English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Isaiah Chapters

Isaiah 44 Verses

1 “ஆனால் இப்பொழுதோ என் அடியவனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரயேலே, கேள்.
2 யெகோவா சொல்வது இதுவே: உன்னை உண்டாக்கியவரும், உன்னைக் கருப்பையில் உருவாக்கியவரும், உனக்கு உதவிசெய்யப் போகிறவருமாகிய அவர் சொல்வதாவது: என் அடியவனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே [*யெஷூரனே என்பது இஸ்ரயேல் எனப்படும்.] , பயப்படாதே.
3 நான் தாகமுள்ள நிலத்தில் தண்ணீரை ஊற்றுவேன்; வறண்ட நிலத்தில் நீரோடைகளை உண்டாக்குவேன். உன் சந்ததியின்மேல் எனது ஆவியானவரையும், உன் பிள்ளைகள்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
4 அவர்கள் வெளிநிலத்திலுள்ள புல்லைப்போலவும், நீரோடைகளுக்கு அருகில் அலறிச்செடிகளைப் போலவும் விரைவாய் வளருவார்கள்.
5 ஒருவன், ‘நான் யெகோவாவுக்கு உரியவன்’ என்பான்; வேறொருவன், தன்னை யாக்கோபின் பெயரால் அழைத்துக்கொள்வான்; இன்னொருவன், தன் கையில், ‘கர்த்தருடையவன்’ என்று எழுதி, இஸ்ரயேல் என்று பெயரிட்டுக்கொள்வான்.
6 “யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலின் அரசரும், மீட்பருமாகிய சேனைகளின் யெகோவா கூறுவதாவது, ஆரம்பமும் நானே, முடிவும் நானே; என்னையன்றி வேறு இறைவன் இல்லை
7 என்னைப்போல் யாரும் உண்டோ? அப்படியிருந்தால் அவன் அதைப் பிரசித்தம்பண்ணட்டும். அதை அறிவித்து எனக்குமுன் சொல்லட்டும், முற்காலத்திலிருந்த என் மக்களை நான் நிலைநிறுத்திய காலத்திலிருந்து நடந்தவற்றையும் இனி என்ன நடக்கப்போகிறதையும் சொல்லட்டும். ஆம், நிகழப்போவதை அவன் முன்னறிவிக்கட்டும்.
8 நடுங்காதீர்கள், பயப்படாதீர்கள். இதை நான் வெகுகாலத்துக்கு முன்பே பிரசித்தப்படுத்தி, அறிவிக்கவில்லையா? நீங்கள் எனது சாட்சிகள். என்னைத்தவிர வேறு இறைவன் உண்டோ? இல்லை, வேறு கன்மலையும் இல்லை; அப்படி ஒருவரையும் நான் அறியேன்.”
9 விக்கிரங்களை உருவாக்குகிறவர்கள் எல்லோரும் வீணர்; அவர்கள் அருமையாகக் கருதுபவை பயனற்றவை. அவைகளுக்காகப் பேசுபவர்களும் குருடர்; அவர்கள் தங்களை வெட்கமாக்கிக்கொள்ளும் அறிவீனர்.
10 தனக்கு ஒருவித பயனையும் தராத தெய்வத்தின் சிலைகளைச் செதுக்கி, ஒரு விக்கிரகத்தை வார்ப்பிப்பவன் யார்?
11 அவனும் அவனைப் போன்றவர்களும் வெட்கம் அடைவார்கள்; அதைச் செய்யும் கைவினைஞர் மனிதரே. அவர்கள் எல்லோரும் கூடிவந்து என்முன் நிற்கட்டும்; அவர்கள் எல்லோரும் பயங்கரத்திற்கும், அவமானத்துக்கும் உள்ளாவார்கள்.
12 கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்து, கரி நெருப்பிலிட்டு உருக்கி, சுத்தியலால் அடித்து விக்கிரகத்தை வடிவமைக்கிறான்; தன் கையின் பெலத்தினால் அதற்கு உருவத்தைக் கொடுக்கிறான். பட்டினியினால் அவன் தன் பெலனை இழக்கிறான், தண்ணீரைக் குடிக்காமல் சோர்ந்துபோவான்.
13 தச்சன் கோலினால் மரத்தை அளந்து, வெண்கட்டியால் குறியிடுகிறான். அவன் அதை உளிகளினால் உருப்படுத்தி, கவராயத்தால் குறிக்கிறான். அவன் மனிதனின் எல்லாச் சிறப்பையும் அதற்குக் கொடுத்து அதை மனித உருவில் வடிவமைக்கிறான்; அது ஒரு கோவிலில் இருக்கும்படியே இப்படிச் செய்கிறான்.
14 அவன் கேதுரு மரங்களை வெட்டி வீழ்த்துகிறான், தேவதாரு மரங்களையும், கர்வாலி மரங்களையும் அவன் தனக்கென்று வைத்துக்கொள்கிறான். அதை அவன் காட்டு மரங்களின் மத்தியில் வளர விடுகிறான்; அவன் சவுக்கு மரத்தை நாட்டுவான், மழை அதை வளரச் செய்கின்றது.
