அவன் ஆரோனிடம், “நீ உன்னுடைய பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு குறைபாடற்ற இளங்காளையையும், உன்னுடைய தகன காணிக்கைக்காக குறைபாடற்ற ஒரு ஆட்டுக் கடாவையும் எடுத்து, அவற்றை யெகோவாவுக்கு முன்பாக கொண்டுவா.
பின்பு இஸ்ரயேலரிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘பாவநிவாரண காணிக்கைக்காக வெள்ளாட்டுக்கடாவையும், தகன காணிக்கைக்காக கன்றுக்குட்டியையும், ஒரு செம்மறியாட்டுக் குட்டியையும் எடுத்துக்கொள்ளுங்கள்; அவை இரண்டும் குறைபாடற்றதாயும், ஒரு வயதுடையதாயும் இருக்கவேண்டும்.
சமாதான காணிக்கைக்காக ஒரு மாட்டையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், எண்ணெய் கலந்து பிசைந்த தானியக் காணிக்கையுடன் யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தும்படி கொண்டுவாருங்கள். ஏனெனில் இன்று யெகோவா உங்களுக்குக் காட்சியளிப்பார்’ என்று சொல்” என்றான்.
ஆரோனுடைய மகன்கள் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள். ஆரோன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளில் பூசினான். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான்.
அதன்பின் தகன காணிக்கை மிருகத்தை அவன் வெட்டிக்கொன்றான். ஆரோனின் மகன்கள் இரத்தத்தை அவனிடம் கொடுத்தார்கள். அவன் அதை பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான்.
பின்பு ஆரோன், மக்களுக்கான காணிக்கையைக் கொண்டுவந்தான். அவன் மக்களுக்கான பாவநிவாரண காணிக்கையான வெள்ளாட்டை எடுத்து, அதை வெட்டிக்கொன்று, முன்பு பலியிட்ட மிருகத்தைப்போலவே பாவநிவாரண காணிக்கையாக அதைச் செலுத்தினான்.
பின்பு அவன் மக்களுக்கான சமாதான காணிக்கையாக, மாட்டையும், செம்மறியாட்டுக் கடாவையும் வெட்டிக்கொன்றான். ஆரோனின் மகன்கள் இரத்தத்தை அவனிடம் கொடுத்தார்கள். அவன் அதைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான்.
அதன்பின் ஆரோன் மக்களை நோக்கி தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தான். பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும், சமாதான காணிக்கையையும் பலியிட்டு முடித்துக் கீழே இறங்கினான்.
அதன்பின் மோசேயும் ஆரோனும் சபைக் கூடாரத்திற்குள்ளே போனார்கள். அவர்கள் வெளியே வந்து, மக்களை ஆசீர்வதித்தபொழுது, யெகோவாவினுடைய மகிமை மக்கள் அனைவருக்கும் முன் தோன்றியது.
யெகோவாவிடமிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த தகன காணிக்கையையும், கொழுப்பான பாகங்களையும் பட்சித்தது. மக்கள் அனைவரும் அதைக் கண்டபோது, மகிழ்ச்சியினால் ஆர்ப்பரித்து, முகங்குப்புற விழுந்தார்கள்.