ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “இஸ்ரயேலில் ஆயிரம் வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு, நூறுபேர் மட்டும் எஞ்சி வருவார்கள். நூறு வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு, பத்துபேர் மட்டுமே எஞ்சி வருவார்கள்.”
இஸ்ரயேலின் யெகோவாவையே தேடுங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள். இல்லையெனில் அவர் யோசேப்பின் குடும்பத்தின் வழியாக நெருப்புபோல் அள்ளிக்கொண்டுபோவார். அந்த நெருப்பு எல்லாவற்றையும் சுட்டெரிக்கும். அதை அணைக்க பெத்தேலில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
அவரே அறுமீன், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியவர். இருளை அதிகாலை வெளிச்சமாக மாற்றுகிறவரும், பகலை இரவாக மாற்றுகிறவரும் அவரே; கடலின் தண்ணீரை அழைத்து, பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறவரும் அவரே, “யெகோவா” என்பது அவர் பெயர்.
உங்கள் மீறுதல்கள் எவ்வளவு மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் எவ்வளவு கொடியதென்றும் நான் அறிவேன். நீங்கள் நீதிமான்களை ஒடுக்கி, அவர்களிடமிருந்து இலஞ்சம் வாங்குகிறீர்கள். நீதிமன்றத்தில் ஏழைக்கு நீதிவழங்க மறுக்கிறீர்கள்.
தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள். சேனைகளின் இறைவனாகிய யெகோவா உங்களோடிருக்கிறார் என்று நீங்கள் சொல்வதுபோலவே, அவர் உங்களோடிருப்பார்.
ஒரு சிங்கத்திடமிருந்து தப்பிய மனிதன், கரடியைச் சந்தித்ததுபோல் அது இருக்கும். அவன் தன் வீட்டிற்குள் வந்து சுவரில் கையை ஊன்றியபோது, அவனைப் பாம்பு கடித்ததுபோல் இருக்கும்.
தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும் நீங்கள் எனக்குக் கொண்டுவந்தாலும், அவற்றை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். சிறப்பான சமாதான காணிக்கையை நீங்கள் கொண்டுவந்தாலும், அவற்றைப் பார்க்கவும் மாட்டேன்.