English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Luke Chapters

Luke 7 Verses

1 இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
2 அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான்.
3 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான்.
4 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான்.
5 அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
6 அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை;
7 உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான்.
8 நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
9 இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள்.
11 மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள்.
12 அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள்.
13 இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி,
14 அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
15 மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார்.
16 எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
17 இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது.
18 இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து,
19 நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
20 அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள்.
21 அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார்.
22 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
23 என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
24 யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ?
25 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
26 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27 இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான்.
28 பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
29 யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள்.
30 ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
31 மறுபடியும் இயேசு சொன்னது என்னவென்றால்: இந்த வம்சத்தை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்?
32 சந்தைகளில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காக புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறைசொல்லுகிற குழந்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
33 யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சைரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
34 மனிதகுமாரன் சாப்பிட வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, சாப்பாட்டுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
35 ஆனாலும் ஞானமானது அதின் குழந்தைகளால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும் என்றார்.
36 பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்.
37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு பெண் அவர் பரிசேயன் வீட்டிலே உண்பதை அறிந்து, ஒரு பாத்திரத்தில் பரிமளதைலம் கொண்டுவந்து,
38 அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
39 அவரை அழைத்த பரிசேயன் அதை பார்த்தபோது, இவர் தீர்க்கதரிசியாக இருந்தால் தம்மைத் தொடுகிற பெண் எப்படிப்பட்டவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாக இருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
40 இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
41 அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
42 வாங்கிய கடனை திரும்பக்கொடுக்க அவர்களுக்கு முடியாததால், இருவருடைய கடன்களையும் மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாக இருப்பான்? அதைச் சொல் என்றார்.
43 சீமோன் மறுமொழியாக: எவனுக்கு அதிகமாக மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாக இருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாக நினைத்தாய் என்று சொல்லி,
44 பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனை நோக்கி: இந்தப் பெண்ணைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
45 நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள்.
46 நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
47 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாக அன்பு செலுத்துவான் என்று சொல்லி;
48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
49 அப்பொழுது அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
50 இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.
×

Alert

×