English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Job Chapters

Job 38 Verses

1 அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்:
2 “அறிவற்ற வார்த்தைகளினால் என் ஆலோசனையை தெளிவற்றதாக்குகிற இவன் யார்?
3 இப்பொழுது நீ ஒரு திடமனிதனாய் நில்; நான் உன்னிடம் கேள்வி கேட்கப்போகிறேன், நீ எனக்குப் பதில் சொல்லவேண்டும்.
4 “நான் பூமிக்கு அஸ்திபாரம் போடும்போது நீ எங்கேயிருந்தாய்? உனக்கு விளங்கினால் அதை எனக்குச் சொல்.
5 அதின் அளவைக் குறித்தவர் யார்? அதின்மேல் அளவுநூலைப் பிடித்தது யார்? நீ சொல், உனக்குத் தெரிந்திருக்குமே!
6 அதின் தூண்கள் எதன்மேல் அமைக்கப்பட்டிருக்கின்றன? அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?
7 அப்பொழுது விடிவெள்ளிகள் ஒன்றாகக்கூடி பாட்டுப்பாடின; இறைத்தூதர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனரே.
8 “கடல் தன் கருப்பையிலிருந்து வெடித்து வெளிப்பட்டபோது, அதைக் கதவுகளுக்குப் பின்வைத்து அடைத்தவர் யார்?
9 நான் மேகத்தை அதற்கு உடையாக வைத்தபோதும், காரிருளினால் அதைச் சுற்றியபோதும்,
10 நான் அதற்கு எல்லைகளை அமைத்துத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் வைத்தபோது நீ எங்கேயிருந்தாய்?
11 நான் அதனிடம், ‘நீ இதுவரை வா, மீறி வராதே; உன் அகங்கார அலைகள் அடங்குவதாக’ என்று சொன்னபோது நீ எங்கேயிருந்தாய்?
12 “உன் வாழ்நாளில் காலைநேரத்திற்குக் கட்டளையிட்டு, அதிகாலைப்பொழுதுக்கு அதின் இடத்தைக் காட்டினதுண்டோ?
13 இவ்வாறு, பூமியின் ஓரங்களைப் பிடித்து அதிலிருந்து கொடியவர்களை உதறித் தள்ளும்படி சொன்னதுண்டோ?
14 முத்திரையிடப்பட்ட களிமண்போல் பூமி உருப்பெறுகிறது; அதின் இயற்கைத் தோற்றங்களும் உடைகளைப்போல் நிற்கின்றன.
15 கொடியவர்களுக்கு வெளிச்சம் மறுக்கப்படுகிறது; உயர்த்தப்பட்ட அவர்களின் புயம் முறிக்கப்படும்.
16 “கடலின் ஊற்றுக்களுக்கு நீ போனதுண்டோ? அல்லது ஆழத்தின் உள்ளிடங்களில் நடந்திருக்கிறாயோ?
17 மரண வாசல்கள் உனக்குக் காண்பிக்கப்பட்டதுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ கண்டதுண்டோ?
18 பூமியின் அகன்ற வெளிகளை நீ விளங்கிக்கொண்டாயோ? இவைகளெல்லாம் உனக்குத் தெரியுமானால் எனக்குச் சொல்.
19 “வெளிச்சம் வசிக்கும் இடத்திற்குப் போகும் வழி எது? இருள் எங்கே குடியிருக்கிறது?
20 அவற்றை அவை இருக்கும் இடத்திற்குக் கூட்டிச்செல்ல உன்னால் முடியுமா? அவைகள் தங்குமிடத்திற்கான பாதைகளை நீ அறிவாயோ?
21 இவை உனக்குத் தெரிந்திருக்குமே; இவைகளுக்கு முன்னே நீ பிறந்து பல வருடங்கள் வாழ்ந்துவிட்டாய் அல்லவா!
22 “உறைபனியின் களஞ்சியங்களுக்குள் நீ போயிருக்கிறாயோ? பனிக்கட்டி மழையின் களஞ்சியங்களைக் கண்டிருக்கிறாயோ?
23 கஷ்ட காலத்திலும், கலகமும் யுத்தமும் வரும் நாட்களிலும் பயன்படுத்தும்படி நான் அவைகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.
24 மின்னல் புறப்படும் இடத்திற்கு வழி எங்கே? கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே?
25 பலத்த மழைக்கு வாய்க்காலை வெட்டுபவர் யார்? இடி மின்னலோடு வரும் மழைக்கு வழியை ஏற்படுத்துகிறவர் யார்?
26 ஒருவரும் குடியிராத நிலத்திற்கும், எவருமே இல்லாத பாலைவனத்திற்கும் பசுமையைக் கொடுப்பதற்காகவும்,
27 வனாந்திரமான பாழ்நிலத்தை பசுமையாக்கி, அதில் புல் பூண்டுகளை முளைக்கப்பண்ணும்படி செய்கிறவர் யார்?
28 மழைக்கு ஒரு தகப்பன் உண்டோ? பனித்துளிகளைப் பெற்றெடுத்தவர் யார்?
29 யாருடைய கருப்பையிலிருந்து பனிக்கட்டி வருகிறது? வானங்களிலிருந்து வரும் உறைபனியைப் பெற்றெடுக்கிறவர் யார்?
30 தண்ணீர்கள் கல்லைப்போலவும், ஆழத்தின் மேற்பரப்பு உறைந்துபோகவும் செய்கிறவர் யார்?
31 “அழகான கார்த்திகை நட்சத்திரத்தை நீ இணைக்கமுடியுமோ? மிருகசீரிட நட்சத்திரத்தைக் கட்டவிழ்க்க உன்னால் முடியுமோ?
32 விடிவெள்ளிக் கூட்டங்களை அதினதின் காலத்தில் கொண்டுவருவாயோ? சிம்மராசி நட்சத்திரத்தையும் அதின் கூட்டத்தையும் வழிநடத்த உன்னால் முடியுமோ?
33 வானமண்டலத்தை ஆளும் சட்டங்களை நீ அறிவாயோ? பூமியின்மேல் அவைகளின் ஆட்சியை நீ அமைப்பாயோ?
34 “நீ மேகங்களுக்குச் சத்தமிட்டுச் சொல்லி வெள்ளம் உன்னை மூடும்படிச் செய்வாயோ?
35 மின்னல்களின் தாக்குதல்களை அதின் வழியிலே அனுப்புவது நீயா? ‘இதோ பார், நாங்கள் இருக்கிறோம்’ என அவை உன்னிடம் அறிவிக்குமோ?
36 இருதயத்தை ஞானத்தால் நிரப்பியவரும், மனதுக்கு விளங்கும் ஆற்றலைக் கொடுத்தவரும் யார்?
37 யாருக்கு மேகங்களைக் கணக்கிடும் ஞானம்? வானத்தின் தண்ணீர்ச் சாடிகளை,
38 தூசியானது மண்கட்டிகளாகி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?
39 “நீ சிங்கத்திற்கு இரையை தேடி, அவைகளின் பசியை தீர்ப்பாயோ?
40 சிங்கக்குட்டிகள் குகைகளிலும் புதர்களுக்குள்ளும் இருக்கும்போது அவைகளின் பசியை நீ தீர்ப்பாயோ?
41 காக்கைக்குஞ்சுகள் இறைவனை நோக்கிக் கூப்பிட்டு, உணவின்றி அலையும்போது உணவைக் கொடுப்பது யார்?
×

Alert

×