English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Esther Chapters

Esther 9 Verses

1 ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாம் நாளில், அரசனால் கட்டளையிடப்பட்ட உத்தரவு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நாளிலே யூதர்களின் பகைவர்கள் யூதர்களை மேற்கொள்ளும்படி எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் நிலைமை முற்றிலும் மாறி தங்களைப் பகைத்தவர்களுக்கு மேலாக யூதர்களின் கை ஓங்கியது.
2 யூதர்கள் தங்களை அழிக்கும்படி தேடியவர்களைத் தாக்குவதற்காக, அகாஸ்வேரு அரசனின் எல்லா நாடுகளிலும் உள்ள தங்கள் பட்டணங்களில் ஒன்றுகூடினார்கள். அவர்களை எதிர்த்து ஒருவனாலும் நிற்க முடியவில்லை. ஏனெனில், மற்ற எல்லா நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவர்களைக் குறித்துப் பயமடைந்திருந்தார்கள்.
3 நாடுகளின் எல்லா உயர்குடி மனிதரும், அரச பிரதிநிதிகளும், ஆளுநர்களும், அரசனின் நிர்வாகிகளும் யூதர்களுக்கு உதவி செய்தார்கள். ஏனெனில், மொர்தெகாயைப் பற்றிய பயம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.
4 மொர்தெகாய் அரண்மனையில் முதன்மை பெற்றிருந்தான். அவனுடைய புகழ் எல்லா நாடுகளிலும் பிரபலமானது. அவன் அதிகம் அதிகமாய் வலிமையடைந்தான்.
5 யூதர்கள் தங்கள் எல்லாப் பகைவர்களையும் வாளினால் வெட்டி வீழ்த்தி, அவர்களைக் கொன்றொழித்து, தங்களை வெறுத்தவர்களுக்கு தாங்கள் விரும்பியபடி செய்தார்கள்.
6 சூசான் கோட்டைப் பட்டணத்தில் ஐந்நூறு மனிதர்களை யூதர்கள் கொன்றொழித்தார்கள்.
7 அத்துடன் அவர்கள் பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா,
8 பொராதா, அதலியா, அரிதாத்தா,
9 பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்ஸாதா ஆகியோரையும் கொன்றார்கள்.
10 இந்த பத்துப்பேரும் யூதர்களின் பகைவனான அம்மெதாத்தாவின் மகன் ஆமானின் மகன்களாவர். ஆனாலும் அவர்கள் கொள்ளையிடத் தங்கள் கைகளை நீட்டவில்லை.
11 சூசான் கோட்டைப் பட்டணத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அந்த நாளிலே அரசனுக்கு அறிவிக்கப்பட்டது.
12 அரசன் எஸ்தர் அரசியிடம், “யூதர் சூசான் கோட்டைப் பட்டணத்தில் ஐந்நூறு மனிதரைக் கொன்று ஒழித்துவிட்டார்கள். ஆமானின் பத்து மகன்களையும் கொன்றுபோட்டார்கள். அரசனின் மீதியான மாகாணங்களிலும் அவர்கள் என்ன செய்திருக்கிறார்களோ, இப்பொழுதும் உனது விண்ணப்பம் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். உனது வேண்டுகோள் என்ன? அது உனக்கு வழங்கப்படும்” என்றான்.
13 அதற்கு எஸ்தர், “அரசருக்குப் பிரியமானால், இந்தக் கட்டளையை நாளைக்கும் செயல்படுத்த சூசானிலிருக்கிற யூதர்களுக்கு அனுமதிகொடும். ஆமானின் பத்து மகன்களின் உடல்களும் தூக்கு மரத்தில் தொங்கவிடப்படட்டும்” என்றாள்.
14 எனவே அரசன் இவ்விதம் செய்யப்படும்படி கட்டளையிட்டான். சூசானில் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் ஆமானின் பத்து மகன்களின் உடல்களையும் தொங்கவிட்டார்கள்.
15 ஆதார் மாதத்தின் பதினான்காம் நாளிலே சூசானிலுள்ள யூதர்கள் எல்லாம் ஒன்றாய் கூடிவந்து, சூசானில் முந்நூறு மனிதர்களைக் கொன்றார்கள். ஆனாலும் கொள்ளையிடும்படி அவர்கள் தங்கள் கைகளை நீட்டவில்லை.
16 இதற்கிடையில் அரசனின் மாகாணங்களிலுள்ள மற்ற யூதர்கள் தங்களைப் பாதுகாக்கும்படிக்கும், தங்கள் பகைவர்களிடமிருந்து தங்களை விடுவிக்கும்படிக்கும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் தங்கள் பகைவர்களில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றார்கள். ஆனால் கொள்ளையிடும்படி தங்கள் கைகளை நீட்டவில்லை.
17 இது ஆதார் மாதத்தில் பதிமூன்றாம் நாளிலே நடந்தது. அடுத்தநாள் அவர்கள் ஓய்ந்திருந்து அந்த நாளை விருந்துகொண்டாடி மகிழும் ஒரு நாளாக்கினார்கள்.
18 ஆயினும் சூசானிலிருந்த யூதர்கள் பதிமூன்றாம் நாளிலும், பதினான்காம் நாளிலும் சபைகூடினார்கள். பின்பு பதினைந்தாம்நாள் ஓய்ந்திருந்து அதை விருந்துகொண்டாடி மகிழும் ஒரு நாளாக்கினார்கள்.
