அதன் பிரதிபலனாகவே, அவர்கள் பூமியில் தொடர்ந்து தாங்கள் வாழும் வாழ்க்கையை, மாம்சத்தில் எழும் தீய ஆசைகளுக்காக வாழ்வதில்லை. இறைவனுடைய சித்தத்தைச் செய்வதற்காகவே, அவர்கள் வாழ்வார்கள்.
கடந்த காலத்தில் போதிய அளவு நேரத்தை இறைவனை அறியாத மக்கள் செய்யும் செயல்களில் ஈடுபட்டுக் கழித்தீர்களே! காமவேறிகளிலும், பேராசைகளிலும், மதுவெறியிலும், கேளிக்கைகளிலும், மதுபான விருந்துகளிலும், அருவருப்பான விக்கிரக வழிபாட்டிலும் வாழ்ந்தீர்கள்.
ஆனால் உங்கள் பழைய நண்பர்களோ, நீங்கள் இப்பொழுது தொடர்ந்து அதேவிதமான ஊதாரித்தனம் நிறைந்த வாழ்க்கையில், அவர்களுடன் சேர்ந்து அமிழ்ந்து போகாதிருப்பதைக் கண்டு வியப்படைகிறார்கள். அதனால் அவர்கள் உங்களைக்குறித்து அவதூறாய் பேசுகிறார்கள்.
இதன் காரணமாகவே, இப்பொழுது இறந்துபோனவர்களுக்குங்கூட, அவர்கள் உயிரோடிருக்கையில் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டது. அதனால் அவர்களின் உடலைப் பொறுத்தவரையில், எல்லா மனிதருக்கும் ஏற்படுகிற நியாயத்தீர்ப்பின்படி அவர்கள் மரணம் அடைந்திருந்தாலும், ஆவியைப் பொறுத்தவரையில் அவர்கள் இறைவனுடைய சித்தப்படி இன்னும் வாழமுடியும்.
பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
கிறிஸ்துவினுடைய துன்பங்களில் நீங்களும் பங்குகொள்கிறீர்கள் என்று சந்தோஷப்படுங்கள். அப்பொழுது அவருடைய மகிமை வெளிப்படுகையில், நீங்கள் இன்னும் அதிக மகிழ்ச்சியடைவீர்கள்.
ஆதலால் நீங்கள் ஒரு கொலைகாரனாகவோ, திருடனாகவோ, வேறுவிதமான குற்றம் செய்தவனாகவோ அல்லது தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையிட்டவனாகவோ துன்பம் அனுபவிக்கக்கூடாது.
ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றும் காரணத்திற்காக நீங்கள் வேதனையை அனுபவித்தால், அதைக்குறித்து வெட்கமடைய வேண்டாம். அந்தப் பெயருடையவர்களாய் நீங்கள் இருப்பதைக்குறித்து இறைவனைத் துதியுங்கள்.
ஏனெனில், நியாயத்தீர்ப்பு தொடங்கும் காலம் வந்துவிட்டது. அது இறைவனுடைய குடும்பத்தினரிடமே முதலில் தொடங்கும்; நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் தொடங்குமானால், இறைவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னவாயிருக்கும்!
வேதவசனத்தின்படி, “நீதியுள்ளவர்கள் இரட்சிக்கப்படுவது கஷ்டம் என்றால், இறை பக்தியற்றவர்களுக்கும், பாவிகளுக்குமான நிலை என்னவாகும்?” [*நீதி. 11:31 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)]
ஆகவே இறைவனுடைய திட்டத்தின்படி துன்பம் அனுபவிக்கிறவர்கள், உண்மையுள்ளவரான தங்களைப் படைத்த இறைவனிடம் தங்களை ஒப்புக்கொடுத்து, தொடர்ந்து நன்மை செய்யவேண்டும்.