{#1இயேசு கைதுசெய்யப்படுதல் } இயேசு மன்றாடி முடித்தபின்பு, அவர் அங்கிருந்து தமது சீடர்களுடன் கெதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றார். அதன் மறுபக்கத்தில் ஒரு தோட்டம் இருந்தது. இயேசுவும், அவருடைய சீடர்களும் அங்கே சென்றார்கள்.
எனவே யூதாஸ் படைவீரரில் ஒரு பிரிவினரையும், தலைமை ஆசாரியர்கள் மற்றும் பரிசேயர் ஆகியோருடைய சேவகர்களில் சிலரையும் கூட்டிக்கொண்டு அந்த தோட்டத்திற்கு வந்தான். அவர்கள் தீப்பந்தங்களையும், விளக்குகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தார்கள்.
அப்பொழுது வாள் வைத்துக்கொண்டிருந்த சீமோன் பேதுரு அதை உருவி எடுத்து, பிரதான ஆசாரியரின் வேலைக்காரனைத் தாக்கினான். அவனது வலது காது வெட்டுண்டது. அந்த வேலைக்காரனின் பெயர் மல்குஸ்.
{#1பேதுருவின் முதல் மறுதலிப்பு } சீமோன் பேதுருவும் இன்னொரு சீடனும் இயேசுவுக்குப் பின்னால் போய்க்கொண்டிருந்தார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானபடியால், அவன் இயேசுவுடனே பிரதான ஆசாரியரின் மாளிகை முற்றத்திற்குள் போனான்.
ஆனால் பேதுருவோ வெளியே வாசல் அருகே நிற்க வேண்டியதாயிருந்தது. பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமான அந்த இன்னொரு சீடன் திரும்பிவந்து, வாசல் காக்கும் பெண்ணுடனே பேசி, பேதுருவை உள்ளே கூட்டிக்கொண்டு போனான்.
அங்கே மிகவும் குளிராய் இருந்தது. அங்கேயிருந்த வேலைக்காரரும் சேவகர்களும் குளிர்காயும்படி, நெருப்புமூட்டி அதைச் சுற்றி நின்றார்கள். பேதுருவும் அங்கே அவர்களுடன் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.
இயேசு அவனுக்கு சொன்னதாவது: “நான் உலகத்துடன் பகிரங்கமாகப் பேசினேன். யூதரெல்லோரும் கூடிவருகின்ற ஜெப ஆலயங்களிலும், எருசலேம் ஆலயத்திலும் எப்பொழுதும் போதித்தேன். நான் இரகசியமாக எதுவுமே சொல்லவில்லை.
நீங்கள் ஏன் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்? நான் சொன்னவற்றைக் கேட்டவர்களிடம் விசாரியுங்கள். நான் என்ன சொன்னேன் என்பது நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும்.”
{#1பேதுரு இரண்டாம் மூன்றாம்முறை மறுதலித்தல் } சீமோன் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், ஒருவன் அவனிடம், “நீ அவனுடைய சீடர்களில் ஒருவன் அல்லவா?” என்று கேட்டான். “நான் அவருடைய சீடன் அல்ல” என்று பேதுரு மறுதலித்தான்.
பேதுருவினால் காது வெட்டப்பட்டவனின் உறவினராகிய ஒருவன், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனாயிருந்தான். அவன் பேதுருவிடம், “நீ இயேசுவுடனே அந்த ஒலிவ தோட்டத்தில் இருந்ததை நான் கண்டேனே” என்றான்.
{#1பிலாத்துவின் முன் இயேசு } பின்பு இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநனரின் அரண்மனைக்குக் கொண்டுசென்றார்கள். இதற்குள்ளாகப் பொழுது விடிந்து விட்டது. பஸ்காவைச் சாப்பிடத்தக்க நிலையில் தங்களை வைத்துக்கொள்ள அவர்கள் விரும்பி, அசுத்தப்படாமல் காத்துக்கொள்ளும்படி யூதர்கள் அந்த அரண்மனைக்குள் போகவில்லை.
அப்பொழுது பிலாத்து, “நீங்களே இவனைக் கொண்டுபோய் உங்கள் மோசேயின் சட்டத்தின்படி இவனுக்கு நியாயத்தீர்ப்பு வழங்குங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “யாருக்கும் மரண தண்டனை வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை” என்றார்கள்.
அப்பொழுது பிலாத்து, “நான் என்ன ஒரு யூதனா? உனது மக்களும் உனது தலைமை ஆசாரியர்களுமே உன்னை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நீ செய்தது என்ன?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “நான் இந்த உலகத்துக்குரிய அரசன் அல்ல. அப்படியிருந்தால், யூதர்களிடம் நான் ஒப்புக்கொடுக்கப்படுவதைத் தடுக்கும்படி எனது ஊழியக்காரர்களே போராடியிருப்பார்கள். எனது அரசோ வேறு இடத்தைச் சேர்ந்தது” என்றார்.
அதற்கு பிலாத்து, “அப்படியானால், நீ ஒரு அரசன்தானே!” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நான் ஒரு அரசன் என்று நீர் சொல்வது சரிதான். ஏனெனில் சத்தியத்திற்கு சாட்சி கொடுக்கும்படியே நான் பிறந்தேன். அதற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். சத்தியத்திற்கு உரியவர்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செவிகொடுக்கிறார்கள்” என்றார்.
அதற்கு பிலாத்து, “சத்தியம் என்றால் என்ன?” என்று கேட்டான். அப்படிக் கேட்ட அவன் மீண்டும் வெளியே போய் யூதரிடம், “நான் இவனுக்கு எதிராய் குற்றம் சாட்டுவதற்கான எந்த ஆதாரத்தையும் காணவில்லை.
ஆகவே பஸ்கா என்ற பண்டிகை காலத்தில் ஒரு கைதியை நான் உங்களுக்காக விடுதலை செய்வது வழக்கமல்லவா? எனவே ‘யூதரின் அரசனை’ நான் விடுதலைசெய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு அவர்களோ, “இல்லை, அவனை அல்ல! பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். அந்த பரபாஸ் என்பவனோ ஒரு கலவரத்தில் ஈடுபட்டவனாய் இருந்தான்.