English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Ezekiel Chapters

Ezekiel 7 Verses

1 மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2 “மனுபுத்திரனே, ஆண்டவராகிய யெகோவா இஸ்ரயேல் நாட்டைக்குறித்து கூறுவது இதுவே: “ ‘முடிவு வந்துவிட்டது! நாட்டின் நான்கு திசைகளுக்குமே முடிவு வந்துவிட்டது!
3 இப்பொழுது உனக்கு முடிவு வந்துவிட்டது. நான் எனது கோபத்தை உனக்கு விரோதமாய் வரச்செய்வேன். உன் நடத்தைக்குத்தக்கதாக உனக்குத் தீர்ப்பு வழங்கி, நீ செய்த எல்லா அருவருப்பான செயல்களுக்காகவும் பழிவாங்குவேன்.
4 நான் உன்னைத் தயவாய் பார்க்கவோ; தப்பவிடவோ மாட்டேன். உன் நடத்தைகளுக்கும் உன் நடுவே இருக்கும் அருவருப்புகளுக்கும் தக்கதாக, நிச்சயமாக நான் பழிக்குப்பழி செய்வேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய்.’
5 “ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘பேராபத்து! கேள்விப்படாத ஒரு பேராபத்து வருகிறது.
6 முடிவு வந்துவிட்டது! முடிவு வந்துவிட்டது! அது உனக்கு விரோதமாகவே எழும்பிவிட்டது! அது வந்தேவிட்டது.
7 நாட்டில் குடியிருப்பவனே, அழிவு உன்மீது வந்துவிட்டது! வேளை வந்துவிட்டது! நாள் நெருங்கிவிட்டது! மலைகளின்மேல் மகிழ்ச்சியல்ல. திகிலே நிறைந்திருக்கிறது.
8 என் சீற்றத்தை இப்பொழுதே உன்மீது ஊற்றி; எனது கோபத்தை உனக்கெதிராய்த் தீர்க்கப்போகிறேன், உன் நடத்தைக்குத்தக்கதாய் உனக்குத் தீர்ப்பு வழங்கி, நீ செய்த எல்லா அருவருப்பான செயல்களுக்கும் உன்னிடம் பழிவாங்குவேன்.
9 நான் உனக்குத் தயை செய்யவும் மாட்டேன். உன்னைத் தண்டியாமல் விடவுமாட்டேன். உன் நடத்தைகளுக்கும் உன் நடுவிலுள்ள உன் அருவருப்பான பழக்கவழக்கங்களுக்கும் தக்கதாக நான் பழிவாங்குவேன். அப்பொழுது உன்னை அடிக்கிறவராகிய நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய்.
10 “ ‘இதோ, அந்த நாள்! அது வந்துவிட்டது! அழிவு கொந்தளித்துக் குமுறுகிறது! அநீதியின் கோல் மொட்டுவிட்டு, அகந்தை மலர்ந்துவிட்டது!
11 கொடுமையைத் தண்டிக்க வன்முறை கோலாக வளர்ந்துவிட்டது! அவர்களுடைய மக்களிலோ கூட்டத்திலோ ஒருவனாகிலும் மீந்திருக்கமாட்டான். அவர்களுடைய செல்வமும், விலையுயர்ந்த ஒன்றுமே மீந்திருப்பதில்லை.
12 அந்தக் காலம் வந்துவிட்டது! நாளும் நெருங்கிவிட்டது! வாங்குகிறவன் மகிழாமலும், விற்கிறவன் கவலைப்படாமலும் இருக்கட்டும். ஏனெனில், கடுங்கோபம் எல்லோர்மேலும் வந்திருக்கிறது!
13 அவர்கள் இருவருமே உயிரோடிருக்கும் வரையிலும், விற்றவன் விற்கப்பட்ட நாட்டைத் திரும்பப்பெறமாட்டான். ஏனெனில் யாவரையும் குறித்த தரிசனம் மாற்றப்படமாட்டாது. அவர்களின் பாவத்தினிமித்தம் ஒருவனாகிலும் தன் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளவுமாட்டான்.
14 “ ‘அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தினாலும், போருக்கு யாருமே போகமாட்டார்கள், ஏனெனில் எல்லோர்மேலும் என் கோபம் இருக்கிறது.
