English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Genesis Chapters

Genesis 9 Verses

1 பின்பு இறைவன் நோவாவையும் அவன் மகன்களையும் ஆசீர்வதித்து சொன்னதாவது, “நீங்கள் பலுகி, எண்ணிக்கையில் பெருகி பூமியை நிரப்புங்கள்.”
2 உங்களைப்பற்றிய பயமும், பீதியும் பூமியிலுள்ள எல்லா விலங்குகளுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் ஊரும்பிராணிகளுக்கும், கடல்வாழ் மீன்களுக்கும் இருக்கும்; அவை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
3 நடமாடும் உயிரினங்கள் யாவும் உங்களுக்கு உணவாகும். தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்ததுபோல, இப்பொழுது இவை எல்லாவற்றையும் உங்களுக்கு உணவாகக் கொடுக்கிறேன்.
4 “ஆனாலும், இறைச்சியை அதன் உயிருள்ளபோது அதாவது இரத்தம் அதில் இருக்கும்போது சாப்பிடவேண்டாம்.
5 உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் நிச்சயமாக ஈடு கேட்பேன். ஒவ்வொரு மிருகத்திடமும் ஒவ்வொரு மனிதரிடமும் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவர்களோடிருக்கும் சக மனிதரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.
6 “யாராவது மனித இரத்தத்தைச் சிந்தினால், அவர்களுடைய இரத்தமும் மனிதராலேயே சிந்தப்பட வேண்டும்; ஏனெனில், இறைவன் மனிதரை இறைவனின் சாயலிலேயே படைத்திருக்கிறார்.
7 நீங்களோ, இனவிருத்தியில் பெருகி எண்ணிக்கையில் அதிகரியுங்கள்; பூமியில் பெருகி, விருத்தியடையுங்கள்.”
8 பின்பு இறைவன் நோவாவிடமும், அவனுடனிருந்த அவன் மகன்களிடமும்:
9 “நான் உங்களுடனும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியுடனும் இப்பொழுது என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
10 உங்களுடன் பேழையிலிருந்து வெளியேறிய உயிரினங்களான பறவைகள், வளர்ப்பு மிருகங்கள், காட்டு மிருகங்கள் ஆகிய பூமியின் எல்லா உயிரினங்களுடனும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
11 ‘வெள்ளத்தினால் இனி ஒருபோதும் எல்லா உயிர்களும் அழிக்கப்படமாட்டாது; பூமியை அழிக்க இனி ஒருபோதும் வெள்ளப்பெருக்கு உண்டாகாது’ என்று உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்” என்றார்.
12 மேலும் இறைவன், “நான் உங்களோடும், உங்களோடிருக்கும் எல்லா உயிரினங்களோடும், வரப்போகும் எல்லா சந்ததிகளோடும் ஏற்படுத்தும் உடன்படிக்கையின் அடையாளம் இதுவே:
13 நான், என் வானவில்லை மேகங்களில் அமைத்திருக்கிறேன், பூமிக்கும் எனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளம் இதுவே.
14 நான் பூமிக்கு மேலாக மேகங்களை வரப்பண்ணுகையில், அம்மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம்,
15 உங்களோடும் எல்லாவித உயிரினங்களோடும் நான் செய்துகொண்ட என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். இனி ஒருபோதும் எல்லா உயிர்களையும் அழிக்கும்படி தண்ணீர் வெள்ளமாய் பெருகாது.
16 மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம் நான் அதைப் பார்த்து, இறைவனுக்கும் பூமியிலுள்ள எல்லாவித உயிரினங்களுக்கும் இடையே உள்ள நித்திய உடன்படிக்கையை நினைவுகூருவேன்” என்றார்.
17 இப்படியாக இறைவன் நோவாவிடம், “எனக்கும் பூமியிலுள்ள எல்லா உயிர்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே” என்று சொன்னார்.
18 பேழையிலிருந்து வெளியேறிய நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களாவர். காம் கானானின் தகப்பன்.
19 நோவாவின் மூன்று மகன்கள் இவர்களே; இவர்களிலிருந்தே பூமி எங்கும் பரந்திருக்கும் மக்கள் வந்தார்கள்.
20 நோவா நிலத்தைப் பயிரிடுகிறவனாகி, திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கத் தொடங்கினான்.
21 அவன் ஒரு நாள் தோட்டத்தின் திராட்சை இரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தினுள்ளே உடை விலகிய நிலையில் கிடந்தான்.
22 அப்பொழுது கானானின் தகப்பனான காம், தன் தகப்பனின் நிர்வாணத்தைக் கண்டு, வெளியே போய் தன் இரு சகோதரருக்கும் அதைத் தெரியப்படுத்தினான்.
23 ஆனால் சேமும் யாப்பேத்தும் ஓர் உடையை எடுத்துத் தம் இருவர் தோளிலும் போட்டவாறு, பின்னிட்டுச் சென்று தங்கள் தகப்பனின் நிர்வாணத்தை மூடினார்கள். அவர்கள் தங்கள் தகப்பனின் நிர்வாணத்தைக் காணாதபடிக்குத் தங்கள் முகங்களை மறுபக்கமாகத் திருப்பிக்கொண்டார்கள்.
24 நோவா வெறி தெளிந்து எழுந்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்தான்.
25 எனவே அவன், “கானான் சபிக்கப்படட்டும்! அவன் தன் சகோதரர்களிலும் அடிமைகளிலும் கீழ்ப்பட்டவனாய் இருக்கட்டும்.”
26 மேலும் நோவா சொன்னதாவது: “சேமின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக! கானான் சேமுக்கு அடிமையாய் இருப்பானாக.
27 இறைவன் யாப்பேத்தின் எல்லையை விரிவுபடுத்துவாராக; யாப்பேத் சேமின் கூடாரங்களில் குடியிருப்பானாக, கானான் யாப்பேத்துக்கு அடிமையாய் இருப்பானாக.”
28 பெருவெள்ளத்திற்கு பிறகு நோவா முந்நூற்று ஐம்பது வருடங்கள் வாழ்ந்தான்.
29 நோவா மொத்தம் 950 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
×

Alert

×