English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Mark Chapters

Mark 8 Verses

1 அந்நாட்களில், மக்கள் மீண்டும் ஒரு பெருங்கூட்டமாய் திரண்டிருந்தார்கள். அப்பொழுது சாப்பிட அவர்களிடம் ஒன்றும் இல்லாதிருந்ததினால், இயேசு தமது சீடரைத் தம்மிடமாய்க் கூப்பிட்டு,
2 “நான் இந்த மக்களுக்காக பரிதாபப்படுகிறேன்; இவர்கள் என்னுடன் ஏற்கெனவே மூன்று நாட்கள் தங்கிவிட்டார்கள். சாப்பிடுவதற்கோ, அவர்களிடம் ஒன்றுமில்லை.
3 பசியோடு நான் அவர்களை வீட்டிற்கு அனுப்பினால், வழியில் சோர்ந்து விழுவார்கள். ஏனெனில், சிலர் தூரத்திலிருந்து வந்திருக்கிறார்களே” என்றார்.
4 அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “அவர்களுக்குக் கொடுப்பதற்குப் போதுமான உணவை, சற்று தூரமான இந்த இடத்திலே எங்கே, யாரால் பெறமுடியும்?” என்று கேட்டார்கள்.
5 அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஏழு அப்பங்கள் இருக்கின்றன” என்று பதிலளித்தார்கள்.
6 இயேசு அங்கிருந்த மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார். பின்பு அவர் அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றி செலுத்தியபின், அவற்றைப் பிட்டு, அந்த மக்களுக்குக் கொடுக்கும்படி, தமது சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
7 அவர்களிடம் சில மீன்களும் இருந்தன; அவற்றிற்காகவும் இயேசு நன்றி செலுத்தி, அவற்றையும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்படி, சீடர்களுக்குச் சொன்னார்.
8 மக்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதற்குப் பின்பு மீதியான அப்பத் துண்டுகளைச் சீடர்கள் ஏழு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
9 கிட்டத்தட்ட நாலாயிரம்பேர் அங்கிருந்தார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்டபின்,
10 தமது சீடர்களுடனேகூட படகில் ஏறி, தல்மனூத்தா பகுதிக்கு வந்தார்.
11 அங்கு பரிசேயர்கள் வந்து இயேசுவிடம் வாதாடத் தொடங்கினார்கள். அவர்கள் அவரைச் சோதிக்கும்படியாக, வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படி கேட்டார்கள்.
12 இயேசு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர் ஏன் அடையாளத்தைத் தேடுகிறார்கள்? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இவர்களுக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்றார்.
13 பின்பு இயேசு அவர்களைவிட்டுத் திரும்பவும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார்.
14 சீடர்கள் அவ்வேளையில், தங்களுக்கு உணவைக் கொண்டுவர மறந்துபோனார்கள். படகிலே அவர்களிடம் ஒரு அப்பம் மட்டுமே இருந்தது.
15 இயேசு அவர்களிடம், “கவனமாய் இருங்கள். புளிப்பூட்டும் பொருளாகிய பரிசேயர், ஏரோதியரைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களை எச்சரித்தார்.
16 அதற்கு சீடர்கள், “தங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்தே இப்படிச் சொல்லுகிறார்” என்று சீடர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
17 அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம்: “உங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்து ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? நீங்கள் இன்னும் காணாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறீர்களா? உங்களுடைய இருதயங்கள் கடினமாய் இருக்கின்றனவோ?
18 உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேட்காதிருக்கிறீர்களா? ஏன், உங்களுக்கு ஞாபகம் இல்லையா?
19 நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தபோது, மீதியான அப்பத்துண்டுகளை, எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார். அவர்கள், “பன்னிரண்டு” என்றார்கள்.
