கேளுங்கள், மலைகளின்மேல் ஒரு சத்தம் கேட்கிறது! அது பெருந்திரளான மக்களின் இரைச்சல் போலிருக்கிறது. கேளுங்கள், ராஜ்யங்களின் மத்தியில் பெருமுழக்கம் கேட்கிறது! அது பல நாடுகள் ஒன்றுசேர்வது போன்ற ஆரவாரமாயிருக்கிறது. சேனைகளின் யெகோவா போருக்கு ஒரு படையைத் திரட்டுகிறார்.
தூர நாடுகளிலிருந்து அவர்கள் வருகிறார்கள்; தொடுவானங்களின் எல்லைகளிலிருந்து வருகிறார்கள். முழு நாட்டையும் அழித்தொழிக்க யெகோவா தமது கோபத்தின் ஆயுதங்களுடன் வருகிறார்.
அவர்களைத் திகில் பற்றிக்கொள்ளும், வலியும் வேதனையும் அவர்களைப் பிடித்துக்கொள்ளும்; பிரசவ வேதனைப்படும் பெண்ணைப்போல் அவர்கள் துடிப்பார்கள். அவர்கள் வெட்கத்தினால் முகம் சிவக்க ஒருவரையொருவர் வியப்புடன் பார்ப்பார்கள்.
பாருங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வருகிறது; அது கொடுமையின் நாள், நாட்டைப் பாழாக்குவதற்கும், அங்குள்ள பாவிகளை தண்டிப்பதற்கும், கோபத்துடனும் கடுங்கோபத்துடனும் அது வருகிறது.
வானத்து நட்சத்திரங்களும், நட்சத்திரக் கூட்டங்களும் தங்கள் ஒளியைக் கொடாதிருக்கும். சூரியன் உதிக்கும்போது இருண்டுபோகும்; சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
நான் உலகத்தை அதன் தீமைக்காகவும், கொடியவரை அவர்களுடைய பாவங்களுக்காகவும் தண்டிப்பேன். துன்மார்க்கரின் அகந்தைக்கும் நான் முடிவு செய்வேன்; இரக்கமற்றவர்களின் பெருமையைத் தாழ்த்துவேன்.
ஆகையால் நான் வானங்களை நடுங்கப்பண்ணுவேன்; பூமி தன் நிலையிலிருந்து அசையும். எல்லாம் வல்ல யெகோவாவின் கோபம் பற்றியெரியும் நாளில், அவருடைய கோபத்தில் இது நடக்கும்.
அப்பொழுது வேட்டையாடப்படும் மானைப்போலவும், மேய்ப்பனில்லாத செம்மறியாட்டைப் போலவும், ஒவ்வொருவனும் தன் சொந்த மக்களிடம் திரும்புவான்; ஒவ்வொருவனும் தன் சொந்த நாட்டுக்குத் தப்பியோடுவான்.
அவர்களுடைய குழந்தைகள் அவர்கள் கண்களின்முன் மோதியடிக்கப்பட்டு, துண்டுகளாக்கப்படுவார்கள்; அவர்களுடைய வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்களுடைய மனைவிகள் அவமானப்படுவார்கள்.
வரும் தலைமுறைகளில் ஒருவரும் இனியொருபோதும் அங்கு குடியேறவோ, வசிக்கவோ மாட்டார்கள். அரேபியன் எவனும் அங்கு தனது கூடாரத்தைப் போடமாட்டான். மேய்ப்பன் தன் மந்தைகளை அங்கு இளைப்பாற விடவுமாட்டான்.