி இருந்தும், வீடு விழவில்லை. ஏனெனில் அதன் அஸ்திபாரம் கற்பாறையின்மேல் போடப்பட்டிருந்தது.
26 ஆனால், எனது இவ்வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாத ஒவ்வொருவனும், மணலின்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாதவன் போலிருப்பான்.
27 மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது, அந்த வீடோ பலத்த சேதத்துடன் இடிந்து விழுந்தது.”
28 இவற்றை இயேசு சொல்லி முடித்தபோது, மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
29 ஏனெனில் அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார்.
×

Alert

×