ஏனெனில், அவர் சொன்னதாவது: “என் தயவின் காலத்தில் நான் உங்களுக்கு செவிகொடுத்தேன். இரட்சிப்பின் நாளிலே நான் உங்களுக்கு உதவி செய்தேன்.”[* ஏசா. 49:8 ] நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்பொழுதே இறைவனது தயவின் காலம். இப்பொழுதே இரட்சிப்பின் நாள்.
மாறாக, நாங்கள் இறைவனின் உண்மையான ஊழியர்கள் என்பதை எல்லாவிதத்திலும், எங்கள் நடத்தையின் மூலமாகக் காண்பிக்கிறோம்: எல்லாவற்றையும் சகித்தலிலும்; கஷ்டங்களிலும், துன்பங்களிலும், துயரங்களிலும்;
அடிக்கப்பட்டதிலும், சிறைவைக்கப்பட்டதிலும், கலவரங்களில் அகப்பட்டதிலும்; கஷ்டமான வேலையில் ஈடுபட்டதிலும், இரவில் நித்திரை இல்லாமலும், உணவு இல்லாமல் இருந்ததிலும்;
சத்திய போதனையிலும், இறைவனின் வல்லமையில் நடப்பதிலும், நீதியின் ஆயுதத்தை வலதுகையிலும் இடது கையிலும் பிடித்திருப்பதிலும், எங்கள் முன்மாதிரியைக் காண்பிக்கிறோம்;
நாங்கள் அங்கீகரிக்கப் படாதவர்களென எண்ணப்பட்டாலும், அங்கீகரிக்கப் பட்டவர்களாக இருக்கிறோம்; நாங்கள் செத்தவர்கள் என சிலர் எண்ணினாலும், நாங்கள் தொடர்ந்து வாழ்கிறோம்; அடிக்கப்படுகிறோம், ஆனால் கொல்லப்படவில்லை;
துக்கமடைகிறோம், ஆனால் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருக்கிறோம்; ஏழைகளாய் இருக்கிறோம், ஆனால் பலரைச் செல்வந்தர்களாக்குகிறோம்; நாங்கள் ஒன்றுமில்லாதவர்களாய் இருக்கிறோம், ஆனால் யாவும் இருக்கின்றது! வெளிச்சத்திற்கும், இருளுக்கும் ஐக்கியம் இருக்க முடியுமா?
இறைவனுடைய ஆலயத்திற்கும், விக்கிரகங்களுக்கும் இடையே என்ன உடன்பாடு உண்டு? ஏனெனில், நாம் ஜீவனுள்ள இறைவனின் ஆலயமாய் இருக்கிறோமே. இறைவன் உங்களைக்குறித்து இப்படியாக சொல்லியிருக்கிறார்: “நான் அவர்களுடன் வாழுவேன். அவர்களிடையே உலாவுவேன். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்.”[‡ லேவி. 26:12; எரே. 32:38; எசே. 37:27 ]
17. ஆகவே, “அவர்களைவிட்டு வெளியே வந்து, பிரிந்திருங்கள். அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன், என்று கர்த்தர் சொல்கிறார்.”[§ ஏசா. 52:11; எசே. 20:34,41 ]