உங்கள் தலைவர்கள் யாவரும் சேர்ந்து ஓடிவிட்டார்கள்; வில்லை நாணேற்றாமலே அவர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள். பகைவன் வெகு தூரத்திலிருக்கும்போதே நீங்கள் தப்பி ஓடினீர்கள்; ஆயினும் நீங்கள் யாவரும் ஒன்றாய் பிடிக்கப்பட்டு கைதிகளாக்கப்பட்டீர்கள்.
பழைய குளத்துத் தண்ணீரைச் சேகரிப்பதற்காக, நீங்கள் இரு மதில்களுக்கிடையில் நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்தீர்கள். ஆனால் இதை உண்டாக்கியவரை நீங்கள் நோக்கவும் இல்லை; ஆதியிலே இதைத் திட்டமிட்டவரை நீங்கள் மதிக்கவும் இல்லை.
என் செவிகேட்க சேனைகளின் யெகோவா இதை வெளிப்படுத்தியிருக்கிறார்: “நீங்கள் சாகும் நாள்வரை, இந்தப் பாவம் நிவிர்த்தியாக்கப்படுவதில்லை” என யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
நீ இங்கே என்ன செய்கிறாய்? உனக்கென்று இந்த இடத்தில் ஒரு கல்லறையை வெட்டுவதற்கு உனக்கு உத்தரவு கொடுத்தது யார்? உயர்ந்த இடத்தில் உனது கல்லறையை வெட்டவும், கற்பாறையில் உனது இளைப்பாறும் இடத்தைச் செதுக்கவும் உனக்கு உத்தரவு கொடுத்தது யார்?
அவர் உன்னை இறுக்கமாய் சுருட்டி, ஒரு பந்துபோல் ஆக்கி, ஒரு பெரிய நாட்டிற்குள் எறிவார். அங்கே நீ சாவாய், உனது சிறப்பான தேர்கள் அங்கு இருக்கும்; நீ உன் எஜமான் வீட்டுக்கு அவமானமாய் இருந்தாயே.
உனது உடையை அவனுக்கு உடுத்தி, உனது சால்வையை அவனுடைய இடையில் கட்டி, உன்னிடம் இருந்த அதிகாரத்தை அவனிடம் ஒப்படைப்பேன். எருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் வீட்டாருக்கும் அவன் தகப்பனாயிருப்பான்.
அவனுடைய தகப்பன் குடும்பத்தினராகிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமான, சிறிய பாத்திரங்கள், கிண்ணங்கள் முதல் பெரிய குடங்கள் வரையுள்ள அனைத்து பாத்திரங்களைப்போல் பெரிய பொறுப்பு அவன்மேல் இருக்கும்.”
சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது: “அந்த நாளிலே, உறுதியான இடத்தில் அறையப்பட்டிருந்த ஆணி பிடுங்கப்பட்டு, முறிந்து விழும்; அதில் தொங்கியிருந்த பாரமான யாவும் விழுந்துவிடும்.” யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார்.