நீங்களும் உயிருள்ள கற்களைப்போல, ஒரு ஆவிக்குரிய ஆலயமாகக் கட்டப்படுகிறீர்கள். இதனால் நீங்கள் இறைவனுக்கு ஏற்ற ஆவிக்குரிய பலிகளை இயேசுகிறிஸ்துவின் மூலமாய் செலுத்தும், பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகிறீர்கள்.
ஏனெனில்: “இதோ, சீயோனிலே ஒரு கல்லை வைக்கிறேன். அது தெரிந்துகொள்ளப்பட்டதும் உயர் மதிப்புள்ளதுமான ஒரு மூலைக்கல். அவரைச் சார்ந்து இருக்கிறவன் ஒருபோதும் வெட்கத்திற்குள்ளாவது இல்லை” [*ஏசா. 28:16] என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
விசுவாசிக்கிற உங்களுக்கோ, இந்தக் கல் உயர்மதிப்புடையது. ஆனால் விசுவாசிக்காதவர்களுக்கோ, “கட்டிடம் கட்டுகிறவர்களால் புறக்கணிக்கப்பட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.” [†சங். 118:22]
இது, “மனிதர்களை இடறச்செய்யும், அவர்களை வீழ்த்தும் கற்பாறையாகவும் இருக்கிறது.” [‡ஏசா. 8:14] அவர்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படியாததினாலேயே இடறுகிறார்கள். அப்படி இடறி விழுவதற்கென்றே அவர்கள் நியமிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.
முன்பு நீங்கள் ஒரு மக்களாக மதிக்கப்படவில்லை. ஆனால் இப்பொழுதோ நீங்கள் இறைவனுடைய மக்களாய் இருக்கிறீர்கள்; முன்பு நீங்கள் இறைவனுடைய இரக்கத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ நீங்கள் அவருடைய இரக்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.
பிரியமான நண்பர்களே, இந்த உலகத்தில் அந்நியரும் பிறநாட்டவருமாய் இருக்கிற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்கள் ஆத்துமாவுக்கு எதிராகப் போரிடுகின்றன.
இறைவனை அறியாத மக்கள் மத்தியில் நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழுங்கள்; அப்பொழுது அவர்கள் உங்களைத் தீமை செய்கிறவர்கள் என்று குற்றம் சாட்டினாலும் அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, இறைவன் நம்மைச் சந்திக்கும் நாளில், இறைவனை மகிமைப்படுத்துவார்கள்.
ஆனால் நீங்கள் தவறு செய்வதற்காக சிட்சிக்கப்படுகிறபோது அதைச் சகித்தால், அதனால் உங்களுக்கு என்ன பாராட்டு ஏற்படமுடியும்? ஆனால் நீங்கள் நன்மை செய்வதற்காக வேதனை அனுபவிக்கிறபோது, அதைச் சகித்துக்கொண்டால், அது இறைவனுக்கு முன்பாக பாராட்டுக்கு உரியதாய் இருக்கும்.
இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில் கிறிஸ்து உங்களுக்காக பாடுகளை அனுபவித்து, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நடக்கவேண்டுமென்று, உங்களுக்கான ஒரு முன்மாதிரியை விட்டுச்சென்றுள்ளார்.
அவர்கள் அவரை ஏளனம் செய்தபோதும், அவர் பழிவாங்கவில்லை; அவர் வேதனைகளை அனுபவித்தபோது, அவர் பயமுறுத்தவில்லை. அவரோ நீதியாய் நியாயத்தீர்ப்புச் செய்கிற இறைவனுக்கே தம்மை ஒப்புக்கொடுத்தார்.
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்கு வாழும்படி, அவர்தாமே தமது உடலில் நமது பாவங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சிலுவை மரத்தின்மேல் சுமந்தார். “அவருடைய காயங்களால் நீங்கள் சுகமடைந்திருக்கிறீர்கள்.”
ஏனெனில், “நீங்கள் செம்மறியாடுகளைப்போல் வழிவிலகிச் சென்று கொண்டிருந்தீர்கள்.” [*ஏசா. 53:4,5,6 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)] ஆனால் இப்பொழுதோ, உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பரும், மேற்பார்வையாளருமாக இருக்கிற கிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.