English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 14 Verses

1 வறட்சியைக் குறித்து யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவாகும்:
2 யூதா துக்கப்படுகிறது; அதன் பட்டணங்கள் நலிவுறுகின்றன; அவர்கள் நாட்டுக்காகப் புலம்புகிறார்கள். எருசலேமிலிருந்து ஒரு அழுகுரல் எழும்புகிறது.
3 உயர்குடி மக்கள் தங்கள் வேலைக்காரரை தண்ணீர் எடுப்பதற்கு அனுப்புகிறார்கள். அவர்கள் போய் தொட்டிகளில் தண்ணீரைக் காணாமல், தங்கள் ஜாடிகளை வெறுமையாகவே கொண்டுவருகிறார்கள். அவர்கள் மனச்சோர்வுடனும், ஏமாற்றத்துடனும் தங்கள் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்.
4 நாட்டில் மழையில்லாததால் நிலம் வெடித்திருக்கிறது. விவசாயிகள் மனச்சோர்வுடன் தங்கள் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்.
5 புல் இல்லாததினால் வயல்வெளியிலுள்ள பெண்மானும் புதிதாய் ஈன்ற தன் குட்டிகளை கைவிடுகிறது.
6 காட்டுக் கழுதைகள் வறண்ட மேடுகளில் நின்று, தாகமுள்ள நரிகளைப்போல் இளைக்கின்றன. அவைகளுக்கு மேய்ச்சல் நிலமின்றி கண்பார்வை மங்கிவிடுகிறது.
7 எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாகச் சாட்சி கூறினாலும், யெகோவாவே, உமது பெயரின் நிமித்தம் நீர் ஏதாவது எங்களுக்கு செய்யும். எங்கள் பின்மாற்றம் பெரிதாயிருக்கிறது. நாங்கள் உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்திருக்கிறோம்.
8 இஸ்ரயேலின் எதிர்ப்பார்ப்பே, துயர வேளையின் மீட்பரே, நீர் நாட்டில் ஒரு அந்நியனைப்போலவும், ஒரு இரவு மட்டும் தங்கும் பயணியைப்போலவும் ஏன் இருக்கிறீர்?
9 நீர் திகைப்படைந்த மனிதனைப்போலவும், காப்பாற்ற வலுவற்ற போர்வீரனைப்போலவும் ஏன் இருக்கிறீர்? யெகோவாவே, நீர் எங்கள் மத்தியில் இருக்கிறீர்; நாங்கள் உமது பெயரைத் தரித்திருக்கிறோம். எங்களைக் கைவிடாதேயும்.
10 மேலும் இந்த மக்களைப் பற்றி யெகோவா சொல்வது இதுவே: இவர்கள் சுற்றித்திரிய பெரிதும் விரும்புகிறார்கள். தங்கள் கால்களைக் கட்டுப்படுத்துகிறதில்லை. ஆகையினால் யெகோவா அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இப்பொழுது அவர்களின் கொடுமைகளை நினைத்து, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார்.
11 மேலும் யெகோவா என்னிடம், இந்த மக்களின் நன்மைக்காக நீ என்னிடம் விண்ணப்பம் செய்யவேண்டாம்.
12 அவர்கள் உபவாசித்தாலும் நான் அவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்கமாட்டேன். அவர்கள் தகனபலியையும், தானியபலியையும் படைத்தாலும், அவைகளை நான் ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன். அதற்குப் பதிலாக நான் அவர்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் அழிக்கப்போகிறேன் என்றார்.
13 அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே! இந்த பொய்யான இறைவாக்கு உரைப்போர் மக்களை நோக்கி, ‘நீங்கள் வாளைக் காணமாட்டீர்கள்; பஞ்சத்தினால் பாதிக்கப்படமாட்டீர்கள்; நான் இந்த இடத்தில் உங்களுக்கு நீடித்த சமாதானத்தை நிச்சயம் தருவேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்றேன்.
