அவர் என்னிடம்: “மனுபுத்திரனே, எனக்கு விரோதமாகக் கலகம் பண்ணியிருக்கிற, கலகக்கார தேசத்தாராகிய இஸ்ரயேலரிடம் நான் உன்னை அனுப்புகிறேன். அவர்களும், அவர்களுடைய முற்பிதாக்களும் எனக்கு விரோதமாய் இன்றுவரை துரோகம்செய்து வந்திருக்கிறார்கள்.
கீழ்ப்படியாதவர்களும், பிடிவாதமுள்ளவர்களுமாய் இருக்கிறவர்களிடத்தில் நான் உன்னை அனுப்புகிறேன். ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே’ என்று அவர்களுக்குச் சொல்.
அவர்களோ கலகம் செய்யும் குடும்பத்தினர். ஆகவே அவர்கள் செவிகொடுத்தாலும், செவிகொடாமற்போனாலும் தங்கள் மத்தியில் இறைவாக்கினன் ஒருவன் இருந்தான் என்பதை அறிந்துகொள்வார்கள்.
மனுபுத்திரனே, நீ அவர்களுக்கோ, அவர்களுடைய வார்த்தைகளுக்கோ பயப்படாதே. உன்னைச் சுற்றி நெருஞ்சில்களும் முட்களும் இருந்தாலும், தேள்கள் மத்தியில் நீ குடியிருந்தாலும் அஞ்சவேண்டாம். அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தினர்களாக இருக்கிறபோதிலும், அவர்கள் சொல்வது எதுவாயினும் நீ பயப்படாதே. திகிலடையாதே.
ஆனால், மனுபுத்திரனே, நீ நான் உனக்குக் கூறுவதைக் கேள். அந்தக் கலகம் செய்யும் குடும்பத்தாரைப்போல் கலகம் செய்யாதே! உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுப்பதைச் சாப்பிடு” என்றார்.