பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: “உம்முடைய சர்வாங்கதகனபலி அருகில் நில்லும், நான் போய்வருகிறேன்; யெகோவா வந்து என்னைச் சந்திப்பதாக இருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான்.
தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: “நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்செய்து, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன்” என்றான்.
அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும்” என்று சொன்னான்.
“யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என்னுடைய முடிவு அவனுடைய முடிவுபோல் இருப்பதாக” என்றான்.
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “நீர் எனக்கு என்ன செய்தீர்; என்னுடைய எதிரிகளைச் சபிக்கும்படி உம்மை அழைத்து வந்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்” என்றான்.
பின்பு பாலாக் அவனை நோக்கி: “நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடுகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லோரையும் பாரக்காமல், அவர்களுடைய கடைசி முகாமை மட்டும் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்” என்று சொல்லி,
அவனைப் பிஸ்காவின் உச்சியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: “யெகோவா என்ன சொன்னார்” என்று கேட்டான்.
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா? அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா?
அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களோடு இருக்கிறார்; ராஜாவின் வெற்றியின் கெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.
அந்த மக்கள் கொடிய சிங்கம்போல எழும்பும், இளம்சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைச் சாப்பிட்டு, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை படுத்துக்கொள்வதில்லை” என்றான்.
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கே இருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாக இருக்கும்” என்று சொல்லி,
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்செய்யும்” என்றான்.