நீ தாழ்த்தப்பட்டு நிலத்திலிருந்து பேசுவாய், உனது பேச்சு புழுதியிலிருந்து முணுமுணுக்கும். உனது குரல் செத்தவனின் ஆவியைப்போல் பூமியிலிருந்து வரும்; உனது பேச்சு புழுதியிலிருந்து தாழ் குரலாய் வரும்.
ஆனாலும் யெகோவாவின் நிமித்தம் உனது அநேக பகைவர்கள் திடீரென புழுதியைப்போல் ஆவார்கள்; இரக்கமில்லாதவரின் கூட்டங்கள் பறக்கும் பதரைப்போல் ஆகும். சடுதியாய், ஒரு நொடிப்பொழுதில்,
அப்பொழுது அரியேலுக்கு விரோதமாய்ப் போரிடும் எல்லா நாடுகளின் கூட்டத்தாரும் அதன் அரண்களையும் தாக்கி, முற்றுகையிடுகிறவர்கள் ஒரு கனவுபோலவும், இரவின் தரிசனம் போலவும் மறைந்துபோவார்கள்.
அவர்கள் நினைத்திருந்த வெற்றியோ, பசியுள்ளவன் தான் சாப்பிடுவதாகக் கனவு கண்டும் அவன் விழித்தவுடன் பசியுடனே இருப்பதுபோலவும், தாகமுள்ளவன் தான் குடிப்பதாகக் கனவு கண்டும் அவன் விழித்தவுடன் தீராத தாகத்துடன் மயங்குவதுபோலவும், சீயோன் மலையை எதிர்த்துப் போரிடும் எல்லா நாடுகளின் கூட்டத்திற்கும் இருக்கும்.
அவர்களுக்கோ இந்த தரிசனம் முழுவதும் முத்திரை இடப்பட்ட சுருளிலிருக்கும் வார்த்தைகளைப்போல் மட்டுமே இருக்கும். நீ அதை வாசிக்கக்கூடிய ஒருவனிடம் கொடுத்து, “தயவுசெய்து இதை வாசி” எனச் சொன்னால் அவன், “எனக்கு வாசிக்க முடியாது. அது முத்திரையிடப்பட்டிருக்கிறது” என்பான்.
எனவே யெகோவா சொல்கிறார்: “இந்த மக்கள் தங்கள் வாயின் வார்த்தைகளினால் என்னைக் கிட்டிச் சேருகிறார்கள்; தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள். ஆனால் அவர்களுடைய இருதயங்களோ எனக்கு வெகுதூரமாய் இருக்கின்றன. அவர்கள் எனக்குச் செய்யும் வழிபாடு மனிதர்களால் போதிக்கப்பட்ட சட்டங்களாகவே இருக்கின்றன.
ஆகையால், இன்னும் ஒருமுறை அதிசயங்கள்மேல் அதிசயங்களால் இம்மக்களை வியப்படையச் செய்வேன். ஞானிகளுடைய ஞானம் அழிந்துபோகும், அறிவாளிகளின் அறிவு ஒழிந்துபோகும்.”
தங்களுடைய திட்டங்களை யெகோவாவிடமிருந்து மறைப்பதற்காக மிக்க முயற்சி செய்கிறவர்களுக்கு ஐயோ கேடு! இருண்ட இடங்களில் தமது செயல்களைச் செய்து, “நம்மைக் காண்பவன் யார்? நம்மை அறிகிறவன் யார்?” என நினைக்கிறவர்களுக்கும் ஐயோ கேடு!
நீங்கள் காரியங்களைத் தலைகீழாக்கி, குயவனைக் களிமண்ணாக எண்ணுகிறீர்களே! உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கியவனைப் பார்த்து, “இவர் என்னை உண்டாக்கவில்லை” என்றும் பாத்திரமானது குயவனைப் பார்த்து, “இவருக்கு ஒன்றுமே தெரியாது” என்றும் கூறலாமோ?
இவர்கள் தங்கள் பேச்சினால் ஒருவனைக் குற்றவாளியாக்கி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறப் பண்ணுகிறார்கள். இவ்வாறு பொய்ச் சாட்சியத்தினால் குற்றமற்றவனுக்கு நீதிவழங்க மறுக்கிறார்கள்; அதனாலேயே இல்லாதொழிக்கப்படுவார்கள்.
அவர்கள் எனது கரங்களின் வேலையாகிய, தங்கள் பிள்ளைகளை தங்கள் மத்தியில் காணும்போது, எனது பெயரைப் பரிசுத்தமாய் வைத்திருப்பார்கள். அவர்கள் யாக்கோபின் பரிசுத்தரின் பரிசுத்தத்தை உண்மையென்று ஒப்புக்கொண்டு, இஸ்ரயேலின் இறைவனிடம் பயபக்தி உள்ளவர்களாய் இருப்பார்கள்.