19 அதனால்தான் கிராமங்களில் வாழும் கிராமப்புற யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினான்காம் நாளை, ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை கொடுக்கின்ற, விருந்துண்டு மகிழும் ஒரு நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
20 மொர்தெகாய் இந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்து, அருகிலும் தூரத்திலும் அகாஸ்வேரு அரசனின் மாகாணங்கள் எங்குமுள்ள எல்லா யூதர்களுக்கும் கடிதங்களை அனுப்பினான்.
21 அதில் வருடந்தோறும் ஆதார் மாதத்தின் பதினான்காம், பதினைந்தாம் நாட்களைக் கொண்டாடும்படி கேட்கப்பட்டிருந்தது.
22 இதை யூதர்கள் தங்கள் பகைவரிடமிருந்து விடுதலை பெற்ற காலமாகவும், அவர்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறிய மாதமாகவும், தங்களுடைய அழுகை கொண்டாட்டமாக மாறிய நாளாகவும் கொண்டாடும்படி எழுதப்பட்டிருந்தது. அந்த நாட்களை விருந்துண்டு மகிழும் நாட்களாகவும், ஒருவருக்கொருவர் உணவுகளை அன்பளிப்பாகக் கொடுக்கும் நாட்களாகவும், ஏழைகளுக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கும் நாட்களாகவும் கைக்கொள்ளும்படி எழுதினான்.
23 எனவே யூதர்கள், மொர்தெகாய் தங்களுக்கு எழுதியபடிச் செய்து, தாங்கள் தொடங்கியிருந்த கொண்டாட்டத்தைத் தொடர்ந்துசெய்ய சம்மதித்தார்கள்.
24 ஏனெனில், எல்லா யூதர்களின் பகைவனான, ஆகாகியன் அம்மெதாத்தாவின் மகன் ஆமான் யூதர்களை அழிப்பதற்கென அவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டிருந்தான். அத்துடன் அவர்களுடைய அழிவுக்காகவும், நாசத்துக்காகவும் அவன் பூர் எனப்படும் சீட்டையும் போட்டிருந்தான்.
25 ஆனால் இந்தச் சதி அரசனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, யூதருக்கு எதிராக ஆமான் திட்டமிட்டிருந்த அந்த கொடிய சதித்திட்டம் அவனுடைய தலையின் மேலேயே திரும்பிவரும்படி, அரசன் ஒரு எழுத்து மூலமான உத்தரவைப் பிறப்பித்தான். அத்துடன் ஆமானும், அவன் மகன்களும் தூக்கு மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டான்.
26 ஆகவேதான் இந்த நாட்கள் பூர் என்ற சொல்லிலிருந்து பூரீம் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கடிதத்தில் எழுதப்பட்ட எல்லாவற்றிற்காகவும், அவர்கள் கண்டவற்றிற்காகவும், அவர்களுக்கு நிகழ்ந்தவற்றிற்காகவும்,
27 யூதர்கள் ஒரு வழக்கத்தை நிலைநிறுத்தவேண்டும் என்றும் உறுதி செய்துகொண்டார்கள். தாங்களும், தங்கள் சந்ததிகளும், தங்களுடன் இணைந்துகொள்ளும் எல்லோருடனும் வருடந்தோறும் இந்த இரண்டு நாட்களையும் நியமிக்கப்பட்ட காலத்திலேயும், விபரிக்கப்பட்ட விதத்திலேயும் தவறாது கைக்கொள்ளவேண்டும் என்றும் தீர்மானித்தார்கள்.
28 ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு பட்டணத்திலும் இருக்கும், ஒவ்வொரு வழித்தோன்றலும் ஒவ்வொரு குடும்பத்தாரும் இந்த நாளை நினைவிற்கொண்டு கொண்டாடவேண்டும். இந்த பூரீம் நாட்கள் யூதர்களால் கொண்டாடப்படுவது ஒருபோதும் நின்று போகக்கூடாது. அவற்றைப் பற்றிய ஞாபகமும், அவர்களுடைய வழித்தோன்றலிலிருந்து அற்றுப்போகக் கூடாது என்றும் தீர்மானித்தார்கள்.
29 எனவே அபிகாயிலின் மகளான எஸ்தர் அரசி, யூதனான மொர்தெகாயுடன் சேர்ந்து, பூரிமைப் பற்றிய இந்த இரண்டாவது கடிதத்தை உறுதிப்படுத்தும்படி முழு அதிகாரத்துடனும் எழுதினாள்.
30 மொர்தெகாய் அகாஸ்வேருவின் அரசின் நூற்றிருபத்தேழு மாகாணங்களிலுமுள்ள எல்லா யூதர்களுக்கும் நல்லெண்ணத்தையும், நிச்சயத்தையும் தெரிவிக்கும் கடிதங்களை அனுப்பினான்.
31 யூதனான மொர்தெகாயும், எஸ்தர் அரசியும் யூதர்களுக்கும் அவர்களுடைய சந்ததிகளுக்கும், அவர்கள் உபவாசித்து, துக்கங்கொண்டாட வேண்டிய காலத்தை நிலை நாட்டியது போல, இந்த பூரீம் நாட்களையும் நிலைநாட்டுவதற்குக் கட்டளையிட்டிருந்தார்கள்.
32 எஸ்தரின் கட்டளை பூரிமைப் பற்றிய ஒழுங்குவிதிகளை உறுதிப்படுத்தியது. அது புத்தகத்தில் எழுதப்பட்டது.
×

Alert

×