English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Matthew Chapters

Matthew 16 Verses

1 பரிசேயரும் சதுசேயரும் இயேசுவிடம் வந்து, [*மூல மொழியில் பரலோகம் மற்றும் வானம் இவ்விரண்டிற்கும் ஒரே வார்த்தையாகும்.] வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படிக் கேட்டு, அவரைச் சோதித்தார்கள்.
2 இயேசு அதற்கு பதிலாக, “மாலை நேரம் ஆகும்போது ஆகாயம் சிவப்பாயிருந்தால், ‘நல்ல காலநிலை வரப்போகிறது’ என்று சொல்கிறீர்கள்.
3 காலை நேரத்தில் ஆகாயம் சிவப்பாயும் மந்தாரமாயும் இருந்தால், ‘இன்று புயல்காற்று வீசும்’ என்று சொல்கிறீர்கள். ஆகாயத்தின் தோற்றத்தை விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே! ஆனால் காலங்களின் அடையாளங்களை பகுத்தறிய உங்களால் முடியவில்லையே.
4 இந்தப் பொல்லாதவரும் விபசாரக்காரருமான இந்தத் தலைமுறையினர் அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்றார். இதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
5 அவர்கள் கடலைக் கடந்து மறுகரைக்குப் போனபோது, சீடர்கள் உணவு எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள்.
6 இயேசு அவர்களிடம், “கவனமாயிருங்கள்; பரிசேயர், சதுசேயர் என்பவர்களின் புளிப்புச்சத்தைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.
7 “இது நாம் அப்பம் கொண்டுவராததினால்” இப்படிச் சொல்லுகிறார் என்று சீடர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
8 அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம், “விசுவாசம் குறைந்தவர்களே, அப்பம் இல்லாததைக் குறித்து நீங்கள் ஏன் உங்களுக்குள்ளே பேசுகிறீர்கள்.
9 நீங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லையா? உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்து, மீதியானதை எத்தனை கூடைகள் நிறையச் சேர்த்தீர்கள்?
10 அல்லது ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குக் கொடுத்து, மீதியானதை எத்தனை கூடைகளில் சேர்த்தீர்கள்?
11 இப்படியிருக்க நான் அப்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை என்று நீங்கள் விளங்கிக்கொள்ளாதது எப்படி? ஆனால், பரிசேயர் சதுசேயரின் புளிப்பூட்டும் பொருளைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்றார்.
12 அப்பத்தைப் புளிப்பூட்டும் பொருளைக் குறித்து அல்ல, பரிசேயர், சதுசேயரின் போதனையைக்குறித்து விழிப்பாயிருக்கும்படியே அதைச் சொன்னார் என்று அப்பொழுதுதான் சீடர்கள் விளங்கிக்கொண்டார்கள்.
13 இயேசு செசரியா பிலிப்பு பகுதிக்கு வந்தபோது, அவர் தமது சீடர்களிடம், “மக்கள் மானிடமகனாகிய என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
14 அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் எரேமியா, அல்லது இறைவாக்கினர்களில் ஒருவர் என்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.
15 அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
16 அதற்கு சீமோன் பேதுரு, “நீர் கிறிஸ்து, வாழும் இறைவனின் மகன்” என்றான்.
17 அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால் [†மூல மொழியில் மாம்சமும் இரத்தமும் என்றுள்ளது.] வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கிற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது.
18 எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு [‡பேதுரு என்ற கிரேக்க வார்த்தைக்கு பாறை என்று அர்த்தம்.] , இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது.
19 நான் உனக்கு பரலோக அரசின் திறவுகோல்களைத் தருவேன்; நீ பூமியில் எதைக் கட்டுகிறாயோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீ பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்” என்றார்.
20 அதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், தாம் கிறிஸ்து என்பதை யாருக்கும் சொல்லவேண்டாம் என எச்சரித்தார்.
21 அந்த வேளையிலிருந்து, இயேசு தம்முடைய சீடர்களுக்கு தாம் எருசலேமுக்குப் போகவேண்டும் என்றும், மக்கள் யூதரின் தலைவராலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் அநேக துன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்றும், அத்துடன் தாம் கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் என்றும் சொல்லத் தொடங்கினார்.
22 அப்பொழுது பேதுரு, இயேசுவை தனியே அழைத்துக் கொண்டுபோய், “ஆண்டவரே, இது ஒருபோதும் நடக்கக்கூடாது! இது ஒருபோதும் உமக்கு நேரிடாது” என்று அவரைக் கண்டிக்கத் தொடங்கினான்.
23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப்பார்த்து, “சாத்தானே, எனக்குப் பின்னாகப் போ. நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; நீ இறைவனின் காரியங்களை சிந்திக்காமல் மனிதனுக்கு ஏற்றக் காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார்.
24 இதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், “யாராவது என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தமது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
25 தம் உயிரைக் காத்துக்கொள்கிறவர்கள் அதை இழந்துபோவார்கள். ஆனால் தமது உயிரை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
26 ஒருவர் உலகம் முழுவதையும் சொந்தமாக்கினாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனால், அதனால் அவருக்குப் பலன் என்ன? அல்லது ஒருவர் தம் ஆத்துமாவுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
27 மானிடமகனாகிய நான் எனது தூதர்களுடன் தம்முடைய பிதாவின் மகிமையில் வரப்போகிறேன். அப்பொழுது நான் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்ததற்கு ஏற்ற வெகுமதியைக் கொடுப்பேன்.
28 “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர் மானிடமகனாகிய நான் என்னுடைய அரசில் வருவதைக் காண்பதற்கு முன்னே மரணமடைய மாட்டார்கள்” என்றார்.
×

Alert

×