English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Ezekiel Chapters

Ezekiel 31 Verses

1 அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பதினோராம் வருடம், மூன்றாம் மாதம், முதலாம் நாள் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2 “மனுபுத்திரனே, எகிப்திய அரசனாகிய பார்வோனுக்கும் அவனுடைய மக்கள்கூட்டங்களுக்கும் நீ சொல்லவேண்டியதாவது, “ ‘மாட்சிமையில் உன்னுடன் ஒப்பிடக்கூடியவன் யார்?
3 அசீரியாவைப் பற்றிச் சிந்தித்துப்பார், அது ஒருகாலத்தில் லெபனோனின் கேதுரு மரத்தைப்போல் அழகிய கிளைகளுடன் காட்டுக்கு மேலாக உயர்ந்து வளர்ந்தது. செறிந்த தழைகளுக்கு மேலாய் அதன் நுனி இருந்தது.
4 தண்ணீர்கள் அதை செழிக்கச் செய்தன, ஆழமான நீரூற்றுக்கள் அதை உயரமாக வளரச் செய்தன; அதன் அடிமரங்களைச் சுற்றி நீரோடைகள் பாய்ந்தன; தண்ணீர்கள் தம் வாய்க்கால்களை வெளிமரங்கள் யாவற்றிற்கும் பரவவிட்டன.
5 அதனால் அது, வெளியின் மரங்கள் எல்லாவற்றையும்விட, உயர்ந்து நின்றது: தண்ணீர் நிறைவாக இருந்தபடியால், அதன் கொப்புகள் அதிகரித்தன: அதன் கிளைகள் நீண்டு, படர்ந்து, வளர்ந்தன.
6 ஆகாயத்துப் பறவைகள் அனைத்தும் அதின் கிளைகளில் கூடுகட்டின; வெளியின் மிருகங்களெல்லாம் அதன் கிளைகளின்கீழ் குட்டிகளை ஈன்றன. பெரிதான பல நாடுகளும் அதன் நிழலில் குடியிருந்தன.
7 படர்ந்திருந்த அதன் கொப்புகளினால் அது அழகில் மாட்சிமையடைந்திருந்தது. ஏனெனில், அதன் வேர்கள் கீழிறங்கி நிறைவான தண்ணீருக்குள் சென்றிருந்தன.
8 இறைவனின் தோட்டத்தின் கேதுருக்கள்கூட அதற்கு இணையாய் இருக்கமுடியவில்லை. தேவதாரு மரங்களும் அதின் கிளைகளுக்குச் சமானமாயிருக்க முடியவில்லை. அர்மோன் மரங்களையும் அதன் கொப்புகளுக்கு இணைகூற இயலாது. இறைவனின் தோட்டத்து எந்த மரமும் அழகில் அதற்கு நிகராகாது.
9 இறைவனின் தோட்டமான ஏதேனிலுள்ள எல்லா மரங்களும் அதன்மேல் பொறாமை கொள்ளத்தக்கதாக நிறைவான கொப்புகளால் அதை நான் அழகு செய்தேன்.
10 “ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது உயரமாய் வளர்ந்து, தன் நுனியை செறிந்த தழைகளுக்கு மேலாய் உயர்த்தி, தன் உயர்வினிமித்தம் பெருமைகொண்டது.
11 அதனால் அதன் கொடுமைகளுக்குத் தக்கபடி அதற்குச் செய்வதற்காக, பல நாடுகளை ஆள்பவனிடத்தில் நான் அதை ஒப்புக்கொடுத்தேன். அதை நான் அப்புறப்படுத்திவிட்டேன்.
12 அந்நிய தேசத்தார்களுள் மிகக் கொடிய தேசத்தார் அதை வெட்டி வீழ்த்தினார்கள். அதன் கொப்புகள் மலைகளிலும், எல்லா பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன. அதன் கிளைகள் முறிந்து, நாட்டின் எல்லா கணவாய்களிலும் விழுந்து கிடந்தன. பூமியின் எல்லா தேசத்தாரும் அதன் நிழலைவிட்டு வெளியேறி அதைவிட்டு அகன்றார்கள்.
13 விழுந்துகிடக்கிற மரத்தின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தங்கின. வெளியின் எல்லா மிருகங்களும் அதன் கொம்புகளின்மேல் இருந்தன.
14 எனவே, இனிமேல் தண்ணீர் அருகே இருக்கும் வேறு எந்த மரமாவது, மேட்டிமையுடன் எழும்பாதிருக்கட்டும், செறிந்த தழைகளுக்கு மேலாகத் தங்கள் நுனிகளை உயர்த்தாதிருக்கட்டும். ஏராளமாய் தண்ணீர் பாய்ச்சப்படும் எந்தவொரு மரமும் அவ்வளவு உயரமாய் வளராதிருக்கட்டும். அவைகளெல்லாம் பூமியின் தாழ்விடங்களிலே, மனுமக்கள் நடுவே குழியில் இறங்குகிறவர்களோடு போகும்படியாக, சாவுக்கென்று நியமிக்கப்பட்டன.
15 “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது பாதாளத்துக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலே, நான் அதன் ஆழமான நீரூற்றுக்களை துக்கத்துடன் மூடினேன். அதன் நீரூற்றுக்களை நான் தடுத்தேன். அதன் நிறைவான நீர்நிலைகள் வற்றிப்போயின. அதினிமித்தம் நான் லெபனோனை இருளால் மூடினேன். வெளியின் மரங்களெல்லாம் பட்டுப்போயின.
16 குழியில் இறங்குகிறவர்களோடு அதை நான் பாதாளத்திற்குக் கொண்டுவந்தபோது, அதனுடைய விழுகிற சத்தத்தைக் கேட்டு பல நாடுகளையும் நடுங்கும்படி செய்தேன். ஏதேனின் எல்லா மரங்களும், லெபனோனின் தரமானதும் சிறப்பானதுமான மரங்களும், நன்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டிருக்கின்ற எல்லா மரங்களும் பூமியின் கீழே ஆறுதலடைந்தன.
17 அதன் நிழலில் வாழ்ந்தவர்களும், பல நாடுகளின் நட்பு நாடுகளும், அதனோடுகூட பாதாளத்துக்குப்போய், அங்கேயே வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களோடு ஒன்றாய்ச் சேர்ந்தார்கள்.
18 “ ‘எகிப்தே! சிறப்பிலும் மாட்சிமையிலும் ஏதேனிலுள்ள எந்த மரம் உனக்கு இணையாகும்? எனினும், நீயும் ஏதேனின் மரங்களுடன் பூமிக்குக் கீழே கொண்டுவரப்படுவாய். வாளினால் கொல்லப்பட்டவர்களோடு, விருத்தசேதனமற்றோர் மத்தியில் நீ கிடப்பாய். “ ‘இவையே பார்வோனும் அவனுடைய எல்லா மக்கள் கூட்டங்களும்’ ” என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
×

Alert

×