அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் பிள்ளையில்லாதவனாய் இருக்க, எனக்கு நீர் எதைத் தரப்போகிறீர்? என் சொத்துக்களை உரிமையாக்கிக் கொள்ளப்போகிறவன் தமஸ்கு பட்டணத்தைச் சேர்ந்த எலியேசர்தானே?”
அப்பொழுது ஆபிராமுக்கு யெகோவாவினுடைய வார்த்தை வந்தது: “இந்த மனிதன் உன் வாரிசாய் இருக்கமாட்டான், உன் சதையும் உன் இரத்தமுமாய் உன்னிலிருந்து பிறக்கும் உன் மகனே உன் வாரிசாய் இருப்பான்” என்றார்.
பின்பு யெகோவா ஆபிராமை வெளியே கூட்டிக்கொண்டுவந்து, “வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ண முடியுமானால் எண்ணு; உன் சந்ததியும் அவற்றைப் போலவே இருக்கும்” என்றார்.
பின்னும் யெகோவா ஆபிராமிடம், “இந்த நாட்டை நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி இதை உனக்குக் கொடுப்பதற்காக, கல்தேயரின் ஊர் பட்டணத்திலிருந்து உன்னைக் கொண்டுவந்த யெகோவா நானே” என்றார்.
யெகோவா அவனிடம், “ஒரு இளம் பசுவையும், ஒரு வெள்ளாட்டையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் என்னிடம் கொண்டுவா, அவை ஒவ்வொன்றும் மூன்று வயதுடையதாய் இருக்கவேண்டும்; அத்துடன் ஒரு காட்டுப்புறாவையும் ஒரு புறாக்குஞ்சையும் கொண்டுவா” என்றார்.
அப்பொழுது ஆபிராம் அவை எல்லாவற்றையும் அவரிடம் கொண்டுவந்து, மிருகங்களை இரண்டாகப் பிளந்து, அவைகளை ஒன்றுக்கொன்று எதிராக ஒழுங்குபடுத்தி வைத்தான்; பறவைகளையோ அவன் இரண்டாக வெட்டவில்லை.
அவ்வேளையில் யெகோவா ஆபிராமிடம், “நீ நன்கு அறிந்துகொள்: உன் சந்ததிகள் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள், அவர்கள் நானூறு வருடங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள்.