15 அது மனிதனுக்கு எரிபொருளாக இருக்கிறது; அவன் அவைகளில் ஒரு பகுதியை எடுத்து எரித்து குளிர்காய்கிறான், ஒரு பகுதியால் நெருப்புமூட்டி அப்பத்தை வேகவைக்கிறான். ஆனால் இன்னொரு பகுதியால் ஒரு தெய்வத்தையும் செய்து அதை வழிபடுகிறான்; அவன் ஒரு விக்கிரகத்தையும் செய்து, அதற்குமுன் விழுந்து வணங்குகிறான்.
16 மரத்தின் ஒரு துண்டை அவன் நெருப்பில் எரிக்கிறான்; அதின்மேல் தன் உணவைத் தயாரிக்கிறான், தன் இறைச்சியையும் வாட்டி, தான் திருப்தியாகச் சாப்பிடுகிறான். அவன் அதில் குளிர்காய்ந்துகொண்டும், “ஆகா! இந்தச் சூடு இதமானது! அருமையான நெருப்பைக் காண்கின்றேன்” என்கிறான்.
17 எஞ்சிய மரத்தின் பகுதியில் விக்கிரகமொன்றைத் தனது தெய்வமாகச் செய்கிறான்; அதற்குமுன் விழுந்து வழிபடுகிறான். அதை வணங்கி, “நீயே என் தெய்வம், என்னைக் காப்பாற்று!” என்கிறான்.
18 அவற்றிற்கு ஒன்றுமே தெரியாது, அவற்றிற்கு ஒன்றும் விளங்குவதில்லை; பார்க்க முடியாதபடி அவைகளின் கண்கள் மூடப்பட்டிருக்கின்றன; விளங்கிக்கொள்ளாதபடி அவைகளின் இருதயமும் அடைக்கப்பட்டு இருக்கின்றன.
19 “இம்மரத்தின் பாதியை நான் எரிபொருளாய் உபயோகித்தேன்; அதன் தணலின்மேல் ரொட்டியை வேகவைத்து, இறைச்சியையும் வாட்டிச் சாப்பிட்டேன். அப்படியிருக்க, எஞ்சிய பகுதியினால் நான் அருவருக்கத்தக்க விக்கிரகத்தைச் செய்யலாமா? ஒரு மரக்கட்டையின் முன்னால் நான் விழுந்து வணங்கலாமா?” என்று சொல்லுவதற்கு எவனுமே சிந்திப்பதில்லை. அதற்கான அறிவோ, விளக்கமோ எவனிடத்திலும் இல்லை.
20 அவன் சாம்பலைத் தின்கிறான், அவனுடைய வஞ்சிக்கப்பட்ட இருதயம் அவனைத் தவறான வழியில் நடத்துகிறது. அவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலாது, “எனது வலதுகையில் இருக்கிற இந்த விக்கிரகம் பொய்” என்று சொல்லாமலும் இருக்கிறான்.
21 “யாக்கோபே, இவற்றை நீ நினைவில் வைத்துக்கொள்; ஏனெனில் இஸ்ரயேலே, நீ என் அடியவன். நான் உன்னைப் படைத்தேன், நீ என் அடியவன்; இஸ்ரயேலே, நான் உன்னை மறக்கமாட்டேன்.
22 நான் உன் குற்றங்களை ஒரு மேகத்தைப் போலவும் உன் பாவங்களை காலை நேரத்து மூடுபனியைப் போலவும் அகற்றியிருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வா, ஏனெனில் நான் உன்னை மீட்டிருக்கிறேன்.”
23 வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; யெகோவாவே இதைச் செய்திருக்கிறார். கீழிருக்கும் பூமியே, உரத்த சத்தமிடு. மலைகளே, காடுகளே, மரங்களே, குதூகலித்துப் பாடுங்கள். ஏனெனில், யெகோவா யாக்கோபை மீட்டு, இஸ்ரயேலில் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார்.
24 “உங்கள் மீட்பரும், உங்களை கருப்பையில் உருவாக்கியவருமான, யெகோவா சொல்வது இதுவே: “நானே யெகோவா, நான் எல்லாவற்றையும் படைத்தேன், நான் தனியாகவே வானங்களை விரித்து, பூமியையும் பரப்பினேன்.
25 நானே கட்டுக்கதை சொல்பவர்கள் கூறும் அடையாளங்களை நிறைவேறாமல் செய்து, குறிசொல்வோரை மூடர்களாக்கி, ஞானிகளின் அறிவை வீழ்த்தி, அவைகளை மூடத்தனமாக்குபவரும் நானே.
26 நானே எனது ஊழியர்களின் வார்த்தைகளை உறுதிபடுத்துகிறேன்; எனது தூதுவர்களின் ஆலோசனைகளை நிறைவேற்றுகிறேன். “எருசலேமைப்பற்றி, ‘அது குடியிருப்பாக்கப்படும்’ என்றும் யூதாவின் பட்டணங்களைப் பற்றி, ‘அவை கட்டப்படும்’ என்றும், அவர்களின் பாழிடங்களைப்பற்றி, ‘நான் மீண்டும் அவைகளைக் கட்டுவேன்,’ என்றும் கூறுகிறேன்,
27 நானே ஆழமான நீர்நிலைகளைப் பார்த்து, ‘வறண்டு போ, உனது நீரூற்றுகளை நான் வற்றப்பண்ணுவேன்’ என்று சொல்கிறேன்.
28 நானே கோரேசைப்பற்றி, ‘அவன் எனது மேய்ப்பன்; எனது விருப்பம் எல்லாவற்றையும் நிறைவேற்றுவான், அவன் எருசலேமைப்பற்றி, “அது திரும்பவும் கட்டப்படட்டும்” என்றும், ஆலயத்தைப்பற்றி, “அதன் அஸ்திபாரங்கள் போடப்படட்டும்” என்றும் சொல்லுவான்’ என்று சொல்கிறேன்.”
×

Alert

×