20 “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டுக் கொடுத்தபோது, மீதியான அப்பத்துண்டுகளை, எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார். அதற்கு அவர்கள், “ஏழு” என்றார்கள்.
21 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இன்னும் நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையா?” என்றார்.
22 அவர்கள் பெத்சாயிதாவுக்கு வந்தபோது, சில மனிதர்கள் ஒரு குருடனைக் கொண்டுவந்து, இயேசு அவனைத் தொடவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டார்கள்.
23 அவர் அந்தக் குருடனுடைய கையைப் பிடித்து, கிராமத்துக்கு வெளியே கொண்டுபோனார். இயேசு அவனுடைய கண்களின்மேல் துப்பி, தமது கைகளை அவன்மேல் வைத்து, “நீ எதையாவது காண்கிறாயா?” என்று கேட்டார்.
24 அவன் நிமிர்ந்து பார்த்து, “நான் மனிதரைக் காண்கிறேன்; ஆனால் அவர்களோ நடந்து திரிகிற மரங்களைப்போல் காணப்படுகிறார்கள்” என்றான்.
25 இயேசு மீண்டும் ஒருமுறை தமது கைகளை அவனுடைய கண்களின்மேல் வைத்தார். அப்பொழுது அவனுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவன் திரும்பவும் தன்னுடைய பார்வையைப் பெற்று, எல்லாவற்றையும் தெளிவாய் கண்டான்.
26 இயேசு அவனிடம், கிராமத்துக்குப் போய் இதைப்பற்றிச் சொல்லவேண்டாம் என்று சொல்லி, அவனை அவனுடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
27 இயேசுவும் அவருடைய சீடர்களும் செசரியா, பிலிப்பி பட்டணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்றார்கள். வழியிலே அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
28 அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் இறைவாக்கினரில் ஒருவர் என்றும் சொல்கிறார்கள்” என்றார்கள்.
29 ஆனால், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். அதற்கு பேதுரு, “நீர் கிறிஸ்து” என்றான்.
30 அப்பொழுது இயேசு, “தம்மைக் குறித்து வேறுயாருக்கும் சொல்லவேண்டாம்” என எச்சரித்தார்.
31 மானிடமகனாகிய நான் அநேக பாடுகள் படவேண்டும் என்றும், யூதரின் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படுவேன் என்றும், அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்; அத்துடன் தாம் கொல்லப்படவேண்டும் என்றும், மூன்று நாட்களுக்குபின் உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்றும் சொன்னார்.
32 இயேசு இவற்றை ஒளிவுமறைவின்றி சொன்னபோது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கொண்டுபோய், அவரைக் கண்டிக்கத் தொடங்கினான்.
33 இயேசு திரும்பி தமது சீடர்களை நோக்கிப்பார்த்து, பேதுருவைக் கண்டித்து, “சாத்தானே எனக்குப் பின்னாகப் போ! நீ இறைவனுடைய காரியங்களைச் சிந்திக்காமல் மனிதனுக்கேற்ற காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார்.
34 அதற்குப் பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும், தமது சீடர்களையும் அழைத்துச் சொன்னதாவது: “யாராவது என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், தம்மையே வெறுத்து, தமது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
35 ஏனெனில், தம் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறவர்கள், அதை இழந்துபோவார்கள். எனக்காகவோ, நற்செய்திக்காகவோ தம் உயிரை இழக்கிறவர்கள், அதைக் காத்துக்கொள்வார்கள்.
36 யாராவது முழு உலகத்தையும் தமக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனால், அதனால் அவர்களுக்குப் பலன் என்ன?
37 யாராவது தங்கள் ஆத்துமாவுக்கு ஈடாக எதைக் கொடுக்கமுடியும்?
38 விபசாரமும் பாவமும் நிறைந்த இந்தத் தலைமுறையினர் மத்தியில், யாராவது என்னைக்குறித்தும், என் வார்த்தைகளைக்குறித்தும் வெட்கப்பட்டால், மானிடமகனாகிய நானும் பரிசுத்த தூதர்களுடன் என் பிதாவின் மகிமையில் வரும்போது, அவர்களைக்குறித்து வெட்கப்படுவேன்” என்றார்.
×

Alert

×