14 அப்பொழுது யெகோவா என்னிடம், “பொய் இறைவாக்கு உரைப்போர் என்னுடைய பெயரைக்கொண்டு பொய்யையே இறைவாக்கு என்று சொல்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவுமில்லை; நியமிக்கவுமில்லை. அவர்களோடு பேசவுமில்லை. அவர்களோ பொய்யான தரிசனத்தையும், குறிசொல்லுதலையும், விக்கிரக வணக்கத்தையும், தங்கள் மனதின் வஞ்சகத்தையுமே இறைவாக்கு என்று உரைக்கிறார்கள்” என்றார்.
15 தன் பெயரினால் இறைவாக்கு உரைக்கிற பொய்யான இறைவாக்கு உரைப்போரைப்பற்றி யெகோவா சொல்வது இதுவே: “நான் அவர்களை அனுப்பவில்லை. ஆகிலும் அவர்கள், ‘இந்த நாட்டை வாளோ, பஞ்சமோ தொடாது’ என்கிறார்கள். அதே இறைவாக்கு உரைப்போர் வாளாலும், பஞ்சத்தாலும் அழிவார்கள்.
16 அவர்களுடைய இறைவாக்கைக் கேட்கும் மக்களும் பஞ்சத்தினாலும், வாளினாலும் எருசலேமின் வீதிகளில் விழுவார்கள். அவர்களையாவது, அவர்களின் மனைவிகளையாவது, மகன்களையாவது, மகள்களையாவது அடக்கம்பண்ண ஒருவரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஏற்ற பேராபத்தை அவர்கள்மீது ஊற்றுவேன்” என்றார்.
17 இந்த வார்த்தைகளை அவர்களிடம் சொல்: “அவர்களை நோக்கி, இரவும், பகலும் என் கண்களிலிருந்து கண்ணீர் ஓயாமல் சிந்தட்டும். என் மக்கள், என் கன்னிகை மகள் கடும் காயம் அடைந்து நொறுங்குண்டிருக்கிறாள்.
18 நான் நாட்டுப்புறத்திற்கு போகையில் வாளினால் கொலையுண்டவர்களைக் காண்கிறேன். பட்டணத்துக்குள் போகையில் பஞ்சத்தால் ஏற்பட்ட அழிவையும் காண்கிறேன். இறைவாக்கினரும், ஆசாரியரும் தாங்கள் அறியாத ஒரு நாட்டிற்குப் போய்விட்டார்கள்.”
19 யெகோவாவே! நீர் யூதாவை முழுவதாகப் புறக்கணித்துத் தள்ளிவிட்டீரோ? நீர் சீயோனை இகழ்கிறீரோ? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களைத் துன்புறுத்தியிருக்கிறீர்? நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்தோம்; ஆனால் ஒரு நன்மையும் வரவில்லை. குணமாகும் வேளையை எதிர்பார்த்தோம்; ஆனால் பயங்கரம் மட்டுமே காணப்பட்டது.
20 யெகோவாவே, எங்கள் கொடுமையையும், எங்கள் முற்பிதாக்களின் குற்றத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் மெய்யாகவே உமக்கு எதிராகப் பாவம்செய்தோம்.
21 உமது நாமத்தினிமித்தம் எங்களை வெறுக்காதேயும்; உமது மகிமையான அரியணையைக் கனவீனப்படுத்தாதேயும். நீர் எங்களுடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும். அதை முறித்து விடாதிரும்.
22 பிறநாட்டினரின் பயனற்ற விக்கிரகங்களில் எதுவும் மழையைப் பெய்யப்பண்ணுமோ? ஆகாயங்கள் தாமாகவே மழையைப் பொழிகின்றனவோ? இல்லை; எங்கள் இறைவனாகிய யெகோவாவே! நீரேதான் அதைச் செய்கிறீர். ஆதலால் எங்கள் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது. இதையெல்லாம் செய்கிறவர் நீரே.
×

Alert

×