15 வெளியே வாள் இருக்கிறது. உள்ளே கொள்ளைநோயும், பஞ்சமும் இருக்கின்றன. நாட்டுப்புறத்தில் இருக்கிறவர்கள் வாளினால் சாவார்கள். நகரத்தில் இருக்கிறவர்கள் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் கொல்லப்படுவார்கள்.
16 தப்பிப் பிழைக்கும் எல்லோரும் தங்கள் பாவங்களின் காரணமாகப் பள்ளத்தாக்கின் புறாக்களைப்போல் புலம்பி, மலைகளிலே தங்குவார்கள்.
17 ஒவ்வொரு கையும் பெலனற்றுப்போகும். ஒவ்வொரு முழங்காலும் தண்ணீரைப் போலாகும்.
18 அனைவரும் துக்கவுடைகளை உடுத்திக்கொண்டு பயத்தினால் நடுங்குவார்கள். அவர்களுடைய தலைகள் சவரம் செய்யப்பட்டு, முகங்கள் வெட்கத்தினால் மூடப்பட்டிருக்கும்.
19 “ ‘அவர்கள் தங்கள் வெள்ளியை வீதிகளில் எறிந்துவிடுவார்கள். அவர்களுடைய தங்கம் அவர்களுக்கு அசுத்த பொருளாகும். யெகோவாவினுடைய கோபத்தின் நாளிலே அந்த வெள்ளியும் தங்கமும் அவர்களைக் காப்பாற்றமாட்டாது. அவைகளால் அவர்கள் தங்கள் பசியைத் தீர்த்துக்கொள்ளவுமாட்டார்கள். அவை அவர்களின் வயிற்றை நிரப்பவுமாட்டாது. ஏனெனில், அவைகளே அவர்களைப் பாவத்திற்குள் இடறிவிழச் செய்தன.
20 தங்களது அழகிய நகைகளைக் குறித்து அவர்கள் பெருமையுடையவர்களாய் இருந்தார்கள். அருவருப்பான விக்கிரகங்களையும், இழிவான உருவச்சிலைகளையும் தங்களுக்குச் செய்வதற்காக, அந்த நகைகளைப் பயன்படுத்தினார்கள்; ஆதலால் அவர்களுக்கு அவைகளை தீட்டான பொருளாக்குவேன்.
21 அந்நியர் அவைகளைச் சூறையாடவும், உலகின் கொடியவர்கள் அவைகளைக் கொள்ளையிடவும் செய்வேன். அவர்கள் அவைகளைக் கறைப்படுத்துவார்கள்.
22 அவர்களிடமிருந்து என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன். அப்பொழுது அவர்களுடைய பகைவர்கள் எனக்கு அருமையாயுள்ள இடத்தைத் தூய்மைக்கேடாக்குவார்கள். கொள்ளையர் அங்கு புகுந்து அதன் தூய்மையைக் கெடுப்பார்கள்.
23 “ ‘நீ சங்கிலிகளை ஆயத்தப்படுத்திக்கொள். நாடு இரத்தம் சிந்துதலால் நிறைந்திருக்கிறது; நகரம் வன்செயலாலும் நிறைந்துள்ளது.
24 இவர்களுடைய வீடுகளை உரிமையாக்கிக்கொள்ளும்படி நாடுகளிலே மிகக் கொடூரமானவர்களை நான் கொண்டுவருவேன். வலியவர்களின் பெருமையையும் ஒழியப்பண்ணுவேன். அவர்களுடைய பரிசுத்த இடங்களும் தூய்மைக் கேடாக்கப்படும்.
25 பயங்கரம் வரும்போது, அவர்கள் சமாதானத்தைத் தேடுவார்கள். அது கிடைக்காமற்போகும்.
26 அழிவுக்குமேல் அழிவு வரும், வதந்திக்குமேல் வதந்தி வரும். இறைவாக்கினரிடமிருந்து தரிசனங்களை பெற முயற்சிப்பார்கள். நீதிச்சட்டத்தைப் பற்றிய ஆசாரியர்களின் போதித்தலும் உபதேசமும் முதியோரின் ஆலோசனைகளும் ஒழிந்துபோகும்.
27 அரசன் துக்கிப்பான். இளவரசனைத் திகில் மூடிக்கொள்ளும். நாட்டு மக்களின் கைகள் நடுங்கும். நான் அவர்கள் நடத்தைக்கு ஏற்ப அவர்களை நடத்துவேன். அவர்கள் தீர்ப்பளித்த விதத்தின்படியே அவர்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்’ ” என்றார்.
×

